3.1
மெய்யெழுத்துகள் பிறப்பு - தொல்காப்பியர் கருத்து
மெய்யெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன
என்பதைத்
தொல்காப்பியம் தெளிவாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம்
மெய்யெழுத்துகளின் பிறப்பினைக் குறித்து விளக்கும்போது இரண்டு
வகையாக விளக்குகின்றது. அவை,
(1) |
வல்லின, மெல்லின மெய்களின்
பிறப்பு |
(2) |
இடையின மெய்களின் பிறப்பு |
3.1.1
மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்
ஒவ்வோர் எழுத்துக்கும் அது பிறக்கின்ற
இடமும்,
பிறப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளின் முயற்சியும்
இன்றியமையாதன என்று முன்னரே அறிந்திருப்பீர்கள். அந்த
வகையில் மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடம் குறித்துத்
தொல்காப்பியம் கூறும் கருத்துகளை அறியலாம்.
உந்தியில் இருந்து
எழும் காற்று தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய மூன்று இடங்களில்
வந்து தங்கிப் பின்னர்ப் பல்வேறு உறுப்புகளால் வெவ்வேறு
எழுத்தாகப் பிறக்கும் என்பதை முதல் பாடத்தில் கண்டோம்.
இங்கு மெய்யெழுத்துகள் பிறக்கின்ற இடங்களைப்
பின்வருமாறு
காணலாம். அவை,
(1)
|
வல்லின மெய்கள்
|
- தலையில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன. |
(2)
|
மெல்லின மெய்கள்
|
- மூக்கில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன. |
(3)
|
இடையின மெய்கள்
|
- கழுத்தில் தங்கிய காற்றினால்
பிறக்கின்றன. |
என்பன.
இதனைத் தொல்காப்பிய
நூற்பா (எழுத்ததிகாரம் 3:10), அதன்
உரை ஆகியவற்றிலிருந்து அறியலாம்.
3.1.2
வல்லின, மெல்லின மெய்களின் பிறப்பு
மெய்யெழுத்துகளின் வகைப்பாட்டில் வல்லினம்
என்றும்,
மெல்லினம் என்றும் தனித்தனியாக இருக்கும் போது, இவ்விரு வகை
மெய்களின் பிறப்பினைச் சேர்த்துக் கூறியிருப்பதன் காரணம் என்ன
என்று உங்களுக்குள் வினா எழும். அவ்வாறு வினா எழுவது
பொருத்தம்தான். இந்த வினாவிற்கு விடை இதுவே -
மெய்யெழுத்துகளின் வரிசையில் ஒரு வல்லின எழுத்துப்
பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியே அதையடுத்து
வைக்கப்பட்டுள்ள மெல்லின எழுத்துப் பிறப்பதற்கும்
தேவைப்படுகின்றது. எனவேதான், ஒரு வல்லினத்தை அடுத்து ஒரு
மெல்லின மெய் என்ற முறையில் அவை வைக்கப்பட்டுள்ளன.
3.1.3
க் ங் - மெய்களின் பிறப்பு
வல்லின மெய்களில் முதலில் வருவது
‘க்’ - ஆகும்.
அதைப்போல மெல்லின மெய்களில் முதலில் வருவதும் ‘ங்’ -
ஆகும். இவ்விரண்டும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியில்
ஒத்துழைக்கும் உறுப்புகள் அண்ணமும் (மேல்வாய்) நாக்கும். இவை,
நாவின் அடி மேல்வாயின் அடிப்பகுதியைச் சென்று
பொருந்தும்போது பிறக்கின்றன என்கிறார் தொல்காப்பியர். இதனை,
ககார
ஙகாரம் முதல்நா அண்ணம் (எழுத்து. 3 : 89)
என்னும் தொல்காப்பிய நூற்பா விளக்குகின்றது
3.1.4
ச் ஞ் - மெய்களின் பிறப்பு
அடுத்துவரும் மெய்களான ‘ச்’ என்னும்
வல்லின மெய்யும், ‘ஞ்’
என்னும் மெல்லின மெய்யும், நாவின் இடைப்பகுதி, அண்ணத்தின்
(மேல்வாயின்) இடைப்பகுதியைச் சென்று பொருந்தும் நிலையில்
பிறக்கும்.
இதனை,
சகார ஞகாரம்
இடைநா அண்ணம் (எழுத்து. 3 : 90)
என்ற நூற்பா கூறுகின்றது
3.1.5
ட் ண் - மெய்களின் பிறப்பு
‘ட்’, ‘ண்’ ஆகிய இரு மெய்களும் ஒரே
முயற்சியினால்
தோன்றுகின்றன. இவை நாவின் நுனி, அண்ணத்தின்
நுனிப்பகுதியைச் சென்று பொருந்துகின்ற நிலையில் பிறக்கின்றன.
இதனை,
டகாரம் ணகாரம்
நுனிநா அண்ணம் (எழுத்து. 3 : 91)
என்னும் தொல்காப்பிய
நூற்பா விளக்குகிறது.
3.1.6
த் ந் - மெய்களின் பிறப்பு
மேல்வாய்ப் பல்லினது அடிப்பகுதியை நாவின் நுனியானது
நன்கு பரந்து ஒற்றும் போது 'த்', 'ந்' என்னும்
மெய்கள் பிறக்கின்றன.
இதனை,
அண்ணம் நண்ணிய
பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்
தாம்இனிது பிறக்கும் தகாரம் நகாரம்
(எழுத்து. 3 : 93) |
என்னும் நூற்பா எடுத்துக் கூறுகின்றது. இந்நூற்பா
தகாரம், நகாரம்
எனப்படும் த், ந் என்னும் மெய்கள் தாம் இனிதாகப் பிறப்பதற்கு
‘மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனி நன்கு சென்று
பொருந்த வேண்டும்’ என்று அழகுபடக் கூறுகின்றது.
3.1.7
ப் ம் - மெய்களின் பிறப்பு
'ப்', 'ம்' என்னும் இந்த இரு மெய்களும்
இரு இதழ்களின்
(உதடுகள்) செயற்பாட்டால் பிறக்கின்றன. மேல் இதழும் கீழ் இதழும்
ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்திட, 'ப்', 'ம்' என்பவை
பிறக்கின்றன. இதனை,
இதழ்இயைந்து
பிறக்கும் பகாரம் மகாரம்
(எழுத்து. 3 :
97)
என்னும் நூற்பா தெரிவிக்கின்றது.
3.1.8
ற் ன் - மெய்களின் பிறப்பு
நாவின் நுனி,
அண்ணத்தைச் சென்று நன்கு ஒற்றும்
போது
‘ற்’ ‘ன்’ என்னும் மெய்கள் தோன்றும். இதனை,
அணரி நுனிநா அண்ணம்
ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்
(எழுத்து. 3 : 94) |
என்னும் நூற்பா விளக்குகின்றது.
|