3.1 குறவஞ்சி இலக்கியம்

குறவஞ்சி இலக்கியத்தைப் பற்றிய பொதுவான செய்திகளைக் காண்போம்.

• பெயர்க்காரணம்

குறவஞ்சி என்ற பெயர் இந்த இலக்கியவகைக்கு ஏன் வந்தது என்பதைக் காண்போமா? குறவஞ்சி என்ற இந்த இலக்கிய வகையினுள் இடம் பெறும் செய்திகளில், குறத்தி குறி கூறுதல், குறவனுடன் உரையாடுதல் என்பன பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்பர்.

இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. குறவஞ்சி என்ற சொல்லுக்குக் குறப்பெண் என்பது பொருள். வஞ்சி என்றால் பெண் என்று பொருள். இந்த இலக்கிய வகையில் குறத்தியின் செயல்களும், குறி வகைகளும் தலைமை இடம் பெறுகின்றன. எனவே, இந்த இலக்கிய வகைக்குக் குறவஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

3.1.1 நூல் பெயர் பெறும் முறை

நண்பர்களே! இனி, இந்தக் குறவஞ்சி என்ற இலக்கியம் பெயர் பெறும் முறையைப் பார்ப்போமா?

குறவஞ்சி இலக்கியம் பெயர்பெறும் முறையைப் பின்வரும் வரைபடம் மூலம் காட்டலாம்.

இதைச் சிறிது விளக்கமாகக் காண்போமா?

குறவஞ்சி நூல் எந்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுகிறதோ அந்த இடத்தின் பெயரை ஒட்டி நூலின் பெயர் அமையும். (எடுத்துக்காட்டு) திருக்குற்றாலக் குறவஞ்சி (திருக்குற்றாலம் என்ற இடம்).

நூலில் இடம்பெறும் பாட்டுடைத் தலைவனின் பெயர் அடிப்படையிலும் நூல் பெயர் பெறும். (எடுத்துக்காட்டு) தியாகேசர் குறவஞ்சி.

இந்த நூலில் பாட்டுடைத்தலைவன் திருவாரூர் இறைவன் ஆகிய தியாகேசர் ஆவார்.  (தியாகேசர் - சிவன்)

பாடப்படும் இடத்தின் பெயரும் பாட்டுடைத் தலைவனின் பெயரும் இணைந்தும் நூல் பெயர் பெறும் முறை உள்ளது. (எடுத்துக்காட்டு) தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி.

இந்நூல் பாடப்பட்ட இடம் தஞ்சாவூர். இது தஞ்சை என்றும் அழைக்கப்படும். பாட்டுடைத்தலைவன் தஞ்சாவூரில் உள்ள வெள்ளைப் பிள்ளையார்.

நூலினுள் இடம்பெறும் தலைவியின் பெயராலும் சில நூல்கள் பெயர் பெற்று உள்ளன. (எடுத்துக்காட்டு) தமிழரசி குறவஞ்சி

இந்த நூலுள் இடம்பெறும் தலைவியின் பெயர் தமிழரசி.

3.1.2 குறவஞ்சியின் தோற்றம்

இனி, குறவஞ்சி என்ற இலக்கிய வகை எவ்வாறு தோன்றியது என்று சுருக்கமாகப் பார்ப்போமா?

தொல்காப்பியத்தில் குறவஞ்சி

குறவஞ்சி இலக்கிய வகையின் கரு தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது. களவுக் காலத்தில் தலைவி தலைவனைப் பிரிந்து வாடுகின்றாள். இதனை வளர்ப்புத் தாயும் பெற்ற தாயும் காண்கின்றனர். தலைவி ஏன் வாடிக் காணப்படுகின்றாள் என்பதை அறிய முயல்கின்றனர். எனவே, கட்டு, கழங்கு என்பன மூலம் குறி பார்க்கின்றனர். இதைத் தொல்காப்பியம்

கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்
ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்

(தொல்காப்பியம்: பொருள் அதிகாரம்: களவியல்: 24)

என்று கூறுகிறது.

கட்டு

மேலே கூறியவற்றுள் கட்டு என்றால் என்ன என்று பார்ப்போமா? முறத்தில் அல்லது சுளகில் நெல்லைப் பரப்பி வைப்பர். அந்த நெல்லை எண்ணிக் குறி பார்ப்பர். இது கட்டு எனப்படும்.

கழங்கு

கழங்கு என்றால் என்ன? இதுவும் ஒருவகையான குறிபார்த்தல் ஆகும். கழங்கு என்பது கழற்சிக்காய். இந்தக் காய்கள் மூலம் முருகனால் நோய் ஏற்பட்டு உள்ளதா என்று அறிவதற்காக வேலன் என்பவன் குறிபார்ப்பான்.

இவற்றால், குறிபார்த்தல் என்ற வழக்கம் தொல்காப்பியத்தில் சுட்டப்படுவதை அறியலாம். இதனைக் கருவாகக் கொண்டு பிற்காலத்தில் குறவஞ்சி இலக்கியம் தோன்றியது எனலாம்.

இலக்கியங்களில் குறவஞ்சி

குறவஞ்சி இலக்கிய வகையின் கரு பழங்கால இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படுகின்றது. அதற்கு ஒரு சான்றைக் காண்போமா?

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில்.

பொய்யா மரபின் ஊர் முதுவேலன்
கழங்குமெய்ப் படுத்துக் கன்னம்தூக்கி
முருகுஎன மொழியும்

                      (ஐங் : 245)

(பொய்யாத = பொய்க்காத; கழங்கு = கழற்சிக்காய்; மெய்ப்படுத்து = உடம்பில் அணிந்து; கன்னம் = படிமக் கலம்/முகம் பார்க்கும் கண்ணாடி) என்று குறிக்கப்பட்டுள்ளது.

இனி, இந்தப் பாடல் கூறும் கருத்தைப் பார்ப்போம். வேலன் வெறியாடுகின்றான். அவன் தன் உடம்பில் கழற்காயை அணிந்துள்ளான். படிமக் கலத்தைத் தூக்கி வைத்துள்ளான். தலைவியின் துயருக்கு முருகு என்னும் அணங்கின் குறையே காரணம் என்கின்றான். இப்பாடலில் குறி கூறும் செய்தி உள்ளது.

இதைப்போன்று பெருங்கதை போன்ற நூல்களிலும் குறி பார்க்கும் செய்திகள் இடம்பெறுகின்றன.

இத்தகைய செய்திகளைக் கருவாகக் கொண்டு குறவஞ்சி என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம்.

நண்பர்களே! குறவஞ்சி என்ற இலக்கிய வகையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டாமா? அதற்குத் திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற நூலைச் சான்றாக எடுத்துக் கொள்வோம். இந்த நூலின் துணையால் குறவஞ்சி என்ற இலக்கிய வகையின் அமைப்பையும் பொருளையும் விளங்கிக் கொள்ளலாம்.