4.5 குற்றியலுகரம்

உகரம் ஒரு மாத்திரை உடையது. இந்த ஒரு மாத்திரை அளவும் குறைந்து (குறுகி) ஒலிக்கிற இடங்களும் உண்டு. அப்போது அது குற்றியலுகரம் (குறுகி ஒலிக்கின்ற உகரம்) என்று அழைக்கப்படும்.

அதற்குச் சில வரையறைகள் உண்டு.

  1. வல்லின மெய்களோடு சேர்ந்த உகரம் மட்டுமே குற்றியலுகரமாக வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதாவது, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு எழுத்துகள் மட்டுமே இந்த வகையில் அடங்கும்.


  2.  

  3. இந்த ஆறும் சொல்லின் கடைசி எழுத்தாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்கு, பேசு, நாடு, காது, அம்பு, ஆறு.
     

  4. தனிக்குறில் எழுத்தை அடுத்து வந்தால் அது குற்றியலுகரம் ஆகாது. எடுத்துக்காட்டு: அது, பசு, வடு, அறு முதலியவை.

குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

  1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்

  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

  3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

  4. வன்தொடர்க் குற்றியலுகரம்

  5. மென்தொடர்க் குற்றியலுகரம்

  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

என்பவை ஆகும்.

• நெடில் தொடர்க் குற்றியலுகரம்

தனியாக உள்ள நெடில் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாகு
மூசு
பாடு
காது
ஆறு

• ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு ,து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ,டு :

அஃது (அது என்பது பொருள்)
கஃசு (பழங்காலத்து நாணயம் ஒன்று)

• உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்

உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால் உயிர்மெய் எழுத்துகளில் உள்ள குறில் எழுத்துகள் மட்டும் உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். எனவே, இது, குறில்தொடர்க் குற்றியலுகரம் என்றும் அழைக்கப்படும்.

உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் மட்டுமே வரும்.

எ.டு :

வரகு
தவிசு
முரடு
வயது
கிணறு

• வன்தொடர்க் குற்றியலுகரம்

வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

பாக்கு
கச்சு
பட்டு
பத்து
மூப்பு
காற்று

• மென்தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

சங்கு
பஞ்சு
நண்டு
பந்து
பாம்பு
கன்று

• இடைத்தொடர்க் குற்றியலுகரம்

இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வந்தால் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.டு :

மூழ்கு
செய்து
மார்பு
பல்கு

4.5.1 முற்றியலுகரம்

மேலே காட்டிய கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகள் தனிக் குறிலை அடுத்து வந்தால் ஓசை குறைவதில்லை.

நகு, பசு, தடு, எது, மறு

கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின மெய்யுடன் கூடிய உகர எழுத்துகள் வந்தாலும், முதல் எழுத்து, குறில் எழுத்தாக இருப்பதால், இவை குற்றியலுகரம் அல்ல.

மெல்லின, இடையின மெய்களோடு சேர்ந்த உகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்போது குறைந்து ஒலிப்பதில்லை.

அணு, தனு, உறுமு, குழுமு, தும்மு, பளு,
எரு, ஏவு இரவு, நிறைவு, உறவு, விரிவு
ஓய்வு, பிறழ்வு, நிகழ்வு
வலு, ஏழு, உழு, துள்ளு

மேலே காட்டப்பட்டுள்ள சொற்களின் இறுதியில் மெல்லின, இடையின மெய் எழுத்துகள் உகரத்துடன் சேர்ந்து வந்துள்ளன. அவை குறைந்து ஒலிப்பதில்லை. எனவே அவை குற்றியலுகரம் அல்ல. ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகரம் குறைந்து ஒலிக்காமல் முழு அளவில் ஒலிக்குமாயின் அது முற்றியலுகரம் எனப்படும். மேலே காட்டியுள்ள சொற்களில் உள்ள உகரங்கள் எல்லாம் முற்றியலுகரங்கள் ஆகும்.

ஒரு சொல்லின் இறுதியில் வரும் உகரம் முற்றியலுகரமாகவோ குற்றியலுகரமாகவோ இருக்கும்.