2.4 வாழ்வியல் உண்மைகள்

வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை எவை என்பது இந்நூலில்
வலியுறுத்தப்படுகிறது. நீக்க வேண்டியவை எவை என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. துன்பம் நீக்கும் வழிகளும் கூறப்படுகின்றன.

2.4.1 பின்பற்ற வேண்டியவை

சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிகள் பலவற்றை விளம்பி நாகனார் சுட்டிக்காட்டுகிறார். பிறர் செய்த தீமைகளுக்காக அவரை வெறுக்காமல் இருக்க வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறக்காமல் இருக்க வேண்டும்.
 

கன்றாமை வேண்டும் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும்
(நான் - 13)

(கன்றாமை = சினவாமை)

எப்போதும் பிறருடைய நற்குணங்களையே காணும் மனித நேயத்தின் மாண்பல்லவா இவ்வழி!

கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க வேண்டும். விடுவதானால் பற்றை விட்டுவிட வேண்டும். உதவி செய்வது என்றால் சுற்றத்தாருள் ஏழைகளை ஆதரிக்க வேண்டும். வெகுளியைக் கெடுக்க வேண்டும். இவையெல்லாம் மனிதனை மாண்பு மிக்கவனாக்கும் வழிமுறைகள் ஆகும். பாடலைப் பாருங்கள்.
 

கொடுப்பின் அசனம் கொடுக்க - விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க - எடுப்பில்
கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்
(நான் - 82)

(அசனம் = உணவு; ஈட்டை = பற்றை; எடுப்பில் = உயர்த்த விரும்பினால்; கிளை = உறவு; கழிந்தார் = வறியவர்; எடுக்க = காப்பாற்றுக; கெடுப்பின் = கைவிடுவதாயின்; வெகுளி = கோபம்)

2.4.2 இல்லாத இயல்புகள்

அறக்கருத்துகளைச் சொல்லும் நிலையில் விளம்பி நாகனார் பல்வேறு உத்திகளைக் கையாண்டிருப்பதை நான்மணிக்கடிகையில் காணலாம். கருத்துகளை நேரிடையாகச் சொல்வது, வலியுறுத்திச் சொல்வது, நகைச்சுவை இழையோடச் சொல்வது, தத்துவமாகச் சொல்வது என்ற வகைகளே அவ்வுத்திகள் ஆகும். பின்பற்றுக, நீக்குக என்று முன்னிலைப்படுத்திச் சொல்லாமல் பற்றற்ற நிலையில் சொல்வது போல் அறிவுரை கூறும் அழகைப்பாருங்கள்.

சென்று விட்ட பொருள்களைப் பற்றிய துன்பம் கற்றுத் தெளிந்தவரிடம் இல்லை. முயற்சித் துன்பம் ஊக்கம் உடையாரிடத்து இல்லை. அறத்தின் உண்மைகள் தீயவை செய்வாரிடத்து இல்லை. சினம் கொண்டவரிடம் எந்த நன்மைகளும் இல்லை என்ற கருத்தை என்னும் பாடல் விளக்குகிறது.

கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்

(நான் - 10)

(கழிவிரக்கம் = வருத்தம், துன்பம்; உறா முதல் = முயற்சித் துன்பம்; தெற்றென = தெளிவாக; அல்ல = நல்லது அல்லாத)

2.4.3. கேடு விளைவிப்பன

உடலுக்கும், உள்ளத்துக்கும் கேடு விளைவிப்பன யாவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது நான்மணிக்கடிகை.

ஒற்றுமையின்மை நம் வலிமையைக் கெடுக்கும். பொய்ம்மை உடம்பைக் கெடுக்கும். தூய்மையற்ற பாத்திரம் பாலின் சுவையைக் கெடுக்கும். தகாதவரிடம் கொண்ட நட்பானது குலத்தை அழிக்கும். இக்கருத்தைச் சொல்லும் பாடலைப் பார்க்கலாம்.


மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் பெய்த
கலம்சிதைக்கும் பாலின் சுவையைக் குலம்சிதைக்கும்
கூடான்கண் கூடி விடின்

(நான் - 23)

(மொய் = வலிமை, கூடார் = தகுதியற்றவர்)

இனி, கேடு எப்பொழுது வரும் என்பதையும் நான்மணிக்கடிகை கூறுகிறது.

ஒருவனுக்கு நாணம் நீங்கினால்செல்வம் அழியும். ஐம்பொறிகள் நல்வழி நடந்தால் செய்யும் தீவினை கெட்டுப்போகும். நீர் இல்லையென்றால் பயிர் விளைச்சல் கெடும். நன்மை மாறினால் நட்புக் கெடும்.


பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிப்பட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின்
நண்பினார் நண்பு கெடும்
(நான் - 46)


என்பது அப்பாடல்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(குறள் - 788)

என்று உற்றுழி உதவுதலை வள்ளுவர் குறிப்பிடுகிறார் அல்லவா? அத்தன்மை இல்லாதபோது நட்பு கெட்டுப்போகும் என்கிறார் விளம்பி நாகனார்.

இதையடுத்துத் துன்பம் செய்வன எவை என்று காட்டுகிறார் ஆசிரியர். அவை, பிணியுள்ள உடம்பில் சேரும் உணவு துன்பம் தரும். அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும். முன் செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும் என்பனவாம். (நான் - 52)

2.4.4 உலக இயல்பு

உலக இயல்பு, மாந்தர் இயல்பு என்று வகைப்படுத்தி, சில உண்மைகளைச் சுட்டிச் காட்டுவதை நான்மணிக்கடிகையில் காணலாம்.

எக்குடியிலும் நன்மக்கள் தோன்றுவர். உயிர்கள் பிறக்கும் போதே நீங்கென நீங்காது. இறக்கும்போது நில்லென நில்லாது. விண்மீன்களும், திங்களும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும் ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழில்ஒக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்
(நான் - 60)

(நாள் = நட்சத்திரம்; இருசுடர் = சூரியன், சந்திரன்; தொழில் = முயற்சி)

இவையே இவ்வுலக இயல்பு என்று கூறுகிறது நான்மணிக்கடிகை.

உலகில் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை, எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறார் விளம்பிநாகனார், பாருங்கள்!

உலகில் இறவாத உயிர்களும் இல்லை. கெடாத வலிமைகளும் இல்லை. மூப்பு அடையாத இளமையும் இல்லை. குறையாத செல்வங்களும் இல்லை என்ற இக்கருத்தை,

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்
(நான் - 79)


(தாவாத = கெடாத; மூவாது = முதிராது; வளமை = செல்வம்)

என்ற பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.