1.1 தொல்காப்பியரின் விளக்கம்

தமிழ் மொழியில் இன்று வரை கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம். இதனை இயற்றியவர் தொல்காப்பியர். இந்நூல் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நூல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் தமிழில் உள்ள ஐந்து இலக்கணங்களையும் விளக்குகின்றது. இத்தகைய பழமையான தமிழ் இலக்கண நூல், எழுத்துகளின் பிறப்புப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது சிறப்புடையதாகும்.

1.1.1 எழுத்தொலி பிறத்தல்

எழுத்தை உச்சரிக்க முயலும் ஒருவரின் கொப்பூழில் (உந்தி) இருந்து காற்று மேல் நோக்கி எழுகின்றது. இவ்வாறு எழும் காற்று அவரது தலை, கழுத்து, நெஞ்சு (மார்பு) ஆகிய இடங்களில் சென்று தங்கி (தொட்டு) நிற்கும். பின்னர், தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய இந்த மூன்று உறுப்புகளுடன், பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து இந்த எட்டு உறுப்புகளின் பொருத்தமான முயற்சியின் விளைவாக வெவ்வேறு எழுத்து ஒலிகள் பிறக்கின்றன. தமிழில் உள்ள எல்லா எழுத்து ஒலிகளும் இந்த முறையிலேயே பிறக்கின்றன. இதுவே எழுத்துப் பிறப்பின் பொதுவான இலக்கணம் ஆகும். (தொல்காப்பியம். எழுத்ததிகாரம், 83)

  • வெவ்வேறு ஒலிகள்
  • ஆனால், எல்லா எழுத்தொலியும் தோன்றுவதற்கு இந்த எட்டு உறுப்புகளின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுவது இல்லை. தேவைப்படும் உறுப்புகள் பொருந்தி இயங்கும் தன்மைக்கேற்பவே வெவ்வேறு ஒலிகள் தோன்றும். ஒவ்வோர் எழுத்தொலியும் தோன்றுவதற்கு வெவ்வேறு உறுப்புகளின் ஒத்துழைப்புக் காரணமாக அமைகின்றது.

    1.1.2 தேவைப்படும் முயற்சி

    ஒலியை எழுப்ப நினைக்கும் ஒருவர் முதலில் செய்ய வேண்டியது முயற்சி ஆகும். இந்த முயற்சியை இலக்கண ஆசிரியர்கள் 'உயிரின் முயற்சி’ என்று அழைக்கின்றனர். ஒலியை எழுப்பக் கருதிய ஒருவரின் உயிர்ப்புத் தன்மையே அடுத்தடுத்த முயற்சிக்குக் காரணமாக அமைகிறது. அதனைத் தொடர்ந்து உறுப்புகளின் ஒத்துழைப்புகளுக்கும் அதுவே காரணமாகிறது. எனவே எழுத்து ஒலிகள் தோன்றுவதற்கு மனித முயற்சி மிகவும் இன்றியமையாததாகும்.

    இவ்வகையில், தொல்காப்பியரின் கருத்துப்படி, உயிரின் முயற்சியால் கொப்பூழில் இருந்து காற்று எழுகின்றது. இக்காற்று மேல்நோக்கிச் செல்கின்றது. இம்முயற்சிக்கு உறுப்புகள் துணை செய்கின்றன. இந்த உறுப்புகளில் அக்காற்று சென்று பொருந்துகின்றது. மேல்நோக்கி எழும் இக்காற்று பொருந்தும் உடல் உறுப்புகளைக் குறிப்பிடும் போது, தலை, கழுத்து, நெஞ்சு என்ற வரிசையில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    1.1.3 ஒத்துழைக்கும் உறுப்புகள்

    எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் உறுப்புகளாகத் தொல்காப்பியர் எட்டு உறுப்புகளைக் குறிப்பிடுகின்றார். இந்த எட்டு உறுப்புகளை இரண்டு பிரிவாகப் பகுத்துக் காணலாம். அவை,

    (1) காற்றுப் பொருந்தும் உறுப்புகள்.
    (2) ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்

    என்பன.
     

  • காற்றுப் பொருந்தும் உறுப்புகள்:
  • காற்றுப் பொருந்தும் உறுப்புகள் 3 ஆகும். அவை,

    தலை,
    கழுத்து,
    நெஞ்சு.

    என்பன.
     

  • ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் உறுப்புகள்:
  • எழுத்தொலிகள் தோன்றுவதற்கு ஒன்றுடன் ஒன்று இயைந்து ஒத்துழைக்கும் உறுப்புகள் எட்டு ஆகும். அவை, முதலில் கூறப்பட்ட தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்றுடன்,

    பல்,
    இதழ்,
    நாக்கு,
    மூக்கு,
    அண்ணம் ஆகிய ஐந்தும், சேர்ந்து 8 ஆகும்.