5.4 பகுதி - விளக்கம்

பகுபத உறுப்புகள் ஆறு என்று கண்டோம். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியன. இவற்றுள் முதலாவதாக இருக்கும் ‘பகுதி‘ அமையும் தன்மையை விரிவாகக் காண்போம்.

5.4.1 பகுதியின் பொது இயல்பு

பெயர்ப் பகுபதங்கள், வினைப் பகுபதங்கள் என இருவகையாகப் பகுபதங்கள் அமைவதை முன்னரே கண்டோம். எனவே இவ்விரு பகுபதங்களிலும் முதலில் நிற்கும் ‘பகாப்பதங்களே’ பகுதிகளாகும். பகுதியைப் ‘பகாப்பதங்கள்’ என்று குறிப்பிடுவதன் காரணம் என்னவென்று நீங்கள் கருதலாம். ஒரு பகுபதத்தின் முதலில் உள்ள உறுப்பு பகுதி. அதை மேலும் பிரிக்க முடியாது. ஆகவே ‘பகுதி’யைப் ‘பகாப்பதம்’ எனக் குறிப்பிடுவர்.

இதனைப் பின்வரும் நன்னூல் நூற்பா விளக்குகின்றது.

தத்தம் பகாப்பதங்களே பகுதி யாகும் (134)

என்பது நூற்பா,

5.4.2 பெயர்ப் பகுபதப் பகுதி

பெயர்ப்பகுபதங்களின் பகுதிகள் பெயர், வினை, இடை, உரிச் சொற்களாக அமைகின்றன.

(1)

பொன்னன் - இதன் பகுதி பொன். இது பெயர்ப் பகுதிக்கு எடுத்துக்காட்டாகும்.

(2)

அறிஞன் - இதில் அறி என்னும் பகுதி வினைப்பகுதிக்கு எடுத்துக் காட்டாகும்.

(3)

பிறன் என்னும் சொல்லில் பகுதி பிற என்பதாகும். இதில் ‘பிற‘ என்பது இடைச்சொல்லாகும். இது இடைச் சொல் பகுதி.

(4)

கடியவை என்னும் பெயர்ப்பகுபதத்தின் பகுதி கடி என்பதாகும். இதன் பகுதியான ‘கடி‘ என்பது உரிச்சொல். எனவே இது உரிச்சொல் பகுதி.

5.4.3 வினைப் பகுபதப் பகுதி

வினைப் பகுபதங்களில் பகுதியாகப் பெரும்பாலும் வினைச் சொற்களே வருகின்றன. சிறுபான்மை இடைச் சொற்களும் உரிச் சொற்களும் வருதல் உண்டு.

(1)

நின்றான், இதில் நில் என்பதும், நடந்தான் என்பதில் நட என்பதும் வினைப் பகுதிகள். இங்கு வினைச்சொற்களே பகுதிகள் ஆயின.

(2)

போன்றான் என்பதில் போல் என்பது இடைச்சொல்; இங்கு இடைச்சொல் வினைப்பகுதியாக உள்ளது.

(3)

சான்றோன், கூர்ந்தான் என்பனவற்றில் வரும் சால், கூர் என்பவை உரிச்சொற்கள் வினைப்பகுதியாக வந்தமைக்கு எடுத்துக்காட்டுகள்.

5.4.4 பண்புப் பெயர்ப் பகுதிகளும் அவை அடையும் மாற்றங்களும்

பெயர்ப் பகுபதங்கள் ஆறு வகைப்படும். அவை பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு), தொழில் எனப்படுவன. இந்த ஆறுவகைப் பதங்களில் பண்புப் பெயர்ப் பகுபதங்கள். பிற பெயர்ப் பகுபதங்களில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றன. பண்புப் பெயர்களின் தனி அமைப்பே அதற்குக் காரணம். அவற்றின் தனித் தன்மையை நன்னூலார் நன்கு விளக்கிச் செல்கிறார்.

கரியன் என்னும் பண்புப் பெயர்ப் பகுபதத்தைப் பிரித்தால், அது,

கருமை+அன் என்று அமையும். இதில் ‘கருமை‘ என்பது பகுதி ‘அன்’ என்பது விகுதி. இதில் கருமை என்பதை, கரு+மை என மேலும் பிரிக்க இயலும் எனினும், இதில் வரும் ‘மை’ என்பதற்குப் பகுதிப் பொருளே அன்றி வேறு பொருள் இல்லை. ஆகவே, ‘கருமை’ என்பது பொருள் நிலையில் பகுக்கவியலாத தன்மையில் அமைந்துவிட்டது. எனவே ‘கருமை’ என்பதே பகாப் பதமாக நின்று, பகுபதத்தின் பகுதியாகி உள்ளது. இதனையே,

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை
வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை
திண்மை, உண்மை, நுண்மை, இவற்று எதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே

என்னும் நூற்பாவில் (135) நன்னூல் விளக்குகின்றது.

செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை எனவரும் பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பகுபதங்களாக இருப்பினும், அவை பொருள் நிலையில் பகாப்பதங்களாக இருப்பதால் பகுதிகளாகவே கொள்ளப்படுகின்றன என்று இந்நூற்பா கூறுகிறது.

மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகளுடன் அவற்றிற்கு எதிரான பண்புப் பெயர்ப் பகுதிகளும் பொருள் நிலையில் பகாப்பதங்களே. அவை முறையே

செம்மை
x
வெண்மை, கருமை, பொன்மை, பசுமை
சிறுமை
x
பெருமை
சேய்மை
x
அண்மை
தீமை
x
நன்மை
வெம்மை
x
தண்மை
புதுமை
x
பழமை
மென்மை
x
வன்மை
மேன்மை
x
கீழ்மை
திண்மை
x
நொய்மை
உண்மை
x
இன்மை
நுண்மை
x
பருமை.

எனவருவன.

மேலே கண்ட பண்புப் பெயர்ப் பகுதிகள் பிற சொற்களோடு சேர்ந்து (புணர்ந்து) வரும்போது சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்கள் ஏழு வகைகளில் நிகழ்கின்றன என்பர். ஒரு பண்புப்பெயர்ப் பகுபதம் பிற சொல்லோடு புணரும் போது இந்த ஏழுவகை மாற்றங்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவையோ ஒரே சொல்லில் வந்து அமையலாம். அம் மாற்றங்கள் பின்வருவன:

(1) ஈறுபோதல்
(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்
(3) ஆதி நீடல்
(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்
(5) தன் ஒற்று இரட்டல்
(6) முன்நின்ற மெய்திரிதல்
(7) இனம் மிகல்

இந்த மாற்றங்களை எல்லாம் பின்வரும் நன்னூல் நூற்பா தொகுத்துக் கூறுதல் காணலாம்.

ஈறு போதல், இடைஉகரம் ‘இ‘ ய்யாதல்
ஆதி நீடல், அடிஅகரம் ‘ஐ‘ ஆதல்
தன்ஒற்று இரட்டல், முன்நின்ற மெய்திரிதல்,
இனம்மிகல், இனையவும் பண்பிற்கு இயல்பே

(136)

இனி, இந்த மாற்றங்கள் ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளைக காண்போம்.

(1) ஈறுபோதல்

சிறுவன் - சிறுமை + அன், நல்லன் - நன்மை+அன் இவற்றில் ஈற்றில் உள்ள ‘மை‘ விகுதி கெட்டது

(2) இடை ‘உ‘கரம் ‘இ‘ ஆதல்

பெரியன் - பெருமை + அன்
இவற்றில் ‘மை‘ கெட்டது மட்டுமன்றிப் பெருமை, கருமை என்பதில் இடையில் உள்ள உகரம், இகரமாக ஆகியுள்ளது.
கரியன் - கருமை + அன்

(3) ஆதிநீடல் (முதல் எழுத்து நீண்டு வருதல்)

பசுமை + இலை = பாசிலை. பசுமை + இலை. பசுமை என்பதில் உள்ள முதல் எழுத்தான பகரம் நீண்டு ‘பா‘ ஆகியுள்ளது. ‘சு‘ என்பதில் உள்ள உகரம் ‘சி‘ என இகரமாயிற்று. ‘மை‘ விகுதிகெட்டது. எனவே பாசிலை என்றாயிற்று.

(4) அடி அகரம் ‘ஐ‘ ஆதல்

பைங்கண் என்பது பசுமை + கண் - பைங்கண். பசுமை என்பதில் உள்ள அடி (முதல்) எழுத்தான ப(ப்+அ) இல் உள்ள அகரம் பை (ப்+ஐ) என ஆகியுள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது. ‘சு‘ என்பதும் கெட்டுள்ளது.

(5) தன் ஒற்று இரட்டல்

வெற்றிலை = வெறுமை + இலை என்பது வெற்றிலை என்றாகிறது. இதில் று (ற்+உ) இல் உள்ள ஒற்றான ‘ற்‘ இரட்டித்துள்ளது. ‘மை‘ கெட்டுள்ளது.

