5.2 பின்பற்ற
வேண்டிய நெறிகள்
இது வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டிய
சிறந்த வழிமுறைகளைக் குறிப்பிடுவது ஆகும். நல்லொழுக்கங்களுக்குக் காரணமான
நற்குணங்கள், வணங்க வேண்டியவர்கள், அறம் செய்தல், ஏனைய உயிர்களுக்குத் தீங்கு
செய்யாமை போன்றவற்றைப் பற்றிப் பெருவாயின் முள்ளியார் விவரிக்கின்றார்.
5.2.1 நற்பண்புகள்
ஆசாரக்கோவை முதற் பாடலிலே
நல்லொழுக்கங்கட்கு வித்தாக, காரணமாக விளங்குவன எவை என்று வரையறை செய்து எட்டு
நற்குணங்களைக் கூறுவதைக் காணலாம். நன்றியறிதல், பொறுமை, இன்சொல், எவருக்கும்
இன்னாதன செய்யாமை, கல்வி, ஒப்புரவறிதல், அறிவுடைமை, நல்லினத்தாரோடு சேர்தல்
என்ற இந்த எட்டு வகைப் பண்புகளும் நல்லோரால் சொல்லப்பட்ட ஆசாரங்களுக்குக்
காரணம் ஆகும் என்கிறார் ஆசிரியர். எல்லா நீதி நூல்களும் சொல்லக்கூடிய இந்த
எட்டுப் பண்புகளையும் முதற்பாடலிலேயே குறிப்பிட்டுச் சொல்லி விடுகிறது, ஆசாரக்கோவை.
5.2.2 வணங்கத் தக்கவர்
பக்தியின் அடிப்படையில் அவரவர் விரும்பும் தெய்வத்தை
வணங்குதல் நம்முடைய மனச் செருக்கை அடக்கும் ஒரு
சிறந்த நெறியாகும். காலையில் எழுந்தவுடன் பல்துலக்கிச்
சுத்தம் செய்து தாம் வணங்கும் தெய்வத்தைத் தாம் அறியும்
நெறியால் வணங்குக என்கிறார். பெருவாயின் முள்ளியார்
(ஆசாரக்கோவை - 9).
தம்மைவிடப் பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும்
காட்டுவதே உயர்ந்த பண்பு. சிறு வயதிலிருந்தே அதைப்
பழகிக்கொள்ள வேண்டாமா? அதனை ஒரு சிறந்த நெறியாகக்
கூறுகிறது ஆசாரக்கோவை. அரசன், ஆசிரியர், தாய், தந்தை,
நம்மைவிடப் பெரியவர் அனைவரையும் தொழுது வணங்க
வேண்டும் என்பதே எல்லோரும் கண்ட நெறி என்கிறது.
அரசன் உபாத்தியான் தாய்தந்தை
தம்முன்
நிகரில் குரவர் இவரிவரைத்
தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே
யாவரும் கண்ட நெறி |
 |
(ஆசாரக்கோவை - 16)
|
(குரவர் = பெரியோர்)
5.2.3 அறம் செய்தல்
இயன்ற இடங்களில் எல்லாம் தம்மால் முடிந்தவரை
அறம்
செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர்,
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும் வாயெல்லாம் செயல் |
 |
(குறள் :33)
|
என்று கூறுகிறார். திருமண நாளின் கண்ணும், தேவர்க்குரிய
சிறப்பு நாளின் கண்ணும், முன்னோர்க்குச் சிறப்புச் செய்யும்
நாளின் கண்ணும், விழா நாட்களிலும், யாகம் செய்யும்
போதும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குச் சோறிட
வேண்டும் என்கிறது ஆசாரக்கோவை (48). தானத்தில்
சிறந்தது அன்னதானம். போதும் போதும் என்று சொல்லும்
வண்ணம் கொடுக்க முடிந்த தானம் இதுவே. ஆகவே அதை
வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம்.
நல்லறிவுடையவர் நிறைஉவா (பௌர்ணமி) நாளில் மரங்களை
வெட்ட மாட்டார்கள். பல் தேய்ப்பதற்குக் கூட மரத்திலிருந்து
குச்சியை ஒடிக்க மாட்டார்கள். நிறைமதி நாளில் மரம், செடி,
கொடி முதலிய உயிர்களுக்குக் கூட ஊறு செய்யலாகாது.
குரவர் உரையிகந்து செய்யார்
விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மெல்கோலும் தின்னார் மரம்குறையார் என்பதே
நல்லறி வாளர் துணிவு |
 |
(ஆசாரக்கோவை - 17)
|
(மெல்கோல் = பற்குச்சி,
குறைத்தல் = வெட்டுதல், நிறையுவா = பௌர்ணமி நாள்)
என்ற பாடலில் இக்கருத்தை வலியுறுத்திப்
பாடுவதைப்
பாருங்கள்!
|