குழலும் யாழும் முரசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதைப் பழந்தமிழ் இலக்கியங்கள்
தெரிவிக்கின்றன.
இசைத்தமிழ்
பழங்காலத்தில் சிறந்து விளங்கியதால்தான்
‘இசைத்தமிழ்’ என்பதை முத்தமிழில் ஒன்றாகச் சேர்த்துள்ளோம்.
பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும்.
பத்துப்பாட்டு நூல்களில் முல்லைப்பாட்டும் குறிஞ்சிப்பாட்டும்
‘பாட்டு’ என்னும் சொல்லாலேயே குறிக்கப்படுகின்றன. அனைத்தும் சேர்ந்தும்
பாட்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டுத்தொகை
நூல்களில் பரிபாடல் என்பதும் பாடல் என்ற
சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. பரிபாடலில் உள்ள பாடல்கள்
ஒவ்வொன்றுக்கும் இசையும் பண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பதிற்றுப்
பத்து நூலில் உள்ள பாடல்களுக்கும் வண்ணம், தூக்கு
என்னும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. வண்ணம்
என்பது
பண்ணையும் தூக்கு என்பது தாளத்தையும் குறித்துள்ளன.
மேலும்
ஆசிரியப்பாவிற்கு ‘அகவல் ஓசை’
என்றும்
வெண்பாவிற்குச் ‘செப்பல் ஓசை’ என்றும் வஞ்சிப்பாவிற்குத்
‘தூங்கல் ஓசை’ என்றும் கலிப்பாவிற்குத் ‘துள்ளல் ஓசை’ என்றும்
தமிழர்கள் வகுத்துள்ளனர்.
இனிய ஓசை உடைமை
நூலுக்கு அழகு என்பதாக நன்னூல்
தெரிவித்துள்ளது.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழனின் வாழ்க்கையைத்
தெரிவிக்கும் சிலப்பதிகாரத்தில் முதல் பகுதிக்குப் பெயரே ‘மங்கல
வாழ்த்துப் பாடல்’ என்பது ஆகும். பாடல் அந்தக் காலத்திலேயே
சிறப்புற விளங்கியிருந்ததற்கு இது ஓர் எடுத்துக்காட்டு
ஆகும்.
மேலும் கானல் வரி, வேட்டுவ வரி, ஊர்சூழ்வரி என்னும் பகுதிகள்
வரிப்பாடல்களை உணர்த்துகின்றன.
இவ்வாறு இசைப்பாடல்களைச்
கொண்ட மொழி தமிழ்மொழி. இந்தத்
தமிழ்மொழியில்
இசைப்பாடல்கள் இல்லை என்று கூறிய பிற்கால இசை வல்லுநர்கள்
பிறமொழிப் பாடல்களைப் பாடினார்கள்.
இக்குறையைப் போக்க
எண்ணிய பாரதிதாசன் பல தமிழ்
இசைப்பாடல்களைப்
பாடியுள்ளார். பாரதிதாசனின் இசைப் பாடல்கள் இசையமுது
என்னும் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. எஞ்சிய
இசைப் பாடல்கள் தேனருவி என்னும் நூலாக வந்துள்ளன. இவை
தவிரவும் காப்பியங்களின் இடையிலும் நாடகங்களின் இடையிலும்
பல இசைப் பாடல்களைப் பாரதிதாசன் படைத்துள்ளார்.
|