3.4 வசந்த வல்லி

குற்றாலக் குறவஞ்சி நூலின் தலைவியின் பெயர் வசந்த வல்லி. அவள் குற்றால நாதர் உலாவரும் காட்சியைக் காண வருகின்றாள். அப்போது அவளைப் பற்றிய செய்திகள் நூலில் இடம்பெறுகின்றன. அவற்றைக் காண்போமா?

• வசந்த வல்லியின் தோற்றம்

உலாவைக் காணவரும் வசந்தவல்லியின் தோற்றம் காட்டப்படுகிறது. அந்தப் பாடல் இதோ.

பொன் அணித் திலகம் தீட்டிப்
பூமலர் மாலை சூட்டி வன்ன மோகினியைக் காட்டி
வசந்த மோகினி வந்தாளே

(பாடல் 16: 3 - 4)

TVU - c0123 - Audio Button

என்கிறார்.

(திலகம் = பொட்டு; தீட்டி = இட்டு; வன்ன = அழகிய; மோகினி = மோகினிப் பெண் வடிவம்; காட்டி = தோற்றம் கொண்டு)

நெற்றியில் நல்ல அழகு உடைய திலகம் இட்டு உள்ளாள். தலையில் பூமாலை சூடியுள்ளாள். அழகிய மோகினிப் பெண் போல் தோற்றம் கொண்டு உள்ளாள். இத்தகைய வசந்த வல்லி என்ற பெண் உலாவைக் காண வருகின்றாள்.

3.4.1 வசந்த வல்லியின் பந்தாட்டம்

தலைவியாகிய வசந்த வல்லி தலைவன் உலா வரும்போது பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பந்து விளையாடும் காட்சி மிக அழகாக வருணிக்கப்படுகிறது. ஓசை நயம் மிக்க அந்தப் பாடலைப் பார்ப்போமா?

பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை
     புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
     மதன் சிலை வண்டு ஓட இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்
     என்று இடை திண்டாட மலர்ப்
பங்கயமங்கை வசந்த சவுந்தரி
    பந்து பயின்றனளே

(பாடல் 19: 2)

TVU - c0123 - Audio Button

(பொங்கு = மிக்க; கனம் = கனத்த; குழை = காது அணி; மண்டிய = நெருங்கிய; கெண்டை = கெண்டைமீன்; மங்குல் = மேகம்; மதன் = மன்மதன்; சிலை = வில்; என்படும் = என்ன பாடுபடும்; பங்கய மங்கை = தாமரை மலரில் இருக்கும் திருமகள்; பயின்றனளே = விளையாடினளே)

வசந்த வல்லி காதுகளில் குழை என்ற அணிகலனை அணிந்து உள்ளாள். அது அவளுடைய கெண்டை மீன் போன்ற கண்களின் மீது புரண்டு புரண்டு ஆடுகின்றது. மேகம் போன்ற கூந்தல். அதிலிருந்து வண்டுகள் கலைந்து செல்கின்றன. அது கண்டு மன்மதனின் வில்லில் இருந்து நாண் ஆகிய வண்டுகளும் பறந்து போகின்றன. இதைப் பார்த்து உலகம் என்ன பாடுபடுமோ என்று இவள் இடை துவண்டு துவண்டு நடுங்குகின்றது. இவ்வாறு திருமகளைப் போன்ற வசந்த வல்லி பந்து விளையாடுகிறாள் என்கிறார் புலவர். நீங்கள் இந்தப் பாடலை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பாருங்களேன்!

இந்தப் பாடல் அடிகளில் பந்து மேலும் கீழும் சென்று வருவது போன்ற ஓசை கேட்கிறதா? சொற்களின் ஓசைநயம் அந்த உணர்வை உங்களுக்குத் தர வேண்டும். தருகிறதா என்று பாருங்கள்! தந்தால் எழுதிய ஆசிரியருக்கு அது வெற்றி இலக்கியத்தைச் சுவைக்கத் தெரிந்துள்ளது என்பதால் படிக்கின்ற உங்களுக்கும் அது வெற்றிதான்!! வசந்த வல்லியின் கண்களுக்குக் கெண்டை மீன்களும் கூந்தலுக்கு மேகமும் ஒப்புமை கூறப்படுகின்றன.

