4.2 சாரியைகள்

ஒரு பதத்தின் (சொல்லின்) முன்னர் விகுதியும், பதமும் வேற்றுமை உருபும் வந்து புணரும்போது அவற்றிற்கு இடையே சில இடைச்சொற்கள் வந்து சார்ந்து பொருந்துதல் உண்டு. அச்சொற்களுக்குச் சாரியை என்று பெயர். விகுதியையோ, பதத்தையோ, வேற்றுமை உருபையோ சார்ந்து வருதலின் சாரியை எனப்பட்டது.

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி என்றும், பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி என்றும், பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி என்றும் கூறப்படும். இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும் முறைமை பற்றியும், இம்மூவகைப் புணர்ச்சிக்கும் உரிய பொதுச்சாரியைகள் பற்றியும் நன்னூலார் உருபு புணரியலில் கூறுகிறார். அவற்றைச் சான்றுடன் காண்போம்.

4.2.1 சாரியைகள் வரும் முறைமை

பதத்தின் முன்னர் விகுதியும், பதமும், வேற்றுமை உருபும் வந்து புணரும்போது, அவற்றிற்கு இடையே சாரியை ஒன்றோ பலவோ வருதலும், வாராதிருத்தலும், இவ்விரண்டும் ஆகிய விகற்பமாதலும் ஆகும்.

பதம்முன் விகுதியும் பதமும் உருபும்
புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை
வருதலும், தவிர்தலும், விகற்பமும் ஆகும் (நன்னூல், 243)

(விகற்பமாதல் - ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும், வாராது இருத்தலும் ஆகும்.)

நன்னூலார் கூறியவாறு விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபு புணர்ச்சி என்னும் மூவகைப் புணர்ச்சியிலும் சாரியை வரும் முறையைச் சான்றுடன் காண்போம்.

  • விகுதிப் புணர்ச்சி
  • பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப்புணர்ச்சி எனப்படும்.

    சான்று:

    1. நடந்தனன்
    நட பகுதி
    + த்(ந்) சந்தி விகாரம்
    + த் இடை நிலை
    + அன் சாரியை
    + அன் விகுதி
    அன் சாரியை வந்தது
     
    2. நடந்தான்
    நட பகுதி
    + த்(ந்) சந்தி விகாரம்
    + த் இடை நிலை
    + ஆன் விகுதி
    சாரியை வரவில்லை

     

    3. நடந்தன    
    நட பகுதி
    + த்(ந்) சந்தி விகாரம்
    + த் இடை நிலை
    + அன் சாரியை
    + அ விகுதி
    அன் சாரியை வந்தது
    விகற்பம்
                 
    4. நடந்த
    நட பகுதி
    + த்(ந்) சந்தி விகாரம்
    + த் இடை நிலை
    + அ விகுதி
    சாரியை வரவில்லை

  • பதப்புணர்ச்சி
  • பதத்தின் முன்னர்ப் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும்.

    சான்று:

    1. புளி + பழம் > புளி + அம் + பழம்
    = புளியம்பழம்
    -
    அம் சாரியை வந்தது
           
    2. புளி + சோறு > புளி + ச் + சோறு
    = புளிச்சோறு
    -
    வல்லினம் மிக்கதே தவிரச் சாரியை வரவில்லை

     

    3. நெல் + குப்பை > நெல் + இன் + குப்பை
    இன் சாரியை வந்தது
    விகற்பம்
    = நெல்லின்குப்பை
    நெல் + குப்பை
    = நெற்குப்பை
    -
    சாரியை வரவில்லை

  • உருபு புணர்ச்சி
  • பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும்.

    சான்று:

    1. மரம் + ஐ > மர + அத்து + ஐ
                                  = மரத்தை

    அத்து என்னும் ஒரு சாரியை வந்தது
         
    மரம் + ஐ > மர + அத்து + இன் + ஐ
                                  = மரத்தினை
    அத்து, இன் என்னும் இரு சாரியைகள் வந்தன
         
    மரம் + கு > மர + அத்து + இன் + + கு
                                    = மரத்தினுக்கு
    அத்து, இன், உ என்னும் மூன்று சாரியைகள் வந்தன

    இச்சான்றுகளில் பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு புணரும்போது இடையில் சாரியை ஒன்றோ பலவோ வந்தமை காணலாம்.

