5.5 முயற்சி

மனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். அந்த வெற்றிகளின் வழிகாட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது. தமிழில் தோன்றிய அறநூல்கள் யாவும் முயற்சியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளன.  

திருக்குறள் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று தெரிவித்துள்ளது. ஆத்திசூடி 'ஊக்கமது கை விடேல்’ என்று கூறியுள்ளது. முன்னோர் வழியில் நின்று குமரகுருபரரும் முயற்சியைப் பாடியுள்ளார்.

5.5.1 முயன்றால் முடியும்

எந்தச் செயலையும் இறுதிவரை முயன்று செய்யவேண்டும்; முடியாது என்று விட்டுவிட வேண்டாம். ஏனெனில் நம்மால் முடியாது என்று நாம் முடிவு செய்த செயல்கூட நல்ல முறையில் நம்மால் செய்யப்படக் கூடும்.  

உறுதி பயப்ப கடைபோகா ஏனும்
இறுவரை காறும் முயல்ப; இறும்உயிர்க்கும்
ஆயுள் மருந்துஒழுக்கல் தீதுஅன்றால்; அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில
(48)

(உறுதி பயப்ப = நன்மை தரும் செயல்கள், கடை போகா ஏனும் = வெற்றி பெறாவிட்டாலும், இறுவரைகாறும் = இறுதிவரை, இறும் = சாகின்ற, ஒழுக்கல் = கொடுத்தல், தீது அன்று = தீமை இல்லை, அல்லன = வெற்றி பெறாதன, ஆவன = வெற்றி பெறுவன)

என்னும் பாடல் இக்கருத்தை விளக்குகிறது.

உயிர் போகின்ற நிலையில் இருப்பவரின் உயிரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக மருந்து கொடுப்பது உண்டு. அந்த மருந்தால் அவர் உயிர் பிழைத்தாலும் பிழைப்பார். அதுபோல நன்மை தரும் ஒரு செயல் வெற்றியாக முடியாது’ என்று கருதினாலும் அச்செயலைச் செய்வதற்கு இறுதிவரை முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் விளைவாக அந்தச் செயல் வெற்றியாக முடிந்தாலும் முடிந்துவிடும். எனவே முயற்சியைக் கைவிடக்கூடாது என்கிறது நீதிநெறிவிளக்கம்.

5.5.2 விதியை வெல்லும் முயற்சி  

விதிப்படிதான் வாழ்க்கையில் எல்லாம் நிகழ்கின்றன என்னும் எண்ணத்தில் எந்தச் செயலையும் முயன்று செய்யாமல் இருந்தால் எந்தச் செயலையும் வெற்றியாக முடிக்க இயலாது. விதி ஒன்றாக இருந்தாலும் அந்த விதியையும் புறந்தள்ளி வெல்ல முடியும் என்னும் நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும்.  

முயலாது வைத்து முயற்று இன்மையாலே
உயல்ஆகா, ஊழ்த்திறந்த என்னார்- மயலாயும்
ஊற்றம் இல்விளக்கம் ஊழ்உண்மை காண்டும்என்று
ஏற்றார் எறிகால் முகத்து
(49)

(முயலாது = முயற்சி செய்யாது, முயற்று = முயற்சி, உயல் = வெற்றிபெறல், ஊழ்த்திறந்த = விதி வலிமையால், மயலாயும் = அறியா மயக்கத்தில், ஊற்றம் இல் = பாதுகாப்பு இல்லாத, ஏற்றார் = ஏற்றி வைக்க மாட்டார், எறி கால் முகத்து = காற்று வீசும் இடத்தில்)

விதியின் பயனால் விளக்கு அணையாது என்று காற்றடிக்கும் இடத்தில் அதனை ஏற்றி வைக்கக் கூடாது. காற்று மிகுதியாக வீசாத இடத்தில் விளக்கைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதைப்போல எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது. முயற்சியால் விதியை மாற்றி அமைத்து வெற்றிபெற முடியும் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

விதியை முயற்சியால் வெல்லமுடியும் என்பதற்குக் குமரகுருபரர் ஒரு சான்றைப் பின்வரும் பாடலில் காட்டியுள்ளார்.

உலையா முயற்சி களைகணா, ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகுஅறியப்
பால்முளை தின்று மறலி உயிர்குடித்த
கால்முளையே போலும் கரி
(50)

(உலையா = தளரா, களைகண் = பற்றுக்கோடு, ஆ = ஆகா, மறலி = மன், பால்முளை = ஊழ்வினையின்முளை, கால்முளை = மார்க்கண்டேயன், கரி = சான்று)

தளராத முயற்சியால் வெற்றிபெற முடியும் என்பதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான். எனவே விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்று யாரும் முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

• மார்க்கண்டேயன்

மிருகண்டு என்னும் முனிவருக்கும் மருத்துவதி என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவன் மார்க்கண்டேயன். விதிப்படி இவன் பதினாறாம் வயதில் இறப்பான் என்று இருந்தது. அந்த விதியை மாற்றுவதற்காக மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தபடி வணங்கிக் கொண்டிருந்தான். அந்த வேளையில் அவனது உயிரைக் கவர வந்த மன் தனது பாசக் கயிற்றை மார்க்கண்டேயன்மீது வீசினான். தன்னை வணங்கிக் கொண்டிருக்கும்போதே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த மன் மேல் சிவன் ஆத்திரம் கொண்டு அவனை மிதித்துக் கொன்றான். மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயதாகவே இருக்கும் என்று சிவன் அருள்புரிந்தான். பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி மனைச் சிவன் உயிர்பெறச் செய்தான். இதில் மார்க்கண்டேயன் தனது விடாமுயற்சியால் இறவாநிலை பெற்றான் என்று குமரகுருபரர் தெரிவித்துள்ளார்.