6.5
பெரியோர்
பெருமை மிக்க செயல்களைச் செய்கிறவர்கள் பெரியோர்
எனப்படுவர். பெரியோர்கள் நல்ல பண்புடையவர்களாக
விளங்குவதால் அவர்கள் நேருக்கு நேர் புகழ்ச்சியை
எதிர்பார்ப்பதில்லை. தம்மைப் புகழ்கின்றவர்கள் என்றும்
புகழாதவர்கள் என்றும் வேறுபாடு பார்ப்பதில்லை. இவ்வாறு
புகழ்ச்சியை விரும்பாமல் நல்ல பண்புகளுடன் சமுதாய நலம்
கருதிச் செயல்படுகிற பெரியோர்களைச் சான்றோர்கள்
என்றும் சிறப்பித்துக் கூறுகிறோம். பெரியோர்களின் நல்ல
பண்பைப் பின்வரும் நன்னெறிப் பாடல் விளக்குகிறது.
|
என்றும் முகமன்
இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்பர், தீதுஅற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ,
நாவிற்கு உதவும் நயந்து (1) |
(முகமன் = நேருக்கு நேர் புகழ்தல், துன்று
= மிகுந்த,
பொலி = விளங்கும், குழலாய் = கூந்தலைக்
கொண்ட
பெண்ணே, பூங்கை = அழகிய கை, நயந்து = விரும்பி)
நமது உடலுக்குத் தேவையான உணவுப் பொருள்களை
நாக்குச் சுவைத்து வயிற்றுக்குள் செலுத்துகிறது. இந்த உணவுப் பொருள்களைக் கைதான்
நாக்குக்கு எடுத்துக் கொடுக்கிறது.
இவ்வாறு உணவுப் பொருள்களை நாக்குக்குத் தான் எடுத்துக்
கொடுப்பதால் தன்னைப் புகழ வேண்டும் என்று
கை
எதிர்பார்ப்பதில்லை. அதைப்போல, பெரியோர்களும்
தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்று கருதாமல் உதவி
செய்வார்கள். அவ்வாறு அவர்கள் உதவிசெய்யும் போது யார்
தம்மைப் புகழ்கிறவர் என்று பார்க்காமல் தேவைப்படும்
எல்லோருக்கும் உதவி செய்வார்கள் என்று பெரியோர்
பெருமையைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.
இச்செய்யுளில் நாக்கானது சுவைத்து உண்ணும்
பொருட்டு
நமது கை, உணவுப் பொருளை எடுத்துக் கொடுப்பது என்பது
இயல்பாக நாள்தோறும் நிகழும் நிகழ்ச்சி ஆகும். இந்த
இயல்பான நிகழ்ச்சியைப் போன்றே பெரியோர்கள், பொருள்
தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்து உதவுவதும்
இயல்பான நிகழ்ச்சியே என்று இப்பாடல் தெரிவித்துள்ளது.
6.5.1
பெரியோர் உள்ளம்
பெரியவர்கள் பிறர் படும் துன்பத்தைக் கண்டு பெரிதும்
வருந்துவார்கள். அவர்களுக்குத் தம்மால் ஆன உதவியைச்
செய்வதற்கு முயற்சி செய்வார்கள். இவ்வாறு
பிறர்
துன்பத்தைக் கண்டு பெரியோர் வருந்துவதும் இயல்பான
செயல் என்று பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
பெரியவர்தம்
நோய்போல் பிறர்நோய்கண்டு உள்ளம்
எரியின் இழுதுஆவர் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறஉறுப்பைக்
கண்டு கலுழுமே கண் (20) |
 |
(நோய் = துன்பம், எரி =
நெருப்பு, இழுது = நெய்,
தெரியிழாய் = தேர்ந்தெடுக்கப் பட்ட அணிகலன்களை
அணிந்த பெண்ணே, மண்டு = முற்றிய, கலுழும்
= நீர்
சொரியும்)
நமது உடலில் உள்ள ஏதாவது ஓர் உறுப்பில் ஏதேனும் காயம்
ஏற்பட்டாலும் அக்காயத்திற்காகக் கண்கள்
கண்ணீர்
வடிக்கும். அதைப்போல, பிறரது துன்பத்தைக்
கண்டு
பெரியோர்கள் வருந்துவார்கள் என்பதே இப்பாடலின்
பொருள் ஆகும். இதில் இரண்டு உவமைகள்
இடம்
பெற்றுள்ளன.
முதல் உவமையானது, பிறரது துன்பத்தைக்
கண்டு
பெரியவர்கள் படும் வருத்தத்தைக் கூறுகிறது. இரண்டாவது
உவமையானது அவர்கள் எவ்வாறு வருத்தப்படுவார்கள்
என்பதை விளக்குகிறது. முதல் உவமையின் விளக்கம்
பாடலின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
இனி,
இரண்டாம் உவமையின் விளக்கத்தைக் காண்போமா?
‘நெருப்பில் இட்ட நெய் போல’ என்பதுதான்
அந்த
இரண்டாம் உவமை. நெய்யை நெருப்பில் வைத்தால் அது
எவ்வாறு உருகுமோ அதைப்போல் பிறரது துன்பத்தைக்
கண்டு பெரியவர்கள் உருகுவார்கள் என்பதே
அதன்
விளக்கம். இதன் மூலம், பெரியவர்களின் உள்ளம் எவ்வளவு
மென்மையானது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
திருக்குறளிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது.
அறிவினான் ஆகுவது
உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை (315)
|
 |
என்னும் குறளே அது.
பிறர் அடையும் துன்பத்தைத் தாம் அடையும் துன்பமாக
எண்ணாதவர்கள் பெற்றுள்ள அறிவினால் எந்தப் பயனும்
இல்லை என்பது இக்குறள் தரும் பொருள்.
இங்கே
அறிவுடையவர்களுக்குக் கூறப்பட்டுள்ள பண்பு, நன்னெறியில்
பெரியவர்களுக்கு உரியதாய்க் கூறப்பட்டுள்ளது. பிறரது
துன்பத்தைக் கண்டு மனம் வருந்தும் அறிவுடையவர்களே
பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள் என்பதை
நாம் அறிந்துகொள்ள முடியும். |