3.5 குறத்தி

இனி திருக்குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் குறத்தியைப் பற்றிய செய்திகளைக் காண்போமா?

தலைவியாகிய வசந்த வல்லி கூடல் இழைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அப்போது குறி சொல்லும் குறத்தி வருகின்றாள். குறத்தியின் வருகையைக் கூறும் பாடல் அடிகள் இதோ.

கூடல் வளைக்கரம் அசைய மாத்திரைக்கோல்
ஏந்தி மணிக் கூடை தாங்கி
மாடமறுகு ஊடு திரிகூட மலைக்
குறவஞ்சி வருகின்றாளே

(பாடல் 48: 2 - 4)

(கூடல் = ஒன்று சேர்ந்த; வளைக்கரம் = வளையல் அணிந்த கை; தாங்கி = ஏந்திக்கொண்டு; மறுகு = தெரு; ஊடு = நடுவில்)

குறத்தி வருகின்றாள். வரும்போது வளையல்கள் அணிந்த அவள் கைகள் அசைகின்றன. கையில் மாத்திரைக்கோலை ஏந்தி உள்ளாள். கூடையையும் கையில் வைத்துள்ளாள். இவ்வாறு குறத்தி திருக்குற்றால நகரின் தெருவில் வருகின்றாள். குறத்தி குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக் கொண்டு வருவதைக் கண்டதும் வசந்தவல்லி ஏன் மகிழ்கிறாள்? நண்பர்களே, உங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா? ஆம், தான் விரும்பிய தலைவனின் புகழையும் அவன் மலையையும் பாடி வருவதால் மகிழ்கிறாள். மீண்டும் தன் தலைவனின் புகழைக் கேட்க அவள் உள்ளம் ஏங்குகிறது. அதனால் குறத்தியின் வருகை அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

3.5.1 குறத்தி தன் மலைவளம் கூறல்

குற்றால நகரின் தெருவில் வரும் குறத்தி குற்றாலநாதரின் பெருமைகளைப் பாடிக்கொண்டு வருகின்றாள். அவளை வசந்த வல்லி  பார்க்கின்றாள். மகிழ்ச்சியோடு குறத்தியை அழைக்கின்றாள். குறத்தியிடம் அவள் மலை வளத்தைக் கூறுமாறு கேட்கின்றாள். குறத்தி குற்றால மலையாகிய தன் மலையின் வளங்களைக் கூறுகின்றாள். ஓசை நயம் மிகுந்த அப்பாடல்களில் ஒரு பாடலைப் பார்ப்போமா?

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்

தேன் அருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

(பாடல் 54: 1)

TVU - c0123 - Audio Button

(வானரம் = ஆண்குரங்கு; மந்தி = பெண்குரங்கு; வான் கவிகள் = வான் உலகில் வாழும் தேவர்கள்; கானவர் = வேடர்; விழி எறிந்து = கண்களால் ஏறெடுத்துப் பார்த்து; கமனசித்தர் = வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள்; காயசித்தி = காட்டு மூலிகைகள்; விளைப்பர் = வளர்ப்பார்கள்; திரை = அலை; பரி = குதிரை; கால் = சக்கரம்; கூனல் = வளைந்த)

ஆண்குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்துத் தழுவுகின்றன. அவற்றுள் சில பழங்களைப் பெண் குரங்குகள் சிதறுகின்றன. அந்தப் பழங்களைத் தேவர்கள் இரந்து கேட்கின்றனர். வேடர்கள் தேவர்களைத் தம் கண்களால் ஏறெடுத்துப் பார்த்து அழைக்கின்றனர். வானத்தில் செல்ல வல்ல சித்தர்கள் மூலிகைகளை வளர்க்கின்றனர். மலையிலுள்ள அருவியின் அலைகள் எழுந்து வானத்தில் வழிந்து ஓடுகின்றன. இதனால் சூரியனின் குதிரைகளுடைய கால்களும் தேர்ச் சக்கரங்களும் வழுக்கி விழுகின்றன. இத்தகைய சிறப்புகளை உடையது குற்றால மலை என விளக்குகிறாள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.

3.5.2 குறத்தி நாட்டு வளம் கூறல்

குறத்தி குற்றால மலையின் வளங்களைக் கூறி முடிக்கின்றாள். பின், வசந்த வல்லி குறத்தியிடம் அவள் நாட்டு வளங்களைக் கூறுமாறு கேட்கின்றாள். அதற்குக் குறத்தி தன் நாட்டு வளங்களைப் பலவாறு கூறுகின்றாள். சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
     ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
     வருந்தக் காண்பது மின்னார் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
     புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி
     திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே

(பாடல் 56:9)

TVU - c0123 - Audio Button

(பூம் புனல் = பூக்களைச் சுமந்துவரும் நீர்; ஒடுங்கக் காண்பது = அடக்கம் பெற்றது; வருந்த = கருவுற்று வருந்த; கிண்கிணி = கால் அணி; சீர்த்தி = புகழ்)

எளிமையும் இனிமையும் நிறைந்த இப்பாடல் ஓசையில் சிறந்து நிற்கிறது. குற்றாலநாதர் நாட்டின் வளம் குறத்தியின் செம்மாந்தக்குரலில் வெளிப்படும்போது பெருமிதச் சுவை தோன்றி இலக்கிய இன்பத்தை அனுபவிக்கச் செய்கிறது. குற்றால நாதருக்கு உரிய தெற்குத் திசையில் உள்ள நாடு குறத்தியின் நாடு. இந்த நாடு எத்தகைய வளம் மிக்கது என்பதைக் குறத்தி கூறுகின்றாள்.