3.4.2 வசந்த வல்லியின் மயக்கம்

உலா வரும் தலைவராகிய திரிகூடநாதரைத் தலைவி காண்கிறாள். காதல் கொள்கிறாள். அவர் அழகில் மயங்குகிறாள். இந்த நிகழ்ச்சியைக் காட்டும் ஒரு பாடலைப் பார்ப்போமா? அவள் இதுவரை உணராத உணர்வை அடைகிறாள். இறைவன் மீது கொண்ட காதலால் ஏங்கித் தவிக்கிறாள். அவளுடைய உணர்வுகளைச் சொற்களிலே சித்திரமாகத் தீட்டுகிறார் திரிகூட ராசப்பக் கவிராயர்.

     வாகனைக் கண்டு உருகுது ஐயோ - ஒரு
         மயக்கம் அதாய் வருகுது ஐயோ
     மோகம் என்பது இதுதானோ - இதை
         முன்னமே நான் அறிவேனோ?
     ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
         அன்னை சொல்லும் கசந்தேனே
     தாகம் அன்றிப் பூணேனே - கையில்
         சரிவளையும் காணேனே

(பாடல் 26:2)

TVU - c0123 - Audio Button

(வாகன் = வாகான உடலினன்; ஆகம் - உடம்பு; பசந்தேன் = பசலை நிறம் கொண்டேன்; கசந்தேன் = வெறுத்தேன்; தாகம் = ஆசை)

தலைவனைக் கண்டதும் என் மனம் உருகுகின்றது. அதனால் மயக்கம் ஏற்படுகின்றது. மோகம் என்பது இதுதானோ? இதை நான் இதற்கு முன்னால் அறியவில்லை. உடம்பு முழுதும் பசலை நோய் ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் கூறுகின்ற சொல்லும் கசப்பாய் உள்ளது. இவரிடம் எனக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. என் கைகளில் அணிந்துள்ள வளையல்களைக் காணவில்லையே என்று தலைவி மயங்கிக் கூறுவதாகக் காட்டப்படுகிறது. இப்பாடலில் ஏக்கம் நிறைந்த தலைவியின் குரல் வெளிப்படுவதை உணர முடிகிறது அல்லவா?

3.4.3 வசந்தவல்லி கூடல் இழைத்தல்

நண்பர்களே! கூடல் இழைத்தல் என்றால் என்ன?

 

தலைவனிடம் காதல் கொண்ட பெண் தரையில் மணலைப் பரப்புவாள். கண்களை மூடிக் கொள்வாள். மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு சுட்டுவிரலால் மணலில் வட்டமாக வரைவாள். அப்போது சுட்டுவிரல் தொடங்கிய இடத்தில் வந்து முடிந்தால் தலைவி நினைத்தது நடக்கும் என்று அறிவாள். சரியாகப் பொருந்தாவிட்டால் தலைவி நினைத்தது நடக்காது என்று அறிவாள். இதுவே கூடல் இழைத்தல் ஆகும்.

• தலைவி தோழியைத் தூது அனுப்புதல்

தலைவன் ஆகிய திரிகூடராசரின் அழகில் மயங்கிய தலைவியாகிய வசந்தவல்லி தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகிறாள். இந்த நிகழ்ச்சி இடம்பெறும் பாடல்களில் ஓர் அடியைக் காண்போம்.

தூது நீ சொல்லி வாராய் பெண்ணே
    குற்றாலர் முன்போய்த் தூது நீ சொல்லி வாராய்

(பாடல் 43:1)

TVU - c0123 - Audio Button

என்று தலைவி தோழியிடம் தூது சென்று வருமாறு வேண்டுகிறாள்.

தோழி தலைவனிடம் தூது செல்கிறாள். தூது சென்ற தோழி வருவதற்கு முன்னால் வசந்த வல்லி கூடல் இழைத்துப் பார்க்கிறாள்.