3.4 தொகுப்புரை

திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களைப் பற்றி இப்பாடத்தில் பார்த்தோம். கீழ்க்கணக்கு நூலில் திரிகடுகம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்துப் பொருள்களைக் குறிக்கிறது. இவை உடல் நோயைத் தீர்க்க வல்லதைப் போல் திரிகடுக நூலில் கூறப்படும் கருத்துகளும் மக்களுடைய உள நோயைத் தீர்ப்பதாகும்.

அறத்தின் உயர்வு, இயற்கையும் அறமும், அறமும் இன்ப துன்பமும் என்று பல கோணங்களில் நல்லாதனார் திரிகடுகம் வாயிலாக அறக்கருத்துகளை எடுத்துரைக்கின்றார். அடிப்படைச் சமுதாய நிறுவனமாகிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் சிந்தனைகள் நல்ல சமுதாயம் உருவாக்கும் வழிகளாக உள்ளன.

இரண்டாவது பகுதியில் சிறுபஞ்சமூலம் என்ற மருந்துப் பெயர் கொண்ட அறநூல் விளக்கப்படுகிறது. ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்ப்பது போல் உளநோயைப் போக்கும் ஐந்து கருத்துகளைக் காரியாசான் ஒவ்வொரு பாடலிலும் சொல்கிறார். அறச் சிறப்புகள் விரிவாகப் பேசப்படுகின்றன. அறநெறிகளே நல்வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதைச் சிறுபஞ்சமூலத்தில் வலியுறுத்துகிறார்.

இல்லறச் சிறப்பும், வாழ்வியல் உண்மைகளும் விரித்துரைக்கப் படுகின்றன. வாழ்வியல் உண்மைகளை விளக்கச் செடி கொடிகள், மரங்கள், பறவைகள் இவற்றின் இயல்புகளை எடுத்துக் காட்டுகிறார். எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று என்பதை எடுத்துக் கூறி, உலகில் எப்பொருளும் இகழ்தற்குரியன அல்ல என்று எடுத்துக் காட்டுகிறார். அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை எடுத்துரைப்பதே சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் நோக்கமாக அமைகிறது.

மூன்றாவது பகுதியில் ஏலாதி நூல் பற்றிய விளக்கம் இடம் பெறுகிறது. இந்நூலில் கணிமேதையார் பொதுவாக அறங்கள் செய்வது நன்று என்று மட்டும் சொல்லாமல் இத்தகைய அறங்களைச் செய்பவர்கள் மறுபிறவியில் மன்னராய்ப் பிறந்து ஆட்சி செய்வர் என்று 21 பாடல்களில் குறிப்பிடுகிறார். விண்ணவர்க்கும் மேலானவர் யார் என்பது எட்டுப்பாடல்களில் சொல்லப்படுகிறது. காலனுக்கு அஞ்சி அறம் செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அறநெறிகள் நன்னெறிகள் முதலியவற்றைப் பின்பற்றி வாழ்வில் உய்ய வேண்டும் என்பதே ஏலாதி நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.



தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்? [விடை]
2.

பஞ்சமூலம் என்ற சொற்றொடர் குறிக்கும் ஐவகை வேர்கள் யாவை?

[விடை]
3.
நண்டுக்கு எமன் யார்? [விடை]
4.

இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச் சொல்கிறார்?

[விடை]
5.
ஏலாதி நூலின் ஆசிரியர் யார்? [விடை]
6.

வாளஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பஞ்சான் யார்?

[விடை]
7.
அறங்களைச் செய்தால் மறுபிறவியில் மன்னராய்ப் பிறக்கலாம் என்று எத்தனைப் பாடல்களில் சொல்லப்படுகிறது?
[விடை]
8.
ஏலாதி நூல் எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?
[விடை]