1.1
பாவேந்தரும் தமிழும்
|
E |
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
|
(சங்கநாதம்:
1-2)
|
எனும் முழக்கம், தமிழக மேடைகளிலும், தமிழ் உணர்வு கொண்ட ஏடுகளிலும்,
தமிழர்களிடையேயும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஓர் எழுச்சிக்குரல்;
தமிழ் உணர்ச்சியின் வெளிப்பாடு. இந்த உணர்ச்சியின் பிறப்பிடம் பாவேந்தர்
பாரதிதாசனின் உள்ளம். பாரதிதாசனின் இந்த உள்ள உணர்ச்சியை அவரது பாடல்களில்
பெரும் அளவில் பார்க்கலாம்.
தமிழ் மீதுகொண்ட
பற்றால், அதைத் தன் உயிரினும் மேலாக நேசித்தமையால், தமிழை என் உயிரே
என்று அழைத்து மகிழ்ந்தார். அதன் இனிமையின் சிறப்பினையும் பல பாடல்கள்
மூலம் எடுத்துக்காட்டுகின்றார். விருப்பத்துக்குரிய பொருளை, தேன்,
பால், என்றும் கண், உயிர் என்றும் கூறும் மரபைக் கவிஞர்களிடம் காணலாம்.
அடியார் பலர் இறைவனை இவ்வாறு பாடியுள்ளனர். பாரதிதாசன் தமிழ் மொழியைத்
தேன், பால், கண், உயிர் என்று கருதிப் பாடியுள்ளார். மொழியை இவ்வாறு
வருணித்துப் பாடும்
மரபும் புதியது. இம்மரபுக்கு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் பாரதிதாசன்.
|
1.1.1
தமிழ் உயிர் போன்றது
|
தமிழ் மொழி மீது பாரதிதாசனுக்கு
அளவு கடந்த பற்று உண்டு. இதனை அவரது பாடல்களில் பரவலாகக்
காணலாம். வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம், அவர் தமது தமிழ்ப்
பற்றை வெளியிடுவார். தமிழைத் தன் உயிரினும் மேலாக மதித்தார், போற்றினார்.
எனவே,
|
செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !
செயலினை மூச்சினை உனக்களித்தேன்
|
(பாரதிதாசன்
இசையமுது, தமிழ்: 5)
|
என்று பறை சாற்றுகின்றார். இனிய தேன்போன்ற தமிழ்மொழிக்குத் தன் வாழ்வையே,
வாழ்க்கையின் செயல்பாடுகள் முழுவதையுமே அர்ப்பணித்தார். எனவே தான்,
‘செயலினை மூச்சினை உனக்களித்தேன்’ என்று கூறுகிறார்.
|
• தமிழெனும் அமிழ்தம்
|
பொதுவாக, அமிழ்தம் (அமுதம்)
என்றால் உணவு என்று பொருள். வானுலகில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவிற்கும்
அமிழ்தம் என்று பெயர். அது மிகவும் சுவை உடையது என்றும், அதை உண்பதினால்
தான், தேவர்கள் சாகா வரத்துடன் வாழ்கிறார்கள் என்றும் ஒரு நம்பிக்கை
உண்டு. நல்ல சுவையான உணவை உண்ணும் போதுகூட, "ஆகா! என்ன சுவை! என்ன
சுவை! ‘அமிழ்தம்’ போன்றல்லவா இருக்கிறது” என, தேவர்கள் உண்ணும் உணவை மனத்திற்கொண்டு, கூறுகிற மரபு உண்டு.
பாரதிதாசனுக்கோ தமிழே அமிழ்தமாகின்றது. எனவே
|
தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ்
இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
|
(இன்பத்
தமிழ்: 1-2)
|
என்று பாடுகிறார். பாரதிதாசன் இன்றும் நம்மிடையே உயிர்ப்புடன் உலவவும்,
நம் உணர்வினைத் தூண்டவும் அவர் படைப்புகள் தானே காரணம்! எனவே தமிழை
அமிழ்தம் என்றும் உயிர் என்றும் சொன்ன சொற்கள் மிகை அல்லவே!
|
• தமிழெனும் உயிர்
|
இயற்கையில் பல்வேறு வகையான
சுவைகள் இருக்கின்றன. நன்கு பழுத்த பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது.
கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை உண்டு. காய்ச்சிய
வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது.
தென்னையின் இளநீரிலும் இனிமை இருக்கிறது. அவ்வாறு ஆயின் தமிழில் என்ன
இருக்கிறது? இதோ பாரதிதாசன் கூறுவதைக் கவனியுங்கள்:
|
|
காட்சி
|
கனியிடை
ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை
ஏறிய சாறும்,
பனிமலர்
ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை
ஏறிய சுவையும்,
நனிபசு
பொழியும் பாலும் - தென்னை
நல்கிய
குளிரிள நீரும்,
இனியன
என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர்
என்பேன் கண்டீர் !
|
(பாரதிதாசன்
கவிதைகள் - முதல் தொகுதி 19.
தமிழின்இனிமை, முதல் பாடல்)
|
(கழை = கரும்பு)
என்ன நண்பர்களே!
“எனினும்”, “இருந்தாலும்” என்று பாரதிதாசன் கூறுவதின் பொருள் என்ன?
