பாடம் - 3
 
CO1133  பாரதிதாசன் கண்ட பெண்ணுலகம்
 

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
 

E

பாரதிதாசன் கண்ட பெண் அறிவார்ந்தவளாகவும், சிந்தனைத்திறம் கொண்டவளாகவும் விளங்குவதை இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது. பெண், அடிமை இல்லை என்பதையும் அவள் உரிமை பெற வேண்டியவள் என்பதையும் உணர்த்துகின்றது. வாள் ஏந்திப் போரிடவும் அவள் தக்கவளே என்பதைக் காட்டுகின்றது. ஆணுக்கு அறிவு ஊட்டுகின்றவளாக அவள் அமைவதைக் கூறுகின்றது.

பழங்காலப்பெண் வீட்டுப் படியைத் தாண்டக் கூடாதவள். ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற கோட்பாட்டைக் கொண்டவள். கல்வி அறிவோ பகுத்தறிவுச் சிந்தனையோ தேவை இல்லை என்று இருந்தவள். திருமணம் என்பது விதி என்றும் அந்தக் கட்டிலிருந்து விடுவித்துக் கொள்வது கொடிய தீவினை என்றும் கருதியவள். அவள் கைம்பெண் ஆகிவிட்டபின் அவள் ‘சகுனத்தடை’யாகவும் ‘அமங்கலப்பொருள்’ ஆகவும் கருதப்பெறுவாள். இத்தனை விலங்கு (தடை) களையும் தகர்க்கும் முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இறங்குகிறார். புதுமைப்பெண், புரட்சிப்பெண் அவரால் படைக்கப்படுகிறாள். அவள் கல்வி அறிவு வாய்ந்தவள்; பகுத்தறிவு உடையவள்; ஆணோடு சமமாக வாழ முடிந்தவள்; மறுமணம் செய்து கொள்பவள் என்று அவள் விலங்குகள் அனைத்தும் அவரால் உடைத்தெறியப்படுகின்றன. இவை இந்தப் பாடத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
 

  • காலந்தோறும் பெண் சமுதாயத்தில் பெற்றிருந்த இழிநிலையை அறியலாம்.

  • பெண் பாரதிதாசனால் எவ்வாறு உயர்த்தப் பெறுகின்றாள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

  • புதிய உலகில் பெண் எத்தகைய பணிகளை ஆற்றுவாள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • காதல், குடும்ப வாழ்வு ஆகியவற்றில் பெண் தலைமையேற்கும் நிலைக்கு உரியவள் என்பதைக் கவிஞர் படைப்புகள் வழியாகப் புரிந்து கொள்ளலாம். 

  • வையத்தை இயக்கும் மாபெரும் ஆற்றலாகப் பெண் எதிர்காலத்தில் உருப்பெறுவாள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.