5.8 பாவேந்தரின் நாடக நடை  
 

E

நாடகங்கள் உரையாடலாலும் உணர்வூட்டும் நடிப்பாலும் சிறப்பைப்பெறும். நடிப்புக்கு அடிப்படை, உணர்வை உள்ளடக்கிய உரையாடல்கள் ஆகும். எனவே நாடகம், உரையாடல் திறத்தால் சிறப்பைப் பெறும் எனலாம்.
 

5.8.1 சிறுசிறு தொடர்கள்
 

நாடக உரையாடல்கள் சிறு தொடர்களைக் கொண்டிருந்தால் காட்சியில் விறுவிறுப்புக் கூடும். பாவேந்தர் பாரதிதாசனின் ‘கழைக்கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் வரும் உரையாடல் சிறு தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம்.
 

வள்ளி : இதென்ன! எனக்கு அச்சமாயிருக்கிறது!
பொன்னி : பேயா இருக்குமோ?
முள்ளி : காணோமே ஒன்றையும்!
வள்ளி : பேய் கண்ணுக்கா தெரியும்?
முள்ளி : பின் எதற்குத் தெரியும்?
வள்ளி : அதன் ஓசைதான் காதில் கேட்கும்
முள்ளி : நம் குரல் அதற்குக் கேட்குமா?
வள்ளி : கேட்கும்
முள்ளி : அப்படியானால் கூப்பிடு. எங்கே முத்துநகை என்று கேட்டுப்பார்க்கலாம்.
பொன்னி : நீ தான் கூப்பிட்டுக் கேள். நாங்கள் வீட்டுக்கு ஓடிவிடுகிறோம்.
முள்ளி : பேயே!

(கழைக்கூத்தியின் காதல், காட்சி : 3)
 

இவ்வாறு அந்த உரையாடல் தொடர்ந்து செல்கிறது. பேய் என்னும் அச்சத்தால் இருப்பவர்களால் பெரிய தொடர்களைப் பேச இயலாது. அதற்கு ஏற்பவே பாரதிதாசன் இங்கே சிறு தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
 

5.8.2 உரைநடையில் உணர்வு
 

பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்னும் எண்ணம் கொண்ட மன்னனின் மனத்தை மாற்றுவது போல் ஒரு காட்சி ‘கழைக் கூத்தியின் காதல்’ என்னும் நாடகத்தில் இடம் பெற்றுள்ளது. முத்துநகை என்பவள் ஆண்டியப்பன் என்னும் ஆண் வேடத்தில் அரசனிடம் உரையாடுகிறாள்.
 

அரசன்

:

இப்படி என்னைக் கட்டிக் கொண்டு வந்தவர் யார் ஐயா?

ஆண்டியப்பன்

:

சிவபெருமான்

அரசன்

:

கடவுளுக்குப் பேர் உண்டா? செயல் உண்டா? ஆட்களை அனுப்பி என்னைக் கட்டி இங்குக் கொண்டு வந்தது கடவுளா?

ஆண்டி

:

கடவுள் வராது. நீங்கள் முற்பிறப்பில் செய்த தீவினையின் செயல்.

அரசன்

:

முற்பிறப்பு உண்டா இல்லையா என்பது முடிவு பெறாத செய்தி. தீவினைத் தொடர்பு நம்பத்தகாத ஒன்று.

ஆண்டி

:

நீங்கள் முற்பிறப்பில் செய்த வினைக்கு ஈடாக இன்ன பிறப்பில் இன்ன நாளில் இன்னபடி நடக்கும் என்றும் உங்கள் தலையில் எழுதி வைத்திருக்கும். ஏன் இதை மறுக்கிறீர்கள்?

அரசர்

:

இவை எல்லாம் ஆரியர் மூடக் கொள்கைகள்

ஆண்டி

:

உலகில் மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைக்குக் காரணம் என்ன?

அரசன்

:

அதுவா. . . . ?

ஆண்டி

:

கேள்வி விளங்கவில்லையா? நீங்கள் அரசர், நான் அடிமை. நீங்கள் செல்வர், நான் ஏழை. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று தான் கேட்கிறேன்.

அரசன்

:

அதுவா . . . ?

ஆண்டி

:

நீங்கள் மேலான சாதி. என் போன்றோர் தாழ் சாதி. காரணம்?

அரசன்

:

காரணம் என்ன என்று கேட்கிறாய். அதுவா . . . ?

ஆண்டி

:

வள்ளலே உள்ளத்தை மறைக்காதீர்கள்!

அரசன்

:

உலக மக்களின் ஏற்றத் தாழ்வு நிலைமைகளுக்குக் காரணம் அவரவர்களின் அறிவு ஆற்றல்களே.

ஆண்டி

:

தெளிவான கருத்து. சாதியில்லை அல்லவா?

அரசன்

:

இல்லை

ஆண்டி

:

மக்கள் யாவரும் நிகரா?

அரசன்

:

ஒரே நிகர்

(கழைக்கூத்தியின் காதல், காட்சி : 15)

 

மேற்காணும் உரையாடலில் பாரதிதாசன் தமது கொள்கையான ‘சாதி இல்லை, மக்களில் உயர்வு தாழ்வு இல்லை’ என்னும் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதை நாம் காண முடிகிறது.