6.4 அரசியல்

இல்லறத்தைப் பற்றிப் பேசிய பின் அரசியல்/அரசு பற்றிப் பேசுகிறது பழமொழி. குடும்பம் சமூகமாக விரிகிறது. அதற்குத் தலைமையான அரசன் பேசப்படுகிறான். அரசன் நடுவு நிலைமை உடையனாய் இருப்பது பற்றியும், அவன் வரி வாங்கும் விதம் பற்றியும் பழமொழி விளக்குகிறது. அமைச்சர்கள் இலக்கணம், பகைத்திறம், படைவீரர் பற்றியும் பழமொழி எடுத்துரைக்கிறது. முடியாட்சியில் அரசன் செங்கோன்மைச் சிறப்பும், அமைச்சர் சிறப்பும் அறிய முடிகிறது.

6.4.1 அரசியல்பு

நாடாளும் அரசன் குடிமக்களைத் தன் கண்ணின் மணி போலக் காக்க வேண்டும். அனைவர்க்கும் நீதி கூறும் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் அரசன். எனவே, தனக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்ற கண்ணோட்டமின்றி நீதி கூற வேண்டும். செல்வன், வறியன் என்று நோக்காது நீதி கூறுதல் வேண்டும் (பழ:243).

•  தீயினம் சேராமை

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஓர் அறைக்குள்ளே பாம்புடன் இருப்பது என்பது எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிலையைச் சொல்கிறது பழமொழிப் பாடல். வஞ்சனை உடையாரைத் தலைமைப் பொறுப்பில் வைத்து உடன் இருக்கும் மன்னன் நிலையும் அப்படித்தான் இருக்கும் என்கிறார் புலவர்.

தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய் அஃதொன்றோ ஓரறையுள்
பாம்போடு உடனுறையும் ஆறு
(பழ:253)

(காம்பனுக்கும் - காம்பு;  அனுக்கும் - மூங்கிலை வருத்தும்)

ஓரறையுள் பாம்போடு உடனுறைந்தற்று என்பது பழமொழி.

உட்பகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் மனவேறுபாடு உடையாரோடு வாழ்தல் என்பது ஒரு குடிலின் உள்ளே பாம்போடு வாழ்தலை நிகர்க்கும் என்கிறார்.

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று
(குறள்:890)

ஒரு சிறு குடிலில் பாம்போடு வாழ்பவன் அப்பாம்பினால் தீண்டப்படுதல் உறுதி. வஞ்சனை உடையாருடன் வாழும் மன்னனும் அழியக்கூடும் என்ற கருத்தைத்தான் பழமொழியாக்கிப் பாடுகிறார் முன்றுறையரையனார்.

6.4.2 அமைச்சர்

அரசனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் அமைச்சர். நல்லாட்சி நடைபெற இவர்கள் மன்னனுக்குத் துணையாக வேண்டும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
(குறள்:448)

இடித்துரைக்கும் அமைச்சர்கள் இல்லாத மன்னன் கெடுப்பார் இல்லாமலே கெட்டுவிடுவான் என்பது மேற்கூறிய குறட்பாவின் கருத்து. அறிவால் மூத்த அமைச்சர்கள் அரசன் நல்வழியில் செல்லவே அறிவுறுத்துவர். தீய நெறியில் செல்லும்போது இடித்துரைக்க வேண்டும். அரசனை வலியுறுத்தி அவனுக்கு உறுதியுரைக்கும்போது அச்சொற்கள் அப்போது துன்பம் தருவதாக இருந்தாலும் பின்னால் இன்பத்தையே அளிக்கும்.

செயல்வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல்வேண்டி நிற்பின் விலக்கும்; இகல்வேந்தன்
தன்னை நலிந்து தனக்குறுதி கூறலால்
முன்னின்னா மூத்தார்வாய்ச் சொல்

(பழ:263)

என்ற பாடல் மேற்கூறிய கருத்தை விளக்குவதாகும்.

