5.1 பகாப்பதம்

இப்பாடத்தில் பகாப்பதம், பகுபதம் ஆகியவற்றின் வகைளைக் காண்போம். பகுபதத்தின் உறுப்புகள் பற்றியும் அறிந்து கொள்வோம்.

5.1.1 பகாப்பதத்தின் இலக்கணம்

பிரித்தால் பொருள் தராத பதமே பகாப்பதம் ஆகும். அது இடுகுறியாக வழங்கிவரும்; நெடுங்காலமாக ஒரே தன்மையுடையதாக அமைந்திருக்கும். (இடுகுறி = காரணம் இன்றி இடப்பட்டு வழங்கி வரும் சொல்).

எடுத்துக்காட்டு :

‘மழை பொழிகிறது‘ இந்த வாக்கியத்தில் மழை, பொழிகிறது என்ற இரு பதங்கள் (சொற்கள்) உள்ளன. பொழிகிறது என்பதை, பொழி + கிறு + அது என்று பிரிக்கலாம். ‘பொழி‘ என்பதைப் பிரிக்கமுடியாது. பொ, ழி எனப்பிரித்தால் இரண்டு எழுத்துகளுக்கும் பொருள் இல்லை. அதே போல, ‘மழை‘ என்பதும் பிரித்தால் பொருள் தராதது, ஆகவே ‘மழை‘ , ‘பொழி‘ ஆகிய இரண்டும் பகாப்பதம் ஆகும்.

இப் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,

(1) பெயர்ப்பகாப்பதம்
(2) வினைப் பகாப்பதம்
(3) இடைப் பகாப்பதம்
(4) உரிப் பகாப்பதம்

ஆகியன.

5.1.2 பகாப்பதத்தின் வகைகள்

(1) பெயர்ப் பகாப்பதம்:

பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

நிலம், நீர், நெருப்பு, காற்று என வருவன.

(2) வினைப் பகாப்பதம்:

வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

நட, வா, உண், தின் முதலியன.

(3) இடைப்பகாப்பதம் :

இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

மன், கொல், போல், மற்று என்பன.

(4) உரிப் பகாப்பதம் :

உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

கூர், மிகு, உறு, தவ, நனி, கழி,

மேலே சுட்டிய எடுத்துக் காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதனை நன்னூல் பின்வருமாறு விளக்குகின்றது.

பகுப்பால் பயனற்று இடுகுறியாகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம்     (131)