(6) முன்நின்ற மெய்திரிதல்

செம்மை + ஆம்பல் - சேதாம்பல் என்றாயிற்று. இதில் ‘மை‘ விகுதி கெட்டது. ஆதி செ - சே என நீண்டது. ‘செம்‘ முன்னின்ற ‘ம்‘ ‘த்‘ என்னும் மெய்யாகத் திரிந்துள்ளது.

(7) இனம் மிகல்

பசுமை + தழை என்பது பசுந்தழை என்றாகும். இதில் ஈற்றில் உள்ள ‘மை‘ கெட்டது. ‘தலை‘ என்னும் சொல்லில் உள்ள ‘த்‘ என்னும் மெய்க்கு இனமான ‘ந்‘ என்னும் நகரமெய் மிகுந்துள்ளது (தோன்றியுள்ளது).

5.4.5 வினைப் பகுபதங்களின் பகுதிகள்

இதுவரை பண்புப் பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் பற்றி விரிவாகக் கண்டோம் இனி, வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமைகின்றன என்பதைக் காணலாம்.

முதலில் தெரிநிலை வினைப் பகுபதத்தின் பகுதிகளைக் காண்போம். தெரிநிலை வினைப் பகுதிகள் செய் என்னும் ஏவல் பகாப்பதங்களாகவும் அமையும். இதனை,

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே

என்னும் நன்னூல் (137) நூற்பா விளக்குகின்றது. இதில் நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று வரும் இருபத்து மூன்றும் ‘செய்‘ என்னும் வாய்பாட்டில் அமைந்த ஏவலுக்குப் பகுதியாகவும் வரும்; பிற தெரிநிலை வினைகளுக்குப் பகுதியாகவும் வரும்.

இவை ஏவலாய் வரும் இடத்து நடப்பாய், வருவாய், தின்பாய் என்பவற்றில் நட, வா, தின் என்ற வினைப்பகுதிகளைப் பெற்று வரும்.

இவை வினைமுற்றுப் பகுபதங்களாய் வருமிடத்து இவற்றின் ‘வினைப்பகுதி‘ பின்வருமாறு அமையும்:

நடந்தான் நட
வந்தான் வா
மடிந்தான் மடி
சீத்தான் சீ
விட்டான் விடு
கூவினான் கூ
வெந்தான் வே
நொந்தான் நொ
போனான் போ
வௌவினான் வௌ
உரிஞினான் உரிஞ்
உண்டான் உண்
பொருநினான் பொருந்
திருமினான் திரும்
தின்றான் தின்
தேய்ந்தான் தேய்
பாய்ந்தான் பாய்
சென்றான் செல்
வவ்வினான் வவ்
வாழ்ந்தான் வாழ்
கேட்டான் கேள்
அஃகினான் அஃகு

மேலே காணும் வினை முற்றுகளில்

சீத்தான் என்பது சீவினான் என்றும்,
உரிஞினான் என்பது தேய்த்தான் என்றும்
பொருநினான் என்பது பொருந்தினான் என்றும்,
திருமினான் என்பது திரும்பினான் என்றும்
அஃகினான் என்பது சுருங்கினான் என்றும்

பொருள்படுவன.

இந்த 23 வினைப்பகுதி வாய்பாடுகளுக்கும் பொது வாய்பாடு ‘செய்‘ என்பதாகும்.

5.4.6 வினைப் பகுபதப் பகுதிகள் அடையும் மாற்றங்கள்

மேலே கண்ட 23 பகுதிகள் விகுதிகளுடன் புணரும் போது சில பகுதிகள் இயல்பாக வரும். சில விகாரப்பட்டு வரும்.

(1) இயல்பாக வருதல்

நட+ஆன் - நடந்தான்
பார்+ஆன் - பார்த்தான்

(2) விகாரம் அடைந்து வருதல்

தா + ஆன் - தந்தான். இதில் ‘தா‘ - தகரமாகக் குறுகியுள்ளது

சா + ஆன் - செத்தான் - இதில் ச்+ஆ (சா) என்பது (ச்+எ) செ ஆகத் திரிந்துள்ளது.

5.4.7 தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப்பகுதிகளாக மாறுதல்

ஒரு செயலைத் தானே செய்வது தன்வினை. பிறரைக் கொண்டு செய்விப்பது பிறவினை. நட, வா, என வரும் 23 வினைகளும் தன்வினைப் பகுதிகள் ஆகும். இவற்றிற்கான பிறவினைப் பகுதிகளைக் காண்போம்.

