6.6 புரட்சிக் கவிஞர்
 

E

இருக்கின்ற சமுதாய அமைப்பை மாற்றி முற்றிலும் புதுச் சமுதாய அமைப்பை உருவாக்குவதைச் சமுதாயப் புரட்சி என்கிறோம். இத்தகைய சமுதாயப் புரட்சிக் கவிதைகளைப் பாடியதால் பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கிறோம்.
 

6.6.1 சமுதாயப் புரட்சி
 

பாரதிதாசன் காலத்தில் சமுதாயம் சாதிகளால் பிளவுபட்டுக் கிடந்தது; மதச் சண்டைகளில் மூழ்கிக் கிடந்தது; பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கையைக் கொண்டிருந்தது; பெண் கல்வி புறக்கணிக்கப்பட்டிருந்தது; தமிழ் மொழியின் சிறப்புகள் மறுக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில் தோன்றிய பாரதிதாசன், சமுதாயத்திலிருந்து இக்கொடுமைகளைப் போக்குவதற்காகப் பாடினார்.

சமுதாயப் புரட்சிக்குத் தேவையானது சமத்துவம். சாதி, பொருள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்வு, தாழ்வு கருதாமல் அனைவரையும் ஒரே தரத்தினராகக் கருதுவது சமத்துவம் எனப்படும். இந்தச் சமத்துவம், சமுதாயத்தில் மலர்ந்தால் மனிதரிடையே பேதங்கள் மறையும் என்று பாரதிதாசன் நம்பினார். எனவே,
 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்

(பாண்டியன் பரிசு, இயல் : 56)
 

என்று பாடியுள்ளார். சமத்துவச் சமுதாயத்தில் எல்லாப் பொருள்களும் எல்லாருக்கும் கிடைக்கும். எனவே, இந்த உலகம் அதை நோக்கியே செயல்படுகிறது என்று பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.
 

6.6.2 சாதி அற்ற சமுதாயம்
 

பாரதிதாசன் காண விரும்பிய சமுதாயம் சாதிப் பிரிவுகள் இல்லாத சமுதாயம். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வேறுபாடு எந்தச் சமுதாயத்தில் இருந்தாலும் அது நோயாகத்தான் கருதப்படும். தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கும் இந்த நோய் நமது முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை என்று பாரதிதாசன் எண்ணினார். இந்தச் சாதி வேற்றுமையை அவர் ‘வருண பேதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

பொய்மை வருண பேதம்
     போனால் புனிதத் தன்மை
நம்மில் நாம் காண்போமடி - சகியே
     நம்மில் நாம் காண்போமடி

(பாரதிதாசன் கவிதைகள் III. ‘சமத்துவப்பாட்டு’ : 368)
 

என்று வருணபேதம் ஒழிந்தால் சமுதாயம் தூய்மை அடையும் என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
 

6.6.3 சமயம் அற்ற சமுதாயம்
 

தமிழ்நாட்டில் உள்ள இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று எண்ண வேண்டும். சமயம் அவர்களைக் கூறு போடக் கூடாது என்னும் கருத்தைப் பாரதிதாசன்,
 

துருக்கர், கிறித்துவர் சூழ் இந்துக்கள் என்று
இருப்பவர் தமிழரே என்று உணராது
சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு

(பாரதிதாசன் கவிதைகள் II, 23 ‘புதுநெறி காட்டிய புலவன்’)
 

என்னும் கவிதை வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.
 

சமய வேறுபாடுகள் மக்களின் அமைதியைக் குலைக்கின்றன. எனவே, சமய வேறுபாடுகள் அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த விரும்பினார் பாரதிதாசன்.
 

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபேதம் வளர்த்தே தளர்வது நன்றா?

(பாரதிதாசன் கவிதைகள் ‘ஆய்ந்து பார்’ : 1-2)
 

என்று சமுதாயத்தைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார் பாரதிதாசன்.