3.6 பாரதிதாசனின் காப்பியங்களில் உவமை
 

E

பாரதிதாசன் தமது படைப்புகளில் உவமைகள் பலவற்றைப் பயன்படுத்தியுள்ளார். அந்த உவமைகள் அவர் வாழ்ந்த காலத்தை வெளிப்படுத்துவதை நாம் காணமுடிகிறது.
 

3.6.1 நின்ற சிலை
 

சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் குப்பன் ஆடாமல் அசையாமல் தெற்கே வஞ்சி வரும் வழியைப் பார்த்து நின்றான். அதைப் பாரதிதாசன்,

 

செப்புச்சிலை போலே தென்திசையைப் பார்த்தபடி
ஆடாது அசையாமல் வாடி நின்றான்

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 14-15)
 

என்று குறிப்பிட்டுள்ளார். சிலைக்கு அசைகின்ற தன்மை கிடையாது. அதைப் போல் குப்பனும் அசையாமல் நின்றான் என்பதை இதன் மூலம் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
 

3.6.2 காதல் வேகம்
 

காதலி சொல்கின்ற வேலையை உடனே செய்து முடிக்கும் இயல்பு கொண்டவர்கள் இளைஞர்கள். அதைப் பாரதிதாசன்.
 

கிட்டரிய காதல் கிழத்தி இடும் வேலை
விட்டு எறிந்த கல்லைப்போல் மேல் ஏறிப் பாயாதோ?

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 98-99)
 

(கிட்டரிய = கிடைத்தற்கு அருமையான)
 

என்று பாடியுள்ளார். இங்கே பாரதிதாசன் கூறியுள்ள உவமையின் நயத்தைப் பாருங்கள்.  மேல்நோக்கி எறிந்த கல் விரைந்து பாய்வதைப் போல் காதலியின் கட்டளையை விரைந்து நிறைவேற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

3.6.3 கண்ணாடிப் பாத்திரம்
 

சஞ்சீவி மலையை அனுமன் தரையில் வைத்ததைக் குப்பன் தனது காதலி வஞ்சியிடம் சொல்கிறான்.
 

மலையைக் கடுகளவும் ஆடாமல்
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பது போல்

(சஞ்சீவி பர்வதத்தின் சாரல், வரி 319-320)
 

வைத்ததாகக் கூறியுள்ளார் பாரதிதாசன்.

கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைக்கும் போது எவ்வளவு மெதுவாக வைப்போமோ அதைப் போல் சஞ்சீவி மலையை அனுமன் தரையில் வைத்தான் என்று பாடியுள்ள உவமை நயத்தைப் பார்த்தீர்களா? புதிய உவமை அல்லவா இது?
 

3.6.4 நிலவு தரும் இன்பம்
 

நிலவைக் காணுகின்ற இன்பம் எத்தகையது என்பதைப் பாரதிதாசன் தமது புரட்சிக்கவி என்னும் காப்பியத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினைத் துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ?

(பாரதிதாசன் கவிதைகள் ப.21)
 

(பானை ஆரக் கனத்திருந்த = பானை முழுவதும் நிறைந்திருந்த)
 

காட்சி
 

என்னும் அடிகளில் நிலவைப் பாரதிதாசன் சமுதாயச் சிந்தனையுடன் பார்த்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பசியோடு இருக்கின்ற ஏழை, தனது பசியைப் போக்குவதற்குச் சிறிது கூழ் கிடைக்காதா என்று ஏங்கி இருக்கும் போது பானை நிறைய வெண்சோற்றைக் கண்டால் எவ்வாறு மகிழ்வானோ அதைப் போன்ற இன்பம் வெண்ணிலவைக் காணும்போது இருக்கிறது என்று பாடியுள்ளார்.
 

3.6.5 பனையில் விழுந்த இடி
 

பாண்டியன் பரிசு என்னும் காப்பியத்தில் வேழநாட்டுப் படைகளும் கதிர்நாட்டுப் படைகளும் மோதின. இருதிறப்படை வீரர்களும் இறந்து விழுந்தார்கள். அதைப் பாரதிதாசன்,
 

பனைமரங்கள் இடி வீழக் கிழிந்து வீழும்
பான்மை போல் இரு திறத்து மறவர் வீழ்ந்தார்

(பாண்டியன் பரிசு, இயல்-5)
 

என்று பாடியுள்ளார், இடிவிழுந்த பனைமரம் இருகூறாகக் கிழிந்து விழுவதைப் போல் படைவீரர்கள் விழுந்தார்கள் என்று பாரதிதாசன் இந்த வரிகளில் உவமை நயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

3.6.6 சூழ்ந்த படை
 

வேழ நாட்டுப் படைகள், கதிர்நாட்டு அரண்மனைக்குள் சென்று பரவியதை,
 

விரிநீர் போய் மடைதோறும் பாய்வதைப் போல்
சூழலுற்றார்

(பாண்டியன் பரிசு, இயல்-9)
 

3.6.7 ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருள்
 

‘எதிர் பாராத முத்தம்’ என்னும் காப்பியத்தில் இருள் எப்படி இருந்தது என்பதைப் பாரதிதாசன்,
 

நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம் போல்
ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருள்

(எதிர்பாராத முத்தம், இயல் : 6)
 

என்று பாடியுள்ளார். நீலம் கரைத்த குடத்தின் உட்பகுதி போல் இருள் இருந்தது என்று தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பொருளை உவமித்துள்ளதைக் காணமுடிகிறது.