5.5 மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முன் நாற்கணம்

மென்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற சொற்களுள் சில, வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணத்தோடு புணரும்போது, தமக்கு இனமாகிய வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியும். எனவே பல சொற்கள் அவ்வாறு வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரியா. மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாகவே இருக்கும்.

மென்தொடர் மொழியுள் சிலவேற் றுமையில்
தம் இன மென்தொடர் ஆகா மன்னே      (நன்னூல், 184)

இந்நூற்பாவில் வருமொழி முதல் எழுத்துச் சொல்லப்படவில்லை. எனவே நாற்கணமும் வருமொழி முதல் எழுத்தாகக் கொள்க என்பர் நன்னூல் உரையாசிரியர்கள்.

சான்று:

குரங்கு + இனம் = குரக்கினம்
மருந்து + பை = மருத்துப் பை
சுரும்பு + நாண் = சுருப்பு நாண்
கரும்பு + வில் = கருப்பு வில்

(சுரும்பு - வண்டு; நாண் - கயிறு; சுருப்பு நாண் - வண்டால் ஆகிய கயிறு; கருப்பு வில் - கரும்பால் ஆகிய வில். இது மன்மதனுக்கு உரியது)

இச்சான்றுகளில் வரும் குரங்கு, மருந்து, சுரும்பு, கரும்பு ஆகியன மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை வேற்றுமைப் புணர்ச்சியில் நாற்கணம் வர, முறையே குரக்கு, மருத்து, சுருப்பு, கருப்பு என வன்தொடர்க் குற்றியலுகரமாகத் திரிந்தன.

வேற்றுமைப் புணர்ச்சியில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொற்களாக மட்டும் வருபவையே அதிகம் என மேலே பார்த்தோம்.

சான்று:

சங்கு + இனம் = சங்கினம்
வண்டு + கால் = வண்டுக்கால்
சங்கு + மாலை = சங்கு மாலை

இவை வேற்றுமைப் புணர்ச்சியில் வன்தொடராகத் திரியாதவை.