1.4
எழுத்துப் பிறப்பும் மொழியியலும்
எழுத்தொலிகளின் பிறப்புப் பற்றி
இலக்கண நூல்கள் தந்த
விளக்கங்களை விரிவாகக் கண்டோம். எழுத்தொலிகள் பற்றி
மொழிநூல் அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
மொழிநூல் அறிஞர்கள் இது குறித்து ஆராய்ந்து விளக்கங்களை
வெளியிட்ட பின்னரே, இத்துறையில் பல உண்மைகள்
வெளிப்பட்டன என்று கூறலாம். எனவே எழுத்தொலிகள்
பிறப்புப் பற்றி மொழிநூல் அறிஞர்கள் தெரிவிக்கும்
கருத்துகளையும் இங்கு ஒப்பிட்டுக் காண்பது பொருத்தம் உடையது.
1.4.1
மரபு
ஒரு மொழிக்கு இலக்கணம் வகுக்கும்
மரபுவழி இலக்கண
ஆசிரியர்கள் மொழியின் எழுத்து வடிவத்திற்கே முதன்மை
தருவர். அதனை விளக்கிக் கூறுவர். ஏட்டில் இலக்கிய வடிவம்
பெற்ற எழுத்து வடிவத்தினை ஆராய்ந்து அதன் நுட்பத்தை
வெளிப்படுத்துவர். மொழியின் பேச்சு வடிவத்தை ஆய்வுக்கு
ஏற்றுக் கொண்டு அதனை விளக்குவது மரபுவழி இலக்கண
நூல்களில் காணப்படுவது இல்லை. இந்த நிலை உலக மொழிகள்
அனைத்திற்கும் பொதுவானதாகும்.
1.4.2 மொழியியல்
ஒரு மொழியை அறிவியல் பார்வையோடு
அணுகவேண்டும்
என்ற கருத்து எழுந்த போது ‘மொழியியல்’ என்ற பிரிவு
உருவானது. மொழியியல் துறையில் ஈடுபடும் அறிஞர்கள் ஒரு
மொழியின் எழுத்துவடிவத்தை விட அதன் பேச்சு வடிவத்தையே
தங்கள் ஆய்விற்கு ஆதாரங்களாக எடுத்துக் கொண்டனர்.
மொழியியலார் பேச்சு மொழிதான் ஒரு மொழியின் உண்மையான
இயல்பினை எடுத்துரைக்கும் என்று கருதுகின்றனர். இதனால்
பேச்சொலி எழுவதற்குக் காரணமாக இருக்கும் மொழியின் ஒலி
வடிவத்தில் தங்கள் ஆர்வத்தைச் செலுத்தினர். எனவே மொழியின்
ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் மொழியியல்
ஆய்வுகள் எழுந்தன.
1.4.3 மொழியியல் உண்மைகள்
பேச்சு ஒலிகளை ஆய்வு செய்ய முற்பட்டவர்
மொழியியல்
அறிஞர்கள். இந்த ஆய்வு, பேச்சு ஒலிகள் தோன்றுவதற்குக்
காரணமாக அமையும் உடல் உறுப்புகளையும் ஆய்வு செய்யத்
தூண்டியது. எனவே எந்த ஒலி தோன்றுவதற்கு எந்த உறுப்பின்
முயற்சியும் ஒத்துழைப்பும் பயன்படுகின்றது என்பதை ஆய்வு
செய்து கண்டனர். அந்த ஆய்வின்படி பல உண்மைகளை
வெளியிட்டனர். இந்த மொழியியல் ஆய்வுகள் எல்லாம் 19-ஆம்
நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டிலும் இடம்பெற்றன. மேனாட்டு
அறிஞர்கள் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கி 20-ஆம்
நூற்றாண்டில் இதில் மிகவும் முனைந்து ஈடுபட்டனர்.
இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகளைத்
தொல்காப்பியமும் நன்னூலும் முன்பே
எடுத்துரைக்கக்
காணலாம்.
எனவே, தமிழ் இலக்கணம் அறிவியல்
முறைப்படி
அமைந்தது என்பது இதனால் வெளிப்படுகின்றது. 2500
ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய தொல்காப்பியம் இன்றைய
மொழியியலாரின் கருத்துகளை அன்றே விளக்கி இருப்பது தமிழ்
மொழியின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.
|