1.1 அறம் - விளக்கம்

அறம் என்றால் என்ன? என்ற வினா எழுப்பினால் அதற்கு விடை காண்பது கடினமானது. அறம் என்ற சொல்லின் பொருள் என்ன? ‘அறு’ என்ற வினைச்சொல் அடியாகப் பிறந்ததே ‘அறம்’ என்னும் சொல். இச்சொல்லுக்கு அறுத்துச் செல், வழியை உண்டாக்கு, உருவாக்கு, துண்டி, வேறுபடுத்து என்ற பலவகைப் பொருள்கள் வழங்கி வருகின்றன. இத்தகைய சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் அறம் என்னும் சொல்லிற்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.

மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிறை வடிவமே அறம் என்று கூறுவர். ‘பிறவிதோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையை அறுத்தெறிவதே அறம்’ என்ற ஆன்மீக விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு. (திருக்குறள் - நீதி இலக்கியம் - பக் 23)

1.1.1 அறம் பற்றிய கருத்துகள்

நம் முன்னோர் அறம் என்னும் சொல்லிற்குத் தந்துள்ள விளக்கத்தோடு எதிக்ஸ் (Ethics) என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தரப்படும் பொருள் விளக்கம் மிகவும் பொருந்துவதாக உள்ளது. நல்ல அல்லது தீய செயல்கள் மூலம் தானே வெளிப்படும் மக்களுடைய நடத்தையைப் பற்றிய ஆய்வியல் கலையே ‘எதிக்ஸ்’ என்பதாகும். இதைத் தமிழில் அறவியல் எனலாம்.

எதிக்ஸ் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லாகும். முதன் முதலில் இச்சொல் பழகிப்போன நடத்தை, வழக்கம், மரபு என்னும் பொருள்களையே உணர்த்தி வந்தது. பின்னர் நடத்தை என்னும் பொருளே போற்றப்பட்டது. ஒழுக்கத்தைக் குறிப்பிடும் Moral என்னும் ஆங்கிலச் சொல்லும் பழக்க வழக்கம் என்னும் பொருளையே குறித்தது. இதனால் மனித நடத்தை குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள் வழக்கமாகக் கொள்ளும் முடிவையே ஒழுக்கமாகக் (Morality) கொண்டனர் என்பது புலனாகின்றது.

இதனால் தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டபொழுது ஒழுக்கமெனும் பண்பாக மலர்ந்து வாழ்க்கை நெறியாக மாண்புற்றது எனலாம்.

1.1.2 அறத்தின் அடிப்படை

இனி அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா என்று பார்ப்போம். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணமாகும். எண்ணம் தூய்மையாக இருந்தால்தான் சொல்லும் செயலும் தூய்மையாக அமைய முடியும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருக்க வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது யாது? மன மாசினைப் போக்குவது எவ்வாறு? பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவை மனமாசுகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம். இதையே குறளாசிரியர்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
(குறள் - 34)


(மாசு = குற்றம், இலன் = இல்லாதவன், ஆகுலநீரபிற = பிற ஆரவாரிக்கும் தன்மை உடையன)

என்றும்,

அழுக்கா றுஅவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
(குறள் - 35)

(அழுக்காறு = பொறாமை, அவா = பேராசை, வெகுளி = கோபம், இன்னாச்சொல் = கடும் சொல், இழுக்கா (இழுக்கி) = நீக்கி)

என்றும் கூறுகிறார். இவ்விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கும்போது அறம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் சேர்ந்த ஒன்று என்று கொள்ளலாம். இத்தகைய அறம் பற்றிப் பேச எழுந்தவையே அறநூல்கள். அறநூல்களுக்கு உயிராக இருப்பது கருத்து. அறக் கருத்துகளையும் இலக்கியச் சுவை என்னும் இனிப்பிலே கலந்து கொடுக்கப்படும்பொழுது அவை அற இலக்கியங்கள் ஆகின்றன. இனி அற இலக்கியங்களுள் ஒன்றாகிய நாலடியார் பற்றிப் பார்ப்போமா?