4.0 பாட முன்னுரை

வேற்றுமை உருபுகள் நிலைமொழியோடும் வருமொழியோடும் புணரும் புணர்ச்சி உருபு புணர்ச்சி எனப்படும். ‘ஐ, ஆல், கு, இன், அது, கண்’ என்பன வேற்றுமை உருபுகள் ஆகும். இவை பெயர்ச்சொல்லுக்கு இறுதியில் வந்து, அப்பெயர்ச்சொற்களின் பொருளை வேற்றுமை செய்யும் காரணத்தால் வேற்றுமை உருபுகள் எனப்பட்டன என்பதைப் புணர்ச்சியும் அதன் பாகுபாடும் என்ற பாடத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

வேற்றுமை உருபுகள் வருமொழியாக நின்று, நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லோடு புணரும். சான்று: கல் + ஐ = கல்லை. பெயர்ச்சொல்லோடு சேர்ந்து நிலைமொழியின் இறுதியில் நின்று வருமொழியில் உள்ள சொற்களோடும் புணரும். சான்று: கல்லை + கண்டான் = கல்லைக் கண்டான். இவ்வாறு புணரும்போது அவ்வேற்றுமை உருபுகள் உயிர் ஈற்றுப் புணர்ச்சியிலும், மெய்ஈற்றுப் புணர்ச்சியிலும் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெறும்.

பெயர்ச்சொல்லோடு வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது, அவை இரண்டனுக்கும் இடையே சாரியைகள் என்று சொல்லப்படும் இடைச்சொற்கள் வருதலும் உண்டு. சான்றாக மரம் என்ற பெயர்ச்சொல்லோடு, என்ற இரண்டாம் வேற்றுமை உருபு வருமொழியில் வந்து புணரும்போது, மரமை என்று புணராது; மரத்தை என்று புணரும். மரம் + அத்து + ஐ என்பதே மரத்தை என்றாகியது. இங்கே மரம் என்பதற்கும், ஐ என்பதற்கும் இடையில் வந்துள்ள அத்து என்பது சாரியை ஆகும். நிலைமொழியில் உள்ள பெயர்ச்சொல்லையும், வருமொழியில் வரும் வேற்றுமை உருபுகளையும் சேர்த்து எளிதாக உச்சரிப்பதற்குச் சாரியை வருகின்றது.

நன்னூலார் எழுத்ததிகாரத்தில் இறுதியாக அமைந்த உருபு புணரியலில் உருபு புணர்ச்சி பற்றியும், உருபு புணர்ச்சியில் சாரியைகள் வருவது பற்றியும் கூறுகிறார். எல்லாம், எல்லாரும், எல்லீரும், ஆ, மா, கோ என்னும் பெயர்களும், தான், தாம், நாம், யான், யாம், நீ, நீர் என்னும் மூவிடப் பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றியும் கூறுகிறார். உருபு புணரியலில் அவர் கூறும் கருத்துகளை இப்பாடத்திலும், இதனை அடுத்து வரும் பாடத்திலும் விளக்கமாகவும் விரிவாகவும் காண்போம்.

இப்பாடத்தில் வேற்றுமை உருபுகளும், அவை வரும் இடமும், வருவதற்குக் காரணமும் பற்றி நன்னூலார் கூறும் கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றி அவர் கருத்துகள் சான்றுடன் விளக்கப்படுகின்றன. சாரியைகள் என்று கூறப்படும் இடைச்சொற்கள் விகுதிப் புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் வருமென நன்னூலார் குறிப்பிடுகிறார். இம் மூவகைப் புணர்ச்சியிலும் வரும் பொதுச்சாரியைகளைத் தொகுத்து அவர் தருகிறார், இவையும் இப்பாடத்தில் சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன.