4.2 உலகநீதி
உலகநாதரால் இயற்றப்பட்ட அறஇலக்கியம் உலகநீதி. இந்நூல் பதிமூன்று
பாடல்களைக் கொண்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி வரி முருகனின்
பெருமையைக் கூறுகிறது. உலக நீதியின் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான்
போற்றப்படுகிறார்.
உலகநீதி
புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
|
 |
(கடவுள் வாழ்த்து)
|
(கரிமுகன் = யானை முகம் கொண்ட விநாயகன்)
‘உலகநீதி புராணம்’ என்னும் அறநூலைச் சொல்வதற்கு யானைமுகம் கொண்ட விநாயகன்
காவல் செய்ய வேண்டும் என்று விநாயகனை வேண்டுவதுபோல்
இப்பாடல் அமைந்துள்ளது.
கடவுள் வாழ்த்தில் உலகநீதி என்னும் இந்நூல் ‘உலகநீதி புராணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(புராணம் என்பதற்குப் பல பொருள்கள் வழங்குகின்றன. அவற்றில் ‘வேதப் பொருள்களை
வலியுறுத்தும் நூல்' என்பதும் ஒரு பொருள்) இங்கே, புராணம் என்பதற்கு ‘அறக்கருத்துகளை
வலியுறுத்தும் நூல்' என்று பொருள் கொள்ளலாம்.
உலகநீதி என்பது உலக மக்கள்
நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக்கருத்துகளைக் குறிக்கும். எனவே ‘உலகநீதி நூல்'
என்பதற்கு உலக மக்கள் நன்றாக வாழ்வதற்கு உதவும் அறக் கருத்துகளைக் கூறும்
நூல் என்று பொருள் கொள்ள முடியும்.
4.2.1 முருகன் பெருமை
உலகநீதி என்னும் இந்நூலின் கடவுள்
வாழ்த்தில் விநாயகப் பெருமான் போற்றப்பட்டிருந்தாலும் நூல் முழுவதும் முருகன்
பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள எட்டுப் பாடல்கள், முருகனை
மயில் ஏறும் பெருமாள் என்று குறிப்பிடுகின்றன. இரண்டு பாடல்கள் குமரவேள்
என்று குறிப்பிடுகின்றன. ஒரு பாடல் வேலாயுதன் என்று குறிப்பிடுகிறது. மேலும்
வள்ளி பங்கன் என்றும், ஏழைபங்கன் என்றும், உமை மைந்தன் என்றும் முருகன் போற்றப்பட்டுள்ளான்.
4.2.2 வள்ளியின் பெருமை
முருகனின் மனைவியர் இருவர் என்று திருமுருகாற்றுப்படை
கூறுகிறது. ஒரு மனைவி தெய்வானை; இரண்டாம் மனைவி வள்ளி. உலகநீதியில் தெய்வானையைப்
பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. ஆனால் வள்ளியின் பெருமை ஒன்பது பாடல்களில்
இடம்பெற்றுள்ளது.
வள்ளி, குறவர்குடியில் தோன்றியவள். குறவர்கள் வலிமை மிக்கவர்கள். காட்டில்
உள்ள விலங்குகளை வேட்டையாடித் திரிவது குறவர்களின் வழக்கம். வேட்டையாடிக்
கிடைத்த பொருள்களைக் கொண்டு நிறைவாழ்வு வாழ்கிறவர்கள் குறவர்கள். குறவர்கள் மலைச்சாரலில் தினையைப் பயிர் செய்வார்கள். அந்தத் தினைப்பயிரை நாரைகள்
கவர்ந்து செல்லாதவாறு அதைக் காவல் புரிவார்கள். வேட்டையாடுதலிலும் பயிர் செய்தலிலும்
சிறந்து விளங்கிய குறவர்கள் பெருமையுடன் விளங்கினார்கள். குறிசொல்வது குறத்தியர்
வழக்கம். இத்தகைய புகழ்நிறைந்த குறவர்குடியில் தோன்றியவள் வள்ளி
என்று குறவர்குடியின் பெருமை வெளிப்படும் படியாக வள்ளியை உலகநாதர் பெருமைப்படுத்தியுள்ளார்.
உலகநாதர் காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல பண்புகள் பலவற்றை உலகநீதி
தெரிவித்துள்ளது. அப்பண்புகளைப் பின்பற்றுவதால் சமுதாயமாகக் கூடி வாழும்
வாழ்க்கையில் எழும் சிக்கல்கள் மறைவதற்கு வாய்ப்பு உண்டு.
உலகநீதி தெரிவிக்கும் அறப்பண்புகளில்
சில இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.
4.2.3 சினம்
சினம் ஒரு மனிதனைத் தனது நிலையிலிருந்து மாற்றி அவனையே அழிக்கும் இயல்பு
கொண்டது. இந்தச் சினத்தைக் கொண்டவர்கள் அழிவது உறுதி. அவர்கள் மட்டும் அல்லாமல்
அவர்களைச் சேர்ந்தவர்களையும் அது அழித்துவிடும். இதைத் திருவள்ளுவர்,
சினம்என்னும்
சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
|
 |
(306)
|
என்று குறிப்பிட்டுள்ளார். சினம் இரண்டு வகையில் துன்பத்தைக் கொடுக்கிறது.
1.
|
சினம் கொண்டவரை அது அழிக்கிறது. |
2.
|
அவருக்குத் துன்பம் ஏற்படும் காலத்தில் உதவி
செய்கிறவர்களையும் அது அழிக்கிறது.
|
தன்னிடத்தில் வந்து சேர்ந்தவர்களை அழிக்கும் இயல்பு கொண்டது நெருப்பு. எனவே
அதைச் சேர்ந்தாரைக் கொல்லி என்று கூறுவார்கள். இங்கே திருவள்ளுவர் சினத்தையும்
‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சேர்ந்தாரைக் கொல்லக்
கூடிய சினம், சினம் கொண்டவருக்கு உதவி செய்கிறவர்களையும் அழித்து விடுகிறது
என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்.
திருவள்ளுவர் கூறியிருப்பது போல் சினத்தின் இயல்பை உலகநாதர் குறிப்பிடவில்லை
என்றாலும் சினம் கொண்டவர்கள் துன்பத்தை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை,
சினம்தேடி,
அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம் |
 |
(3)
|
என்னும் உலகநீதி வரிகள் விளக்குகின்றன.
சினம் துன்பத்தைத் தருவதால் யாரும்
சினம் கொள்ள வேண்டாம். தான் சினம் கொள்ளாமல் இருந்தால் மட்டும் போதாது. சினம்
கொள்பவர் வீட்டுக்குப் பக்கத்தில் கூட, போகக் கூடாது என்று உலகநாதர் அறிவுறுத்தியுள்ளார்.
4.2.4 பொய்யாமை
பொய் சொல்லாமல் இருப்பதை நாம் பொய்யாமை என்கிறோம். உண்மை பேசுவதை வலியுறுத்துவதே,
பொய் சொல்லக்கூடாது என்பதன் பொருள். ஒருவனால் உண்மை பேச இயலவில்லை என்றாலும்
பொய்யாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா என்ற நோக்கில் பொய்யாமையை உலகநீதி கூறியுள்ளது.
பொய்யாமையின் சிறப்பை உலகநீதி
நெஞ்சாரப் பொய்தன்னைச்
சொல்ல வேண்டாம் (2)
என்றும்,
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்
(10)
என்றும் கூறியுள்ளது. |
மேற்காணும் இரு அடிகளில், மனமறிந்து ஒருவன் பொய் சொல்லக்கூடாது
என்று முதல் அடி தெரிவிக்கிறது.
பொய் சொல்லக்கூடாது என்னும் உறுதியை மேற்கொண்ட ஒருவன் தனது உயிரே போகின்ற
நிலை வந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பதை இரண்டாம் அடி தெரிவிக்கிறது.
மனிதனின் உயிரைவிட உண்மையையே
உலகநீதி பெரிதும் போற்றுகிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.
4.2.5 இன்னாச் சொல்
இன்னா என்றால் துன்பம் என்று பொருள். இன்னாச் சொல் என்பது துன்பம் தரும்
சொல்லைக் குறிக்கும். இங்கே பிறருக்குத் துன்பம் தரும் சொல் இன்னாச் சொல்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புண்படவே வார்த்தைதனைச்
சொல்ல வேண்டாம் (9)
|
என்னும் தொடரில் பிறரது மனம் புண்படும்படியாகக் கொடிய சொல்
எதையும் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு முன்னால் நின்று கொண்டு அவரைப் பற்றிக் கொடிய சொற்களைச் சொல்வது
மட்டும் இன்னாச்சொல் இல்லை. அவரைப் பற்றி அவர் இல்லாத போது பழித்துப் பேசுவதும்
கொடிய சொல்தான் என்பதை உலகநீதியின் பின்வரும் அடி தெரிவிக்கிறது.
