5.4 மாமனார் மாமியார்  
 

E

தலைவியின் மாமனாரும் மாமியாரும் அவளது நாத்தியார் வீட்டுக்குப் போயிருந்தார்கள். அவர்கள் இன்று வருவதாக இருந்ததே என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது. எனவே எதிர்பார்த்து இருந்தாள்.

தூரத்தில் மாமனாரும் மாமியாரும் வருவதைக் கண்டாள்; ஓடிச் சென்று வரவேற்றாள்.

“எனது நாத்தியார், தங்கள் பேரர் எல்லோரும் நலமா?” என்று அவர்களைப் பார்த்து கேட்டாள்.

மாமனாரும் மாமியாரும் குளிப்பதற்கு வெந்நீரை அண்டாவில் சூடாக்கினாள். பிறகு அவர்களைக் குளிக்க அழைத்தாள். குளித்து முடித்த அவர்களுக்கு உணவைப் பரிமாறினாள். உண்டு முடித்த அவர்கள் ஓய்வு எடுப்பதற்கு மெத்தை விரித்தாள் அந்தத் தலைவி.

குடும்பக் கடமைகளுள் ஒன்றுதான் ஒரு பெண் தனது மாமனார் மாமியாரைக் கவனித்தல். அந்த வேலையையும் பொறுப்பாகத் தலைவி செய்வதைப் பாவேந்தர் தெரிவித்துள்ளார்.
 

5.4.1 மாமனார், மாமியாருக்கு உதவி
 

படுக்கையில் படுத்திருந்த மாமனாரால் எழுந்திருக்க இயலவில்லை. ‘சற்றுத் தூக்கி விடம்மா!’ என்றார் அவர். அவரைத் தூக்கி உட்கார வைத்தாள் தலைவி. நடந்து வந்த களைப்பால் அவரது கால்கள் வீங்கியிருந்தன. அதைக் கண்ட தலைவி, அந்தக் கால்களில் மருந்து தடவினாள். அவரது நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்தாள். காய்ச்சல் வரும் அறிகுறியைக் கண்டாள். அவருக்கு மருந்து கொடுத்தாள்.

பயணம் செய்த களைப்பால் படுத்திருந்த மாமியார் தலைவலியால் வருந்தினார். உடனே மாமியாரிடம் போய் அவரது நெற்றியில் பற்றுப் போட்டாள் தலைவி. தலைவலி நீங்கி நிம்மதி அடைந்தார் மாமியார்.