5.2 கடவுள் வாழ்த்து
நீதிநெறி விளக்கத்தின் கடவுள் வாழ்த்து நிலையாமைக் கருத்தை
உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நீரில்
குமிழி இளமை, நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை, நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று
|
 |
(சுருட்டும் = உருட்டும், நெடுந்திரைகள் = பெரிய
அலைகள்,
நமரங்காள் = நம்மவர்களே, வழுத்தாதது = வணங்காதது,
போற்றாதது; மன்று = தில்லை)
இப்பாடலில் இளமை நிலையில்லாதது,
செல்வம்
நிலையில்லாதது, உடல் நிலையில்லாதது என்று குமரகுருபரர்
குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நிலையாமைக் கருத்தையும்
விளக்குவதற்கு அவர் மூன்று நிலையில்லா உவமைகளையும்
தெரிவித்துள்ளார்.
நீரில் தோன்றும் குமிழியானது தோன்றிய சில நொடிகளில்
அழிந்து விடும். அதைப் போல மனித
வாழ்க்கையில்
இளமையும் நிலையில்லாது அழிந்துவிடும் என்கிறார். நீரில்
உருண்டும் சுருண்டும் வரும் பெரிய அலையானது வருவதும்
போவதுமாகிய தன்மை உடையது. அதைப் போல, செல்வமும்
நிலையில்லாமல் வருவதும் போவதுமாய் இருக்கும் என்கிறார்.
நீரில் எழுதும் எழுத்து நிலைத்து நிற்காது; எழுதும் போதே
அழிந்துவிடும். அதைப் போல மனித உடலும் நிலைத்து
நிற்காமல் அழிந்துவிடும் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.
இந்த உண்மையை அறிந்த பிறகும் இந்த மனித உடலைப்
போற்றுகிறார்களே என்று குமரகுருபரர் வருந்தியுள்ளார்.
மனிதன் நிலையற்றவன் என்றால் இந்த உலகில் நிலையானது
எது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
இந்த உலகில் நிலையானவன் இறைவன் ஒருவன்தான்.
நிலையான இறைவனை வணங்காமல் நிலையற்ற மனிதனைப்
போற்றுகிறார்களே என்று குமரகுருபரர் வருந்தியுள்ளார்.
மனித வாழ்க்கை நிலையற்றது என்றாலும் வாழும் காலம்
வரையில் நல்ல வழி எது, தீய வழி எது என்பதை மனிதன்
அறிந்து நல்ல வழியில் வாழவேண்டும். அதற்குத் தேவையான
அறக் கருத்துகளை நீதிநெறி விளக்கத்தின் வாயிலாகக்
குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.
|