5.4 ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்கள் முன் நாற்கணம்

டு, று என முடியும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் உள்ள ட, ற என்னும் வல்லின மெய்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணமும் (உயிர், வலி, மெலி, இடை) வந்து புணரும்பொழுது பெரும்பாலும் இரட்டிக்கும்.

நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே     (நன்னூல், 183)

(ஒற்று - மெய்; ட ற ஒற்று இரட்டும் - ட் என்பது ட்ட் எனவும், ற் என்பது ற்ற் எனவும் இரட்டிக்கும்; வேற்றுமை மிகவே - வேற்றுமைப் புணர்ச்சியில் பெரும்பாலும்)

சான்று:

நாடு + அரசன் = நாட்டரசன்
சோறு + பானை = சோற்றுப்பானை
காடு + மனிதன் = காட்டு மனிதன்
மாடு + வால் = மாட்டு வால்

இச்சான்றுகளில் டு, று என முடியும் நெடில்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.

பகடு + ஏர் = பகட்டேர்
வயிறு + பசி = வயிற்றுப்பசி
முரடு + மனிதன் = முரட்டு மனிதன்
வயிறு + வலி = வயிற்று வலி

(பகடு - எருது, காளை; பகட்டேர் - காளை மாட்டைப் பூட்டிய ஏர்)

இச்சான்றுகளில் டு, று என முடியும் உயிர்த்தொடர் முன் வேற்றுமையில் நாற்கணமும் வர, இறுதியில் உள்ள ட, ற என்னும் மெய்கள் இரட்டித்தன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.
வன்தொடர் அல்லன என்று கூறப்படும் குற்றியலுகரங்கள் எத்தனை?
2.
அல்வழியில் எந்தக் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்?
3.
கொக்கு + சிறகு, குரங்கு + குட்டி - இவற்றைச் சேர்த்து எழுதுக.
4.
செய்து + கொடுத்தான், எடுத்து + கொடுத்தான் - இவற்றைச் சேர்த்து எழுதுக.
5.
வேற்றுமையில் ஒற்று இடையில் மிகுந்தும், மிகாமலும் வரும் குற்றியலுகரங்கள் யாவை?
6.
வயிற்றுப்பசி, ஆட்டுக்கால் - இவற்றைப் பிரித்து எழுதுக.
7.
ஒற்று இடையில் மிகும் குற்றியலுகரங்களின் முன் வேற்றுமையில் வல்லினம் மிகுமா?
8.
வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வரும்போது இரட்டிக்கும் வல்லின மெய்கள் யாவை?
9.
நாடு + அரசன் - சேர்த்து எழுதுக.