தமிழில் “இனிமையைக் காண்கிறேன் என்று சொல்ல அவர் தயங்குகிறாரா? சற்று
எண்ணிப் பாருங்கள். ‘இனிப்புடையதாயிருத்தல்’. ‘உயிர்ப்பு உடையதாயிருத்தல்’
- இவற்றுள் எது மிகுதியும் விரும்பத்தக்கது? உயிர் இல்லையேல் சுவைப்போருக்கு
இனிப்பு ஏது, நுகர்ச்சி ஏது? கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர்
- அனைத்தின் சுவையும் உயிர் என்ற ஒன்று இருந்தால் தானே நுகரமுடியும்.
தமிழ் மொழியின்பால் கவிஞர்
கொண்ட ஆழ்ந்த பற்று இதில் தெரிகிறதல்லவா!
வடலூர்
இராமலிங்க வள்ளலார் ‘தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க்
கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பருப்பும் தேனும் கலந்த கலவையை
விடச் சுவையானவன் இறைவன்’ என்றார். பாரதிதாசனுக்கு அந்த உணர்வை,
இனிமையைத் தமிழ் தந்திருக்கிறது.
“சோலையினுள்
மலர்களின் தேன் அருந்தவரும் வண்டின் ஒலியையும், புல்லாங்குழல் (Flute)
ஒலியையும், வீணையின் இசையையும், குழந்தைகளின் மழலைப் பேச்சினையும்
கேட்டு மகிழ்ந்து, அவற்றோடு மெய்மறந்து ஒன்றி இருக்கிறேன். ஆனால் அவற்றிடமிருந்து
என்னை நான் விடுவித்துக் கொள்ள இயலும். தமிழை விட்டு என்னால் பிரிய
முடியாது. ஏன் என்றால், தமிழும்
நானும் உடலும் உயிரும் போன்றவர்கள்” இதனைத்,
|
தமிழும்
நானும் மெய்யாய் உடல் உயிர்கண்டீர்
|
(பாரதிதாசன்
கவிதைகள் முதல்தொகுதி 19.
தமிழின் இனிமை, மூன்றாவது பாடல்)
|
என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழ் மொழி தமிழ்மக்களின் உயிராக
இருப்பதால், உலகிலுள்ள அனைத்தையும் வெல்லும் ஆற்றல் தமிழுக்கு உண்டு
என்று பறைசாற்றுகின்றார்.
|
தமிழ்
எங்கள் உயிர் என்பதாலே - வெல்லும்
தரமுண்டு
தமிழருக்குப் புவிமேலே
|
(பாரதிதாசன்
கவிதைகள் முதல்பகுதி 23.
எங்கள் தமிழ், வரிகள்: 9 - 10)
|
ஒவ்வொரு மனிதனும், தன் உயிரைப் பேணிப் பாதுகாப்பதற்கும், வளர்ப்பதற்கும்,
மேம்பாடு அடையச் செய்வதற்கும், எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வான்.
அதைப்போல நம் உயிர் போன்ற தமிழைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடையச்
செய்வதற்கும் நாம் எல்லாவித முயற்சிகளையும் தியாகங்களையும் செய்வதற்குத்
தயார் ஆக வேண்டும் என்று கூறுகிறார் பாரதிதாசன்.
|
1.1.2
தமிழின் இனிமை
|
ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்க்கையில் ஒவ்வொரு வகையான இன்பம் கிடைக்கும். சிலருக்குப் பொருள்
ஈட்டுதல் இன்பம் தரும். ஒரு சிலருக்கு அவர்கள் வகிக்கும் பதவி இன்பம்
நல்கும். புகழ் இன்பம் வழங்கும். ஆனால் பாரதிதாசனுக்கு எது இன்பம்
தருகிறது தெரியுமா? தாய்மொழியாம் தமிழ் இன்பம் தருகிறது. தமிழ் தரும்
இன்பத்தைத் தம் பாடல்களின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்.
தமிழுக்கு இன்னொரு பெயர்
உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? என்று வினவும் பாரதிதாசன்,
|
இன்பம்
எனப்படுதல் - தமிழ்
இன்பம்
எனத் தமிழ்நாட்டினர் எண்ணுக.
|
(முதல்
பகுதி : தமிழ் உணவு, வரிகள்: 36 - 37)
|
என்று குறிப்பிடுகிறார். எனவே, தமிழுக்கு இன்பம் என்று இன்னொரு பெயருண்டு.
தமிழ் நாட்டினரே அதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
தமிழ் என்ற உடனே, இன்பம்
தானாக வந்து கிட்ட வேண்டும். அந்த இன்பத்தை நீங்கள் நுகர வேண்டும்
என்று கூறுகிறார்.
(கிட்டுதல்
= அடைதல், கிட்ட = அடைய)
இயற்கையில்
அமைந்துள்ள பல பொருள்களை நாம் நுகரும் போது அவை நமக்கு இன்பம் தருகின்றன.
அவற்றை மனத்தில் நினைத்த உடனே, இன்ப உணர்வு ஏற்படும். அதைப்போல் தமிழைப்
பற்றி நினைத்த உடனேயே இன்ப உணர்வு வரும்.
தமிழ் இன்பம்
தருவதால், அது அமுதம் போன்றது என்று குறிப்பிடுகிறார். அமுதத்தை உண்ணும்
போது கிடைக்கும் மகிழ்ச்சி, அல்லது இன்பம், தமிழைப் படிக்கும் போது
கிடைக்கும். எனவே,
|
இனிமைத்
தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பம்
தரும்படி வாய்த்த நல் அமுது !
|
(முதல்
தொகுதி, 23. எங்கள் தமிழ் - வரிகள்: 1 - 2)
|
என்று இனிமையின் எல்லை எனக் கருதப்படும் அமுதத்தையே தமிழ் இன்பத்திற்கு
இணையாகக் கூறுகிறார் பாரதிதாசன்.
|