இந்த நாட்டை விட்டுச் செல்வன பூக்களைச் சுமந்து வரும் நீர் மட்டுமே. அடங்கி இருப்பது யோகம் செய்பவர்களிள் மனம் மட்டுமே. மெலிந்து காணப்படுவது பெண்களின் இடை மட்டுமே. துன்பப்படுவது முத்துகளை ஈனும் சங்கு மட்டுமே. நிலத்தில் போடுவதாக உள்ளது நெல் முதலிய விதைகளே. ஒலி செய்வது கிண்கிணி என்ற அணிகலனில் உள்ள மணிகளே. ஈட்ட அல்லது சம்பாதிக்க முயல்வது நல்ல அறமும் புகழும் மட்டுமே என்று கூறுகிறாள். எனவே, தன் நாட்டில் வாடுவோரும், வருந்துவோரும் கிடையாது. எல்லோரும் மகிழ்வுடன் வாழ்கின்றனர் என்கிறாள்.

3.5.3 குறத்தி குறிகூறல்

குறத்தியிடம் வசந்தவல்லி குறியின் தன்மைகளைக் கேட்கின்றாள். அதற்குக் குறத்தி தன் குறியின் சிறப்புகளைப் பலவாறு கூறுகின்றாள். இப்பகுதியுள் இடம்பெறும் ஒரு பாடலைக் காண்போமா?

வித்தாரம் என் குறி அம்மே! மணி
முத்து ஆரம் பூணும் முகிழ் முலைப் பெண்ணே!
வித்தாரம் என் குறி அம்மே

(பாடல் 16)

TVU - c0123 - Audio Button

(வித்தாரம் = சிறப்புடையது; அம்மே = அம்மா; ஆரம் = மாலை; பூணும் = அணியும்; முகிழ் = மேல் எழுந்து தோன்றும்)

மணி, முத்து ஆகியவற்றால் ஆன அணிகலன் அணிந்துள்ள பெண்ணே! என் குறி கூறும் திறன் சிறப்பு உடையது அம்மா என்று தொடங்கித் தன் குறிச் சிறப்பைக் குறத்தி கூறுகின்றாள்.

குறிகேட்டலும் குறி கூறலும்

தன் குறிச் சிறப்பைக் கூறிய குறத்தி தலைவிக்குக் குறி கூறுகிறாள். சான்றாக ஒரு பாடலைக் காண்போம்.

சொல்லக்களோய் குறி சொல்லக் கேளாய் அம்மே
    தோகையர்க்கு அரசே குறி சொல்லக் கேளாய்
முல்லைப் பூம் குழலாளே நன்னகரின் வாழ் முத்து
    மோகனப் பசும் கிளியே சொல்லக் கேளாய்
பல்லக்கு ஏறும் தெருவில் ஆனை நடத்தி மணிப்
    பணி ஆபரணம் பூண்ட பார்த்திபன் வந்தான்
செல்லப் பூம் கோதையே நீ பந்து அடிக்கையில்
                 அவன்
    சேனை கண்ட வெருட்சி போல் காணுதே அம்மே

(பாடல் 74)

TVU - c0123 - Audio Button

என்கிறாள்.
(தோகையர் = பெண்கள்; குழலாள் = கூந்தலை உடையவள்; முத்து மோகனம் = முத்துகளால் ஆன மாலை; ஆனை = எருது ஊர்தி; நடத்தி = செலுத்தி; பணி = பாம்பு; ஆபரணம் = அணிகலன்; பார்த்திபன் = மன்னன்; சேனை = உலாவின் போது வந்த படைகள்; வெருட்சி = அச்சம்)

 


 

வசந்த வல்லியைப் பெண்களுக்கு அரசியே! முல்லைப் பூக்களை அணிந்து உள்ள கூந்தலை உடையவளே! முத்து மாலை அணிந்த பச்சைக்கிளி போன்றவளே! என்று குறத்தி அழைக்கின்றாள். மக்கள் செல்லும் தெருவில் எருதின் மேல் ஏறிப் பாம்பை அணிகலனாக அணிந்து குற்றால நாதர் வந்தார். அப்போது நீ பந்து விளையாடிக் கொண்டு இருந்தாய். குற்றால நாதரின் உலாவில் வரும் படைகளை நீ பார்த்தாய். அதனால் ஏற்பட்ட அச்சம் போலவே உன் முகத்தில் குறி தோன்றுகிறது என்று குறத்தி குறி கூறுகிறாள்.

இதைத் கேட்டதும் வசந்த வல்லி வெட்கத்தால் தலை குனிகின்றாள். குறத்திக்கு அணிகலன்களைப் பரிசாக வசந்தவல்லி கொடுக்கின்றாள்.