    2. நாம் + ஐ = நம்மை
        யான் + ஐ = என்னை
    சாரியை வரவில்லை

    3. ஆ + ன் + ஐ = ஆனை
    – னகரச் சாரியை வந்தது
    விகற்பம்
       ஆ + வ் + ஐ = ஆவை
    - வகர உடம்படுமெய் வந்ததே தவிரச் சாரியை வரவில்லை

    (ஆனை, ஆவை - பசுவை)

    உருபு புணரியலில் நன்னூலார் சாரியை வரும் முறைமை பற்றிக் கூறும்போது, பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணரும் உருபுபுணர்ச்சியில் வரும் சாரியை பற்றிக் கூறுவது மட்டுமே பொருத்தமானது ஆகும். ஆனால் அதனோடு, பகுபத உறுப்புகளைப் பற்றிப் பேசும் பதவியலில் கூறவேண்டிய விகுதிப் புணர்ச்சியையும், உயிர் ஈற்று, மெய்ஈற்றுப் புணரியல்களில் கூறவேண்டிய பதப்புணர்ச்சியையும் ஆண்டுக் கூறாது, உருபு புணரியலில் இந்நூற்பாவில் சேர்த்துக் கூறியதற்குக் காரணம் ஒப்பின் முடித்தல் என்ற உத்தி ஆகும். ஓரிடத்தே ஒன்றற்குச் சொல்லும் இலக்கணம், அவ்விடத்தே சொல்லத் தேவையில்லாத வேறு ஒன்றற்கும் ஒத்து வருமாயின் அதற்கும் அதுவே இலக்கணமாகும் என்று அதனையும் சேர்த்துக் கூறுதல் ஒப்பின் முடித்தல் என்னும் உத்தி ஆகும்.

    4.2.2 பொதுச் சாரியைகள்

    அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன என்ற பதினேழும், இவை போல்வன பிறவும் பொதுச்சாரியைகள் ஆகும்.

    அன்ஆன் இன்அல் அற்றுஇற்று அத்துஅம்
    தம்நம் நும்ஏ அஉ ஐகுன
    இன்ன பிறவும் பொதுச் சாரியையே (நன்னூல், 244)

    இச்சாரியைகள் விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி என்ற மூன்று புணர்ச்சிகளிலும், தனிமொழிகளிலும் வருதலினால் பொதுச்சாரியைகள் என்று வழங்கப்பட்டன.

    சான்று:

    அன்
    – ஒன்றன் கூட்டம்
    (ஒன்று + அன் + கூட்டம்)
    ஆன்
    – ஒருபாற்கு
    (ஒருபது + ஆன் + கு) (இப்போது இது வழக்கில் இல்லை)
    இன்
    – வண்டின்கால்
    (வண்டு + இன் + கால்)
    அல்
    – தொடையல்
    (தொடை + அல்) – (= மாலை)
    அற்று
    – பலவற்றை
    (பல + அற்று + ஐ)
    இற்று
    – பதிற்றுப்பத்து
    (பத்து + இற்று + பத்து)
    அத்து
    – மரத்துக்கிளை
    (மரம் + அத்து + கிளை)
    அம்
    – புளியம்பழம்
    (புளி + அம் + பழம்)
    தம்
    – எல்லார்தம்மையும்
    (எல்லார் + தம் + ஐ + உம்)
    நம்
    – எல்லா நம்மையும்
    (எல்லா + நம் + ஐ + உம்)
    நும்
    – எல்லீர் நும்மையும்
    (எல்லீர் + நும் + ஐ + உம்)
    – ஒன்றே கால்
    (ஒன்று + + கால்)
    – புளியமரம்
    (புளி + + மரம்)
    – அவனுக்கு
    (அவன் + + கு)
    – பண்டைக்காலம்
    (பண்டு + + காலம்)
    கு
    – செய்குவாய்
    (செய் + கு + ஆய்)
    ன்
    – ஆனை
    (ஆ + ன் + ஐ)

    (செய்குவாய் – விகுதிப்புணர்ச்சி; தொடையல் – தனிமொழி; ஒன்றன்கூட்டம், வண்டின்கால், பதிற்றுப்பத்து, மரத்துக்கிளை, புளியம்பழம், ஒன்றேகால், புளியமரம், பண்டைக்காலம் – பதப்புணர்ச்சி; ஒருபாற்கு, பலவற்றை, எல்லார்தம்மையும், எல்லா நம்மையும், எல்லீர் நும்மையும், அவனுக்கு, ஆனை – உருபு புணர்ச்சி.)