3.6 எழுத்துகளின் பிறப்புக்குப் புறனடை

இதுவரை, தமிழில் உள்ள எழுத்துகள் ஒவ்வொன்றும் பிறக்கின்ற இடமும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சியும் குறித்து விரிவாக அறிந்து கொண்டீர்கள். எனினும் இந்த எழுத்துகளுக்குச் சொல்லப்பட்ட பிறப்பு விதிகள் அந்தந்த எழுத்துகளை இயல்பாக ஒலிக்கின்ற போது மட்டும் பொருந்துவன. இந்த எழுத்துகளை உயர்த்தியோ, தாழ்த்தியோ அல்லது நடுத்தரமாகவோ ஒலிக்கும் போது இவற்றில் சில மாறுதல்கள் எழுகின்றன. இதனைத் தெரிவிப்பதே புறனடை (விதிவிலக்கு) எனப்படும். இதனை,

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிதுஉள வாகும்              (நூற்பா. 87)

என்று நன்னூல் விளக்குகின்றது. இந்நூற்பாவில் எடுத்தல் என்பது உயர்த்தி ஒலித்தல் என்றும், படுத்தல் என்பது தாழ்த்தி ஒலித்தல் என்றும், நலிதல் என்பது நடுத்தரமாக ஒலித்தல் என்றும் பொருள்படும்.

எனவே எழுத்துகளுக்கான பிறப்பு விதிகள் அவற்றை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்கும் போது சிற்சில மாற்றங்களோடு அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.