4.4 இனியவை நாற்பது

இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறுகிறது. ஆதலால் இந்த நூலிற்கு இனியவை நாற்பது என்ற பெயர் வந்தது. இனியது நாற்பது, இனிது நாற்பது, இனிய நாற்பது என்னும் பெயர்களும் இந்நூலுக்கு உண்டு.

4.4.1 ஆசிரியர்

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். ஆசிரியர் பெயர் சேந்தன். பூதன் என்பது இவர் தந்தையாரின் இயற்பெயர். இவர் மதுரையில் உயர்ந்த தமிழாசிரியராக விளங்கியதால் மதுரைத் தமிழாசிரியர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

பூதஞ்சேந்தனார் கடவுள் வாழ்த்துப் பாடலில் முதலில் சிவபெருமானையும், அடுத்துத் திருமாலையும், பின்னர் பிரம்மனையும் குறிப்பிடுகின்றார். மும்மூர்த்திகளையும் பற்றிக் குறிப்பிடுவதால் இவர் வைதிக சமயத்தினராதல் வேண்டும்.

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

4.4.2 நூல் அமைப்பும் பாடுபொருளும்

இந்த நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாக்களைக் கொண்டுள்ளது. எட்டாவது பாடல் பஃறொடை வெண்பாவால் ஆனது. ஏனையவை இன்னிசை வெண்பாவில் அமைந்துள்ளன.

இன்னா நாற்பதில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு இன்னாத பொருள்கள் கூறப்படுகின்றன. ஆனால் இனியவை நாற்பதில் 1,3,4,5 ஆகிய பாடல்களில் மட்டுமே நான்கு இனிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. ஏனைய பாடல்களில் மூன்று இனிய பொருள்களே கூறப்பட்டுள்ளன. இனிய என்பது இன்பத்தைத் தரும் என்று பொருள்படும்.

தனி மனிதனுக்கு இனியது இன்னின்ன என்பது இந்நூலில் கூறப்படுகிறது. இல்லறத்திற்கு இனியவை, துறவறத்திற்கு இனியவை இவையென்று எடுத்துரைக்கப்படுகின்றன. அரசனுக்கு இனியது, ஆண்டிக்கு இனியது, பண்பில் இனியது முதலிய அனைத்தும் இந்நூலில் கூறப்படுகின்றன.

• இனியவை நாற்பதும் திருக்குறளும்

பூதஞ்சேந்தனார் திருக்குறளை நன்கு கற்றவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கிறது. இவர் பல இடங்களில் குறட்பா அடிகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
(குறள்:66)
என்ற குறட்கருத்தை அடியொற்றி

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
(இனி. நாற். -14)
என்று கூறியுள்ளார்.

• இனியவை நாற்பதும் இன்னா நாற்பதும்

இன்னா நாற்பதின் சில கருத்துகளும் சொற்றொடர்களும் அப்படியே இந்நூலில் அமைந்திருப்பதைக் காணலாம்.

பொருள்உணர்வா ரில்வழிப் பாட்டுரைத்தல் இன்னா
(இன். நாற். -10)
என்ற கருத்தை இனியவை நாற்பது,
 
கற்றார்முன் கல்வி யுரைத்தல் மிக வினிதே
(இனி. நாற். -16)
என்று குறிப்பிடுகிறது.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் ஒன்றை ஒன்று சார்ந்து செல்வதை இதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.