4.4 தமிழ் உணர்வு
 

E

பாடகர்கள் மேடை ஏறிப் பாட வேண்டும் என்பதற்காகவே தமிழ் இசைப் பாடல்களைப் பாரதிதாசன் பாடினார். அந்தத் தமிழ்ப் பாடல்களின் வழியாகவும் பாரதிதாசன் தமிழ் உணர்வை ஊட்டியுள்ளார். தமிழைத் தாயாக உருவகம் செய்து பாவேந்தர் பாடியுள்ள பாடலைப் பாருங்கள்.


வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?
செந்தமிழே! உயிரே! நறுந்தேனே
செயலினை மூச்சினை உனக்களித்தேனே
நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போல
செழித்தஎன் தமிழே ஒளியே வாழ
ி

(இசையமுது - தமிழ்)


என்று பாரதிதாசன் தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடியுள்ளார். இப்பாடலில் தமிழின் பழைமைச் சிறப்பைப் பாரதிதாசன் எடுத்து உரைத்துள்ளார். மனிதர்கள் அறிவுடன் கூடி வாழத் தொடங்கிய காலத்திற்கு முன்பே
தமிழ் மொழி தோன்றியதை உணர்த்தியுள்ளார். மேலும் தமிழ் மொழி அந்தப் பழங்காலத்திலேயே செழித்து விளங்கியதை ஓர் அழகிய உவமை மூலம் விளக்கியுள்ளார் பாருங்கள். தண்ணீரில் செந்தாமரை பூத்து நிறைந்தது போல் தமிழ் மொழி செழித்து வளர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

4.4.1 தமிழ்ச் செல்வம்
 

மாடு, மனை, வீடு வாசல் என்று பலவற்றை நாம் செல்வமாகக் கருதுகிறோம். ஆனால், பாரதிதாசன் தமிழையே செல்வமாகக் கருதுகிறார். பிறரையும் அவ்வாறு கருதுமாறு செய்துள்ளார்.
 

செல்வம் என்று போற்று
செந்தமிழ்ச் சொல்லை - நீ

(செல்வம் என்று. . . )


அல்லலும் நீங்கும் பகையாவும் நீங்கும்

(செல்வம் என்று. . . )


வெல்வது வேலன்று; செந்தமிழ் ஒன்றே
நல்லொற்றுமை சேர்க்கும், நன்னெறி சேர்க்கும்
வல்லமை சேர்க்கும் வாழ்வை உண்டாக்கும்.
வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும்?
தமிழர்க்கு மானம் தனி உயிர்! யாவும்
தமிழே ஆதலால் வாழ்த்துவோம் நாளும்!

(செல்வம் என்று . . . )
(தேனருவி - பாடல் 3)
 

இந்தப் பாடலில் தமிழர்க்கு மானமாகத் தமிழைப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். மானத்திற்கு இணையாகக் கருதும் உயிரையும் அவர் தமிழ் என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தமிழர்கள் உயர்வாகக் கருதும் மானத்தோடும் உயிரோடும் பாரதிதாசன் தமிழை இணைத்திருப்பதை நாம் காண முடிகிறது.


4.4.2 தமிழ்த் தொண்டு
 

தமிழ் மொழி உயர்ந்த நிலை அடைவதற்குத் தமிழர்கள் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் பாரதிதாசன். தமிழ்த் தொண்டு செய்வது அமுதம் பெறுவது போல் இன்பமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தமிழ் என்னும் மணிவிளக் கேற்றடா நாட்டில்!
தமிழரின் நெஞ்சமாம் அழகான வீட்டில்!
அமுதென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை
அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியை

(தமிழ்)


தமிழென்ற உணவினைக் குவியடா யார்க்கும்
தமிழருக்கு இங்குள குறையெலாம் தீர்க்கும்
சமமாக ஆற்றடா தமிழூழியத்தைச்
சகலர்க்கும் ஆற்றடா தமிழூழியத்தை

(தமிழ்)


தமிழென்ற வன்மையைக் கூட்டடா தோளில்
தமிழர்க்கு நலமெலாம் வரும் ஒரே நாளில்
அமைவினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே
அன்பினால் புரியடா செந்தமிழ்த் தொண்டே

(தமிழ்)


தமிழ் என்னும் உணர்வினைச் சேரடா எங்கும்
தமிழரின் ஆட்சியே உலகெலாம் தங்கும்
இமையேனும் ஓயாது தமிழுக்குழைப்பாய்
இன்பமே அதுவென்று தமிழுக்குழைப்பாய்

(தமிழ்)
(இசையமுது-2, ‘தமிழ்த் தொண்டு’)

என்று தமிழ் உணர்வை எல்லாரிடமும் சேர்ப்பதற்காகப் பாரதிதாசன் பாடியுள்ளார். இவ்வாறு தமிழ் உணர்வை அனைவரிடமும் சேர்த்தால் தமிழின் ஆட்சியும் தமிழரின் ஆட்சியும் உலகில் பரவும் என்று தமிழ் உணர்வை ஊட்டுவதால் ஏற்படும் பயனையும் பாரதிதாசன் தெரிவிள்ளார்.

தமிழ் மொழியை உயிரோடும் உணர்வோடும் கலந்து பார்த்த பாரதிதாசன் அதை எவ்வாறு எல்லாம் அழைக்கலாம் என்று பாடியுள்ளார் பாருங்கள்.
 



தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

(தமிழுக்கும்)


தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணம் என்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்

(தமிழுக்கும்)


தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

(தமிழுக்கும்)


தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

(தமிழுக்கும்)
(பாரதிதாசன் கவிதைகள், 20, இன்பத் தமிழ்)


(நிருமித்த = உருவாக்கப்பட்ட)