2.1 மொழி இறுதி, முதல் எழுத்துகள்

புணர்ச்சியில் வரும் இரண்டு சொற்களில், முதலாவது சொல்லாகிய நிலைமொழியின் ஈற்றில் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். இரண்டாவது சொல்லாகிய வருமொழியின் முதலிலும் உயிர் அல்லது மெய் எழுத்து இருக்கும். எனவே நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் வரும் எழுத்துகளைப் பற்றித் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதுபற்றி நன்னூலார் எழுத்ததிகாரத்தில் முதற்கண் அமைந்த எழுத்தியலில் கூறியுள்ளார். அதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி மீண்டும் இங்கே கூறப்படுகிறது.

2.1.1 மொழி இறுதி எழுத்துகள்

உயிர்கள் பன்னிரண்டும், மெய்களில் ‘ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள’ என்னும் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றும் ஆக மொத்தம் இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும் என்கிறார் நன்னூலார்.

ஆவி, ஞணநமன யரல வழள மெய்,
சாயும் உகரம் நால்ஆறும் ஈறே              (நன்னூல், 107)

(ஆவி=உயிர்; சாயும் உகரம்=குற்றியலுகரம்; நால்ஆறு=இருபத்து நான்கு.)

உயிர் எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்போது பெரும்பாலும் மெய்யோடு சேர்ந்தே வரும். அஃதாவது உயிர்மெய்யாகவே வரும்.

சான்று :

(ல்+அ=ல)

ணி (ண்+இ=ணி)

எகரம் மட்டும் மெய்யோடு சேர்ந்து ஈறாகாது. உயிரளபெடையில் மட்டும் ஈறாகும். சான்று சேஎ (சேஎ-எருது). உயிர் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழு. இவற்றில் ஔகாரம் நீங்கலான ஏனை ஆறும் தனித்து வந்து ஈறாகும்.

சான்று :

(பசு), ஈ, (மாமிசம்), (அம்பு), (தலைவன்), (மதகுப் பலகை)

உயிர் எழுத்துகளில் குற்றெழுத்துகள் ஐந்து, இவற்றில் ‘அ, இ, உ’ என்பன சுட்டு எழுத்துகள்; ‘எ’ என்பது வினா எழுத்து. இவை நான்கும் நிலைமொழியாக வரும்போது அம்மொழியின் ஈற்று எழுத்தாகக் கருதப்படும்.

சான்று :

அ+பொருள் = அப்பொருள்
இ+பொருள் = இப்பொருள்
எ+பொருள் = எப்பொருள்

குற்றெழுத்துகளில் மற்றோர் எழுத்து ‘ஒ’ என்பதாகும். இது தனித்து வந்து ஈறாவதில்லை. ‘ந்’ என்ற மெய் எழுத்தோடு சேர்ந்து ‘நொ’ என்ற ஒரு சொல்லில் மட்டும் ஈறாகும். (நொ-துன்பப்படு.)

மெய் எழுத்துகள் பதினெட்டு. இவற்றில் வல்லின எழுத்துகளாகிய ‘க், ச், ட், த், ப், ற்’ என்னும் ஆறும், மெல்லின எழுத்துகளில் ‘ங் ’ என்னும் ஒன்றும் ஆகிய ஏழும் மொழிக்கு இறுதியில் வாரா. மெல்லின எழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன்’ என்னும் ஐந்தும், இடையின எழுத்துக்களாகிய ‘ய், ர், ல், வ், ழ், ள்’ என்னும் ஆறும் ஆகிய பதினொன்று மட்டுமே மொழிக்கு இறுதியில் வரும். இவற்றுள் ‘ஞ், ந், வ்’ ஆகிய மூன்றும் நன்னூலார் காலத்தில் குறிப்பிட்ட ஒரு சில சொற்களில் மட்டுமே மொழிக்கு இறுதியில் வந்தன. ‘ஞ்’ என்பது உரிஞ் (தேய்த்தல்) என்னும் ஒரு சொல்லில் மட்டும் இறுதியில் வந்தது; ‘ந்’ என்பது பொருந் (ஒத்திருத்தல்), வெரிந் (முதுகு) என்னும் இருசொற்களில் மட்டும் இறுதியில் வந்தது; ‘வ்’ என்பது அவ், இவ், உவ், தெவ் (பகை) என்னும் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியில் வந்தது. இச்சொற்கள் இக்காலத் தமிழில் இல்லை.

குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வல்லின எழுத்துகள் ஆறின்மேல் ஏறி வரும். சான்று: பாக்கு, பஞ்சு, பட்டு, பந்து, அம்பு, கயிறு.

எனவே மொழிக்கு இறுதியில் வரும் என மேலே கூறப்பட்ட இருபத்து நான்கு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 11 + குற்றியலுகரம் 1 = 24) புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் வரும் என்பதை அறியலாம்.

2.1.2 மொழி முதல் எழுத்துகள்

பன்னிரண்டு உயிர்களும், ‘க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங’ என்னும் பத்து மெய்களும் மொழிக்கு முதலில் வரும் என்கிறார் நன்னூலார்.

பன்னீர் உயிரும் கசதந பமவய
ஞங ஈர் ஐந்து உயிர் மெய்யும் மொழிமுதல்
- (நன்னூல்,102)

இவற்றுள் உயிர்கள் தனித்து மொழிக்கு முதலில் வரும். ஆனால் மெய்கள் தனித்து மொழிக்கு முதலில் வாரா. உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே மொழிக்கு முதலில் வரும். உயிர்மெய்க்கு ‘மெய் முன்னும் உயிர் பின்னும்’ வரும்.

சான்று :

க - க்+அ = க (கடல்)
கா - க்+ஆ = கா (காடு)

இங்கே காட்டப்பட்ட கடல், காடு ஆகிய சொற்களில் க் என்ற மெய் முதலில் தனித்து வாராமல், அ,ஆ என்னும் உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்யாக வந்தாலும், அச்சொற்களுக்கு முதல் எழுத்து ‘க்’ என்ற மெய்யே ஆகும்.

மெய் எழுத்துகளில் ‘ங்’ என்பது, ‘ஙனம்’ என்ற ஒரு சொல்லில் மட்டுமே முதலாக வரும். ஙனம் என்ற சொல்லும் தனித்து வாராது. ‘அ, இ, உ’ என்னும் சுட்டு எழுத்துகளையும், ‘எ’ என்னும் வினா எழுத்தையும் அடுத்தே வரும்.

சான்று :

அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம்

மேலே கூறப்பட்ட இருபத்திரண்டு எழுத்துகளே (உயிர் 12 + மெய் 10  = 22) புணர்ச்சியில் வருமொழியின் முதலில் வரும் என்பதை அறியலாம்.