6.7 தொகுப்புரை

சான்றோர்களின் அனுபவ வெளிப்பாடான பழமொழி இலக்கியம் படிப்பதற்குச் சுவையானது. எக்காலத்தும் மக்களை வழிநடத்தும் சிறப்புடையது. சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை அனைத்து இலக்கியங்களிலும் பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திருக்குறள், நாலடியார் கருத்துகள் பல பழமொழிகளில் பயின்று வருதலைக் காணலாம்.

வரலாற்றுச் செய்திகள், புராண இதிகாசக் கருத்துகள் பழமொழியில் பேசப்படுகின்றன. பொற்கைப் பாண்டியன் வரலாறும், அரக்கு மாளிகையில் பாண்டவர் தப்பியோடிய நிகழ்ச்சியும், கண்ணன் மாவலியிடம் மூன்றடி நிலம் கேட்டதும் பழமொழியில் பேசப்படுகின்றன.

ஒரு நாட்டின் அறிவின் மாட்சி, அறிவின் வழிப் பிறந்த நகைச்சுவை, இன்பம், வீரம் ஆகியவற்றை அந்நாட்டுப் பழமொழியினின்றும் அறியலாம். பண்டைத் தமிழரின் வாழ்க்கை, வாழ்க்கை அனுபவங்கள், அனுபவத்தை வெளிப்படுத்தும் அழகு, இலக்கியப் பயிற்சி ஆகியனவற்றைப் பழமொழி சுவைபட எடுத்துரைக்கிறது.

400 பழமொழிகளையும் இப்பாடத்தில் எடுத்துரைக்க இயலாது. எனினும் வழக்கில் உள்ள பல பழமொழிகள் இவ்விலக்கியத்தில் பயின்று வருவதைச் சில சான்றுகளால் காண்போமா?

உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்
(பழ:144)

(அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)

ஒழுக ஊரோடுமாறு......
(பழ:195)

(உலகத்தோடு ஒட்ட ஒழுகு)

விரையின் கருமம் சிதையும்
(பழ:164)

(பதறாத காரியம் சிதறாது) பதறிய காரியம் சிதறும் என்றும் சொல்வதுண்டு.

வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு
(பழ:210)

(கொக்குத் தலைமேல் வெண்ணெய் வைத்துப் பிடித்தல்)

நாய் வால் திருந்துதல் இல்...
(பழ:336)

(நாய் வாலை நிமிர்த்த முடியுமா?)

இறைத்தோறும் ஊறும் கிணறு
(பழ:378)

(இறைக்கின்ற கிணறு சுரக்கும்)

இதுவரை நாம் படித்த செய்திகளால் பழமொழி நானூற்றின் சிறப்பும், பழந்தமிழரின் அனுபவ வெளிப்பாட்டின் சிறப்பும் நன்கு அறியலாம்.தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
‘முள்ளினால் முள் களையுமாறு’ என்ற பழமொழி விளக்கும் பொருள் யாது?
[விடை]
2.
உலக்கைமேல் காக்கையை யாருக்கு ஒப்பிடுகிறார் முன்றுறையரையனார்?
[விடை]
3.
‘பனியால் குளம் நிறைதல் இல்’ என்ற பழமொழி விளக்க வந்த கருத்து யாது?
[விடை]
4.
எப்படிப்பட்ட நட்பை விலக்க வேண்டும் என்கிறது பழமொழி?
[விடை]
5.
புலி முகத்து உண்ணி பறிக்கும் செயல் எதற்கு ஒப்பிடப்படுகிறது?
[விடை]