5.1 குடும்பம்
 

E

ஒரு நாட்டின் வளர்ச்சி குடும்ப வளர்ச்சியில் தான் அடங்கியிருக்கிறது. திட்டமிட்டுச் சிறப்பாக அமையும் குடும்பங்கள் ஒரு நாட்டில் இருந்தால் அந்த நாட்டின் வளர்ச்சியும் திட்டமிட்டபடி அமையும். தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தைகள் என்று அமைந்துள்ள கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒருவரைப் பற்றி இன்னொருவர் புரிந்துகொண்டு வாழ்தல் மிகவும் அவசியம் ஆகிறது. இப்படிப்பட்ட புரிதல் கொண்ட குடும்பம் ஒன்றைப் பாரதிதாசன் குடும்ப விளக்கில் படைத்துக் காட்டியுள்ளார்.
 

5.1.1 நல்ல குடும்பம்
 

‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று குடும்ப விளக்கின் முன்னுரையில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளைக் கொண்ட பல துறைகள் இருக்கும். ஒவ்வொரு துறையும் அந்தப் பாடம் தொடர்பான அறிவுக் கருவூலமாக விளங்கி மாணவர்களுக்குப் பயன் தரும். அது போலவே நல்ல குடும்பத்திலும் தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தைகள் என்று பலர் இருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால் அன்பும் அறிவும் அந்த வீட்டில் நிலைத்து இருக்கும். குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் அந்தக் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும் என்கிறார் பாரதிதாசன்.
 

நான் நல்லவன்; என் மனைவி நனி நல்லள்;
நாங்கள் என்றும் மனநலம் உடையோம்; ஆதலினால் அன்றோ,
எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட
பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர் நனிநல்லர்
பொலியும் இனியும் குடும்பம்

(குடும்ப விளக்கு “முதியோர் காதல்”)
 

(பொன்னுறவைப் பெற்றோர் = மகளின் கணவனையும் மகனின் மனைவியையும் பெற்றவர்கள்)

என்னும் வரிகளில் பாரதிதாசன் நல்ல குடும்பத்தைக் காட்டியதுடன் எதிர்காலத்திலும் அக்குடும்பம் சிறந்து விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.
 

5.1.2 குடும்பத்தில் பெண்
 

குடும்பத்தில் பெண் முதன்மையான இடத்தைப் பெறுகிறாள். காலை முதல் இரவு வரை பெண் தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதியே உழைக்கிறாள். இந்தக் கருத்தை நன்கு உணர்ந்த பாரதிதாசன் குடும்ப விளக்கின் முதல் பகுதியாகிய ‘ஒருநாள் நிகழ்ச்சி’யில் பெண்ணின் கடமைகளை வரிசைப்படுத்திப் பாடியுள்ளார்.
 

இல்லதுஎன் -இல்லவள் மாண்பானால்! உள்ளதுஎன் -
இல்லவள் மாணாக் கடை

(குறள்: 53)
 

(இல்லவள் = குடும்பத்தலைவி, மாண்பு = நற்பண்பு, மாணாக்கடை = நற்பண்பு இல்லை என்றால்)

என்னும் திருக்குறளில் நல்ல பண்பு கொண்ட ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் இல்லாதது எதுவும் இல்லை; நல்ல பண்பு இல்லாத ஒரு பெண், ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் எல்லாச் செல்வமும் இருந்தாலும் அவற்றால் எந்தப் பயனும் இருக்காது என்று திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் காட்டிய நல்ல பெண்மணிக்கு இலக்கணமாகக் குடும்ப விளக்கின் தலைவி அமைந்துள்ளாள். எல்லாக் கடமைகளையும் தலைவி முறையாகச் செய்து வருவதால் அந்த வீட்டில் எல்லோரும் இன்பமாக வாழ்வதைப் பாரதிதாசன் காட்டியுள்ளார்.