ஓர்
அறிவியலாளன், அல்லது விவசாயி இயற்கையைப் பார்க்கும்
பார்வையில் இருந்து ஒரு கவிஞனின் பார்வை வேறுபட்டது.
அழகான ஓர் இயற்கைக் காட்சியைப் பார்த்து மகிழ்வது
மனித
இயல்பு. ஆனால், தான் பார்த்து மகிழ்ந்த காட்சியைக் கவிஞன்,
அதோடு விட்டு விடுவதில்லை. பிறரும், அக்காட்சியைப் பார்க்க
இயலாவிட்டாலும், படித்து, மகிழவேண்டும் என்று நினைக்கிறான்.
எனவே, தான் அனுபவித்து மகிழ்ந்த காட்சியை அழகான ஒரு சொல் ஓவியமாக
நம் மனக்கண் முன்னால் கொண்டு
நிறுத்துகிறான். பாரதிதாசனின் கவிதைகள் இதற்குச்
சிறந்த
எடுத்துக்காட்டு.
கவிஞன்
என்பவன், இயற்கையைக் கண்டு மகிழ்ந்து அந்த
மகிழ்ச்சியை மட்டும் எடுத்துக்காட்டுவது ஒரு நிலை. இயற்கைக்
காட்சி ஒன்றினைப் பார்க்கும் பொழுது ஏற்படும் உணர்வுகளை
(feelings) வெளிப்படுத்துவது இன்னொரு நிலை. அது வளர்ந்த
நிலை. பாரதிதாசன் இந்த வளர்ந்த நிலைக் கவிதைகளையே
படைத்துள்ளார். தாம் கண்டு மகிழ்ந்த இயற்கைக் காட்சிகளை
வாழ்க்கையின் மரபுகளோடும், அன்றாட
நடைமுறை
நிகழ்ச்சிகளோடும் இணைத்தும் பிணைத்தும் காட்டியுள்ளார்
பாரதிதாசன். மேலும் பழைய மரபுக் கவிஞர்களிலிருந்து வேறுபட்ட
நிலையில் பல புதிய விளக்கங்களையும், அணுகுமுறைகளையும்
வெளிப்படுத்தியுள்ளார்.
|