ஒருவரையும்
பொல்லாங்கு சொல்ல வேண்டாம் (1) |
என்று கூறிய உலகநாதர், வீண்விவாதம் செய்வதையும் இழிவாகக் கூறியுள்ளார்.
இதை,
வாதாடி
வழக்கு அழிவு சொல்ல வேண்டாம் (10) |
என்று குறிப்பிட்டுள்ளார்.
வாதிடுவதால் எந்த முடிவையும் எட்டமுடியாது. வாதம் செய்வதால் பிரச்சனை மேலும்
சிக்கலாகவே வாய்ப்பு உள்ளது. இதை உணர்த்தவே உலகநாதர் இத்தொடரைப் படைத்துள்ளார்.
இத்தொடர்களின் மூலம், புறங்கூறுதல்,
வீண் விவாதம் செய்தல் முதலியவையும் தீமை தரும் சொற்களைப் பயன்படுத்துவதற்கு
ஒப்பானது ஆகும் என்பதை உணரமுடியும்.
4.2.6 ஐந்து பேர்
மனிதன் சுகமாக வாழ்வதற்குத் துணைநிற்பவர்களில் இன்றியமையாத ஐந்து பேரை உலகநீதி
தெரிவிக்கிறது. அந்த ஐந்து பேரும் யார், யார் என்பதைப் பார்ப்போமா?
1.
துணி வெளுப்பவர்
2. முடி திருத்துபவர்
3. ஆசிரியர்
4. மருத்துவச்சி
5. மருத்துவர் |
என்னும் ஐவரே அவர்கள் ஆவார்கள். இதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
அஞ்சுபேர்
கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்; அதுஏது இங்கு என்னின்,
நீ சொல்லக் கேளாய்!
தஞ்சமுடன் வண்ணான், நாவிதன் தன் கூலி;
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சம் அற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாதபேரை
ஏது ஏது செய்வானோ ஏமன் தானே!
|
 |
(11)
|
(ஓதுவித்த = கற்பித்த, நஞ்சு அறுத்த = தொப்பூள்
கொடி அறுத்த, நோவு = நோய், ஏமன் = யமன்)
என்னும் பாடலில் குறிப்பிட்டுள்ள இந்த ஐவரும் மனித வாழ்க்கைக்கு எவ்வாறு
அடிப்படையானவர்கள் என்பதை இனிக் காண்போம்.
மனிதனின் பிறப்புக்குத் துணை புரிவதால் மருத்துவச்சி அடிப்படையானவள் ஆகிறாள்.
நோய் ஏற்படும்போது அந்நோயைப் போக்கி உதவுவதால் மருத்துவரும் அடிப்படை ஆகிறார்.
முடி திருத்துபவரும் துணி வெளுப்பவரும் தங்கள் தொழில்களின் வாயிலாக உதவுகின்றனர்.
எனவே இவர்களும் அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். வாத்தியார்
என்று இங்கே குறிப்பிடப் பட்டுள்ளவர் கல்வி கற்பித்த ஆசிரியர் ஆவார். முன்பு
கண்ட நால்வரும் மனிதனின் புறவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர்கள். ஆசிரியர்
மட்டுமே மனிதனின் அகவாழ்க்கையுடன் தொடர்பு உடையவர் ஆவார். ஆசிரியர் மனிதனின்
அகவாழ்க்கையுடன் எவ்வாறு தொடர்புடையவர் ஆவார் என்பதைப் பார்ப்போமா?
ஆசிரியர் நமக்குக் கல்வி கற்பிப்பவர். அவர் கற்பிக்கும் கல்வியை நன்கு கற்றுத்
தேறுகிறவர்களின் மனம் செம்மை அடையும். ஒருவருடைய மனம் எந்த அளவிற்குச் செம்மை
அடைந்துள்ளது என்பதை நம்மால் அளந்து அறிய இயலாது. அவரது செம்மையான செயல்பாட்டின்
மூலமாகவே நம்மால் அறிய முடியும். இதன் வாயிலாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள
ஐவரும் மனிதவாழ்க்கைக்கு அடிப்படையானவர்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
|