6.4.3 மன்னரைச் சேர்ந்தொழுகல்

மன்னரைச் சேர்ந்து பணியாற்றக் கூடியவர்கள் எவ்வாறு வினை செய்ய வேண்டும் என்பதைப் பழமொழி நன்கு விளக்குகிறது. அரசன் ஆணையை உடனேயே அவன் கீழ் வாழ்வார் செய்தல் வேண்டும். அரசன் ஏவியதைத் தட்டாது செய்ய வேண்டும். அரசன் ஏவிய செயலைத் துன்புறுதலின்றிச் செய்யத் தொடங்குக என்பதனை, அச்செயல் செய்க என்று கூறியவன் உண்க என்று கூறியதை ஒக்கும் என்கிறது ஒரு பழமொழிப் பாடல் (பழ:267) .

வேலையைச் செய்யுமாறு தூண்டியவன் உண்க என்று சொல்லுதல்போல், ஏவிய அரசன் செயல் முடிதற்கேற்ப உதவி செய்து முடிப்பான் என்பதாகும். அரசரேயன்றி அவரைச் சார்ந்தோரும் பிறருக்கு அஞ்சார் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி இது.

கூரிது எருத்து வலியநன் கொம்பு
(பழ:271)

அரசன் சீர்கெட்ட விடத்தும் அவனை இகழ்வார் தீமையையே அடைவர் என்ற கருத்தை விளக்க வந்த பழமொழி

இளைதென்று பாம்புஇகழ்வார் இல்
(பழ:277)

6.4.4 பகைத்திறம்

பகையின் தன்மையை உணரும் ஆற்றல் மன்னனுக்கு இன்றியமையாதது. பகையில் சிறிய பகை பெரிய பகை என்ற வேறுபாடு பாராமல் அரசன் விரைந்து செயலாற்ற வேண்டும். பகை தோன்றிய காலத்திலேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் முற்ற அறுத்துத் தன்னை விரும்புமாறு செய்து கொண்டால் அப்பகைமை முதிர்வதில்லை. தனியே ஒரு மரம் நின்று காடாதல் இல்லை. ‘தனிமரம் தோப்பாகாது’ என்று உலகில் வழங்கும் பழமொழியைப் பயன்படுத்தி, பகையைத் தோன்றியபோதே அழித்துவிட வேண்டும் என்ற கருத்தைக் கூறுகிறார் புலவர்.

இளைதாக முள்மரம் கொல்க என்ற குறட்பாக் கருத்தை இப்பழமொழியில் காணலாம்.

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாதல் இல்
(பழ:286)

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதும் நாம் அறிந்த பழமொழி. முள்ளினை முள்ளாற் களைதல் போலப் பகைவரை அவரைச் சார்ந்தோர் துணையைப் பெற்றுக் களைய வேண்டும் என்கிற கருத்தைப் பின்வரும் பாடலில் காணலாம்:

தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக்கு
உள்வாழ் பகையைப் பெறுதல் - உறுதியே
கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ
முள்ளினால் முட்களையு மாறு

(பழ:308)

6.4.5 படைவீரர்

அரசர் வெற்றிக்குக் காரணமாக அமைவனவற்றுள் இன்றியமையாதது படைவீரர் இயல்பும் அவர்தம் இணையிலாத வீரமும் அல்லவா? அப்படை வீரர்களின் இயல்பும் சிறப்பும் பற்றிப் பழமொழி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா?

உண்மையான படைவீரர் தம் அரசர்க்கே பணிசெய்வர். ஒருபோதும் வஞ்சித்துப் பகைவரோடு ஒன்றுதல் இலர். மாறு கொண்ட இரண்டு எருதுகள் ஒரு துறையில் நீர் உண்ணாதல்லவா? அதுபோல உண்மையான படைவீரரும் பகைவரோடு ஒன்றமாட்டார்.

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்
மற்றவர்க்கு ஒன்னாரோடு ஒன்றுமோ? - தெற்ற
முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா
இரண்டுஏறு ஒருதுறையுள் நீர்

(பழ:312)

வீரர்கள் தம்மை நலிய உரைத்தவர்களைப் பார்த்து, பதிலுக்குப் பேசுதல் கூடாது. செயலால் அடக்க வேண்டும். சொல்லால் அடக்கப் புகுதல் நரியின் ஊளையிடும் ஒலியால் கடல் ஒலியை அடக்கப் புகுதலையொக்கும் என்கிறது இன்னொரு பாடல் (பழ:316).