இத் தன்வினை ஏவல் பகுதிகள் பிறவினைப் பகுதிகளாக மாறுதற்கு உரிய இலக்கணத்தை நன்னூலார் வகுத்துள்ளார்.

‘செய்’ என்னும் வினைப் பகுதியின் பின் ‘வி‘ என்பதோ அல்லது ‘பி‘ என்பதோ தனித்து வருமாயின் அது ‘செய்வி‘ என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். அந்த வினையுடன் இவ்விரு விகுதிகளில் ஏதேனும் ஒன்று தன்னுடன் தானோ (பி+பி) தன்னுடன் பிறவோ (பி+வி அல்லது வி+பி) இணைந்து வருமாயின் அது செய்விப்பி என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகும். இரு விகுதிகள் சேர்ந்து வருவது ஈரேவல் எனப்படும்.

வரு+வி - வருவி - ‘வி’ தனித்து வந்துள்ளது நடப்பி - நட+பி - பி தனித்து வந்துள்ளது நட+பி+பி - நடப்பிப்பி - ‘பி’ தன்னுடன் தான் பி+ பி என இணைந்து வந்துள்ளது. நடப்பிவி - இதில் நட+பி+வி என்று ‘பி’ யுடன் ‘வி’ இணைந்து வந்துள்ளது. ‘வி’ என்னும் விகுதி தன்னுடன் தான் இணைந்து வருவதில்லை.

இவை விகுதியுடன் சேர்ந்து வருவியாய், வருவிப்பாய், நடப்பியாய், நடப்பிப்பாய் என வரும். இதனை,

செய்என் வினைவழி ‘வி‘ப்‘பி‘ தனிவரின் செய்விஎன் ஏவல்; இணையின் ஈர்ஏவல்

என்னும் நூற்பா (138) விளக்குகிறது.

இவையே அல்லாமல் ஏவல் வினைப் பகுதிகள் பின்வரும் மூன்று முறைகளிலும் பிறவினையாக மாறுகின்றன. அவை,

(1)

கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாக மாற்றம் அடைகின்றன.

(2)

சிலபகுதிகளில் இடையில் உள்ள மெல்லின மெய் வல்லின மெய்யாகத் திரிகின்றன.

(3)

சில பகுதிகளில் நடுவில் மெய் இரட்டித்துப், பிறவினையாய் வருகின்றன.

(1) கு, சு, டு, து, பு, று என்ற விகுதிகளைப் பெற்றுப் பிறவினையாதல்

(1) போ + கு - போக்கு - கு விகுதி
(2) பாய் + சு - பாய்ச்சு - சு விகுதி
(3) உருள் + டு - உருட்டு - டு விகுதி
(4) நட + து - நடத்து - து விகுதி
(5) எழு + பு - எழுப்பு - பு விகுதி
(6) துயில் + று - துயிற்று - று விகுதி

(2) மெல்லின மெய்கள் வல்லின மெய்களாதல்

திருந்து - திருத்து - ந்- த் ஆதல்
தோன்று - தோற்று - ன்- ற் ஆதல்

(3) நடுவில் மெய் இரட்டித்தல்.

உருகு - உருக்கு - க் - க்க் - ஆதல்
ஆடு - ஆட்டு - ட் - ட்ட் - ஆதல்
  • தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவான வினைப்பகுதிகள்
  • தன்வினைகளுக்கும் பிறவினைகளுக்கும் பொதுவான வினைப் பகுதிகளும் உள்ளன. அவை,

    கரை, தேய், மறை, உடை, அலை, சேர், மடி என்பன.

    கரைந்தான், தேய்ந்தான் என்று மெல்லின மெய் பெற்றுத் தன்வினையாக வருவன. இவையே,

    கரைத்தான், தேய்த்தான் என்று வல்லின மெய் பெற்றுப் பிறவினையாக வருவன.

    5.4.8 ஏனைய வினைப் பகுதிகள் பிறவினை ஆதல்

    ‘நடவாய்’ என்னும் ஏவல் வினைமுற்றில் உள்ள ‘நட’ முதலான பகுதிகள் ‘நடப்பியாய்’, ‘நடப்பிப்பியாய்’ என்று பிற வினையாக வருவதைப் போல, ‘நடப்பித்தான்’, ‘நடப்பிப்பித்தான்’ என்ற முறையில் ஏனைய வினைப் பகுதிகளும் பிறவினையாக வரும். இதற்கான இலக்கண அமைதியை, ‘விளம்பிய பகுதி வேறாதலும் விதியே’ என்னும் நன்னூல் நூற்பா (139) விளக்கிச் செல்கிறது.