5.8 தெய்வம் யார்?

அனைவராலும் தெய்வம் என்று ஒரு கடவுள் வணங்கப்பட்டாலும் இவ்வுலகில் வாழுகின்ற மக்களில் ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவர் தெய்வமாக விளங்குவர் என்று மனிதருள் சிலரையும் தெய்வநிலைக்குக் குமரகுருபரர் உயர்த்தியுள்ளார்.

குலமகட்குத் தெய்வம் கொழுநனே; மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும்; அறவோர்க்கு
அடிகளே தெய்வம்; அனைவோர்க்கும் தெய்வம்
இலைமுகப் பைம்பூண் இறை
(26)

(குலமகள் = குடும்பப் பெண். கொழுநன் = கணவன், இலைமுகப் பைம்பூண் இறை = இலை வடிவ வேல்தாங்கிய முருகன்)

நல்ல ஒழுக்க நெறிப்பட்ட பெண்ணுக்கு அவளது கணவன் தான் தெய்வம். குழந்தைகளுக்கு அன்னையும் தந்தையும் தெய்வம். மாணவர்களுக்கு ஆசிரியர்களே தெய்வம். எல்லோருக்கும் இலை வடிவ வேலைக் கையில் தாங்கிய முருகனே தெய்வம் என்று குமரகுருபரர் கூறியுள்ளார்.

அன்னை, தந்தை, ஆசிரியர், ஆண்டவன் என்று நால்வரையும் தெய்வமாகக் கருதும் மரபு மக்களிடையே காணப்படுகிறது. ஔவையார் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று கொன்றை வேந்தனில் அன்னையையும் தந்தையையும் தெய்வமாகக் காட்டியுள்ளார். இந்த மரபை நன்கு உணர்ந்த குமரகுருபரர் அன்னை, தந்தை, ஆசிரியர் ஆகியோரைத் தெய்வமாகக் கூறி அவர்கள் உள்ளடங்கிய அனைவருக்கும் முருகனே தெய்வம் என்று முருகனை முழுமுதற் கடவுளாகக் காட்டியுள்ளார்.