5.9 தொகுப்புரை
 

தமிழ் மொழியில் நாடக நூல்கள் பல தோன்றாத காலத்தில் பல நாடகங்களைப் பாரதிதாசன் படைத்துள்ளார். அந்த நாடகங்கள் வழியாகத் தமது கொள்கைகளான பகுத்தறிவு, சாதி இல்லை முதலியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகத்தின் வாயிலாகத் தமிழர்களின் நேர்மையான வீரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரணியன் என்னும் மனிதனைப் பற்றிப் புராணம் தெரிவிக்கும் கருத்துக்குப் பாரதிதாசன் முரண்பட்டுள்ளார்.

கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையே இருந்த நட்பின் பெருமையைப் பிசிராந்தையார் என்னும் நாடகத்தின் வாயிலாகப் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

எல்லா வளங்களையும் ஒரு நாடு பெற்றிருந்தாலும் அந்த நாட்டு மக்களிடம் மனவலிமை இல்லை என்றால் அந்த நாடு சிறந்தநாடு ஆகாது. மனவலிமை இல்லாத மக்களால் திடீரென்று ஏற்படும் தீமைகளை எதிர்கொள்ள இயலாது என்னும் மாறுபட்ட கருத்தையும் இந்த நாடகம் வழியாகப் பாரதிதாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

சேரதாண்டவம் என்னும் நாடகத்தின் வாயிலாகக் காதல் வாழ்வின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நல்ல தீர்ப்பு என்னும் பாரதிதாசனின் நாடகம் கலையில் போட்டி இருக்கலாம்; பொறாமை கூடாது என்னும் கருத்தை உணர்த்துகிறது.

அமைதி என்னும் நாடகம் உரையாடலே இல்லாமல் அமைக்கப்பட்ட புதுமை நாடகம் ஆகும். இந்த நாடகம் பிறருக்கு உதவும் மனப்பான்மையைத் தெரிவிக்கிறது.

கழைக் கூத்தியின் காதல் என்னும் நாடகம் சாதி முறையை எதிர்க்கிறது: பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டுகிறது.

பாரதிதாசன் தமது நாடக உரையாடல்களில் சிறு சிறு தொடர்களைப் பயன்படுத்தியுள்ளார். உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உரையாடல்களை அமைத்துள்ளார். மேலும் பாரதிதாசன், நாடக உரையாடல்களின் வாயிலாகத் தமது கொள்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
 

தன் மதிப்பீடு: வினாக்கள் - II
 

  1. நாடகங்கள் எவற்றால் சிறப்பைப் பெறும்?
  1. நாடகக் காட்சிகளில் எப்போது விறுவிறுப்புக் கூடும்?
  1. ‘விச்சுளி’ என்னும் ஆட்டவகை எந்தக் கூத்தில் இடம் பெற்றுள்ளது?