1.1 மெய் ஈற்றின்
முன் உயிர்வந்து புணர்தல்
நிலைமொழியின் இறுதியில் நிற்கும் எல்லா மெய்களின்
முன்னும் உயிர்வந்து புணர்தல் பற்றி நன்னூலார் இரண்டு பொதுவிதிகளைக் கூறுகிறார்.
அவை மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல், தனிக்குறில் முன் நின்ற மெய், உயிர்வரின்
இரட்டுதல் என்பனவாம்.
1.1.1 மெய்யின் மேல் உயிர் வந்து ஒன்றுதல்
நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மெய்யின்மேல்,
வருமொழியின் முதலில் உள்ள உயிர் வந்து கூடி உயிர்மெய்யாக மாறும். இவ்வாறு
மாறுவது விகாரப் புணர்ச்சி அன்று; இயல்பு புணர்ச்சி ஆகும்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது
இயல்பே (நன்னூல், 204)
(உடல் – மெய் எழுத்து; உயிர் – உயிர் எழுத்து ; ஒன்றுவது
– கூடுவது)
சான்று:
உயிர் + எழுத்து = உயிரெழுத்து
வேல் + எறிந்தான் = வேலெறிந்தான்
(உயிரெழுத்து – உயிராகிய எழுத்து. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அல்வழிப்
புணர்ச்சி; வேலெறிந்தான் – வேலை எறிந்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை.
வேற்றுமைப் புணர்ச்சி)
இச்சான்றுகளில் நிலைமொழியின் இறுதியில் நிற்கும்
ர், ல் என்னும் மெய்களோடு, வருமொழியின் முதலில் உள்ள எ
என்னும் உயிர் வந்து கூடி, முறையே ரெ, லெ என்று உயிர்மெய்களாக
மாறியிருப்பதைக் காணலாம். இம்மாற்றம் இயல்பாக நிகழ்ந்திருப்பதால் நன்னூலார்
நூற்பாவில் ‘இயல்பே’ என்று கூறினார்.
1.1.2 தனிக்குறில் முன் நின்ற மெய்
உயிர்வரின் இரட்டுதல்
நிலைமொழி தனிக்குறிலை அடுத்துவரும் ஒரு மெய்யைக்
கொண்டதாக இருந்து, வருமொழி முதலில் உயிர்வந்தால், நிலைமொழி இறுதியில் நிற்கும்
அம்மெய்யானது இரட்டிக்கும்.
தனிக்குறில் முன்ஒற்று
உயிர்வரின் இரட்டும் (நன்னூல், 205)
(ஒற்று – மெய்)
சான்று:
மெய் + எழுத்து = மெய்யெழுத்து
பல் + உடைந்தது = பல்லுடைந்தது
முள் + இலை = முள்ளிலை
பொன் + ஆரம் = பொன்னாரம்
(மெய்யெழுத்து – மெய் ஆகிய எழுத்து. இருபெயரொட்டுப் பண்புத்தொகை;
பல்லுடைந்தது – எழுவாய்த் தொடர். இவை இரண்டும் அல்வழி. முள்ளிலை
– முள்ளை உடைய இலை. இரண்டாம் வேற்றுமைத் தொகை; பொன்னாரம் – பொன்னாலாகிய
ஆரம். மூன்றாம் வேற்றுமைத் தொகை. இவை இரண்டும் வேற்றுமை)
இச்சான்றுகளில் தனிக்குறிலை அடுத்துவந்த ய்,
ல், ள், ன் என்னும் மெய்கள் வருமொழி முதலில் உயிர் வரும்போது அவை
முறையே ய்ய், ல்ல், ள்ள், ன்ன் என இரட்டித்தமையைக் காணலாம்.
கண், மண், கல், பல், முள், எள், தின், பொன் போன்ற
சொற்கள் தனிக்குறிலை அடுத்த மெய்யை உடையனவாய் வழங்குகின்றன. ஆனால் பேச்சுத்
தமிழில் இச்சொற்களை எவரும் மெய் ஈறாக ஒலிப்பதில்லை. மெய் ஈறாக ஒலிப்பது அருகிக்
காணப்படுகிறது. இச்சொற்களின் இறுதியில் உள்ள மெய்யோடு உகரம் சேர்த்துப் பேச்சுத்தமிழில்
எல்லோருமே கண்ணு, மண்ணு, கல்லு, பல்லு, முள்ளு, எள்ளு, தின்னு, பொன்னு என
ஒலிக்கின்றனர். உகர உயிர் சேரும்போது இச்சொற்களில் தனிக்குறிலை அடுத்து வரும்
மெய்கள் இரட்டிப்பதைக் காணலாம். இவ்வாறு உகரம் சேர்த்து ஒலிப்பதில் எளிமை
காணப்படுகிறது.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
மொழிக்கு இறுதியில்
வரும் மெய்யெழுத்துகள் எத்தனை? |
|
2. |
மெல்லின மெய்களில்
மொழிக்கு இறுதியில் வாராதது எது? |
|
3. |
மெய்யின் முன்
உயிர்வந்து புணரும்போது எவ்வாறு மாறும்? |
|
4. |
தனிக்குறில் முன்வரும்
மெய் உயிர்வரின் எவ்வாறு ஆகும்? |
|
5. |
உயிரெழுத்து – பிரித்து எழுதுக.
|
|
6. |
வேல் + எறிந்தான் – சேர்த்து
எழுதுக. |
|
7. |
முள்ளிலை – பிரித்து எழுதுக. |
|
8. |
பொன் + ஆரம் = சேர்த்து எழுதுக. |
|
9. |
கண், கல், முள், பல் – இச்சொற்கள் பேச்சுத்தமிழில்
எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன? |
|
|