4.3 தொகுப்புரை

இதுகாறும் வேற்றுமை உருபுகள் நிலைமொழி வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சி பற்றியும், புணர்ச்சியில் சாரியைகள் வரும் முறைமை பற்றியும் நன்னூலார் உருபியலில் கூறியனவற்றை விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். அவற்றை ஈண்டுச் சுருக்கமாகக் காண்போம்.

வேற்றுமை எட்டு வகைப்படும். அவை: பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி என்பன ஆகும். இவை எட்டுமே உருபுகள் ஆகும். பெயர் ஒரு தொடரில் எழுவாயாக வரும். அந்த எழுவாயே உருபாக நின்று ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகளை ஏற்றுவரும். விளிவேற்றுமையும் பெயரின் திரிபாதலின் உருபே ஆகும்.

வேற்றுமை உருபுகள் பெயருக்குப் பின்னால் வரும். பெயர் பால் அடிப்படையில் ஆண்பால் பெயர், பெண்பால் பெயர், பலர்பால் பெயர், ஒன்றன்பால் பெயர், பலவின்பால் பெயர் என ஐந்து வகைப்படும். எனவே ஐம்பால் பெயர்களோடு எட்டு வேற்றுமை உருபுகளையும் பெருக்கிக் கணக்கிட வேற்றுமை உருபுகள் நாற்பது ஆகும்.

வேற்றுமை உருபுகள் தத்தமக்கு உரிய கருத்தாப் பொருள், செயப்படுபொருள், கருவிப்பொருள் முதலானவற்றைத் தர, பெயருக்குப் பின்னால் வரும்.

ஐ, ஆல், கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை உருபுகள் மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாக உடையவை. இவை நிலைமொழி, வருமொழிகளோடு புணரும்போது, ஏற்கெனவே உயிர்ஈற்றுப் புணரியலிலும், மெய் ஈற்றுப் புணரியலிலும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளைப் பெரும்பாலும் பெறும்.

பதத்தின் முன்னர் விகுதி வந்து புணர்வது விகுதிப் புணர்ச்சி எனப்படும். பதத்தின் முன்னர் பதம் வந்து புணர்வது பதப்புணர்ச்சி எனப்படும். பதத்தின் முன்னர் வேற்றுமை உருபு வந்து புணர்வது உருபு புணர்ச்சி எனப்படும். இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் என்னும் இடைச்சொற்கள் வருவது உண்டு. இம்மூவகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் வரும்போது, ஒரு புணர்ச்சியில் ஒன்றாகவோ பலவாகவோ வரும்; வாராது இருத்தலும் உண்டு- ஒரே புணர்ச்சியில் சாரியை வருதலும், வாராமையும் ஆகிய விகற்பமும் உண்டு.

‘அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன’ என்னும் பதினேழும் பொதுச்சாரியைகள் ஆகும். இவை விகுதிப்புணர்ச்சி, பதப்புணர்ச்சி, உருபுபுணர்ச்சி ஆகிய மூவகைப் புணர்ச்சியிலும், இவற்றோடு தனிமொழியிலும் வரும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
பதத்தின் முன்னர் எவை எவை வந்து புணரும்போது இடையே சாரியை வரும்?
2.
நடந்தனன் – இதில் வரும் சாரியை யாது?
3.
பலவற்றை – இச்சொல்லைப் பிரித்துக்காட்டி, சாரியை எது எனக் குறிப்பிடுக.
4.
நெல் + குப்பை – எவ்வெவ்வாறு புணரும்?
5.
மரத்தினுக்கு – இச்சொல்லைப் பிரித்துக்காட்டி, இடையில் வந்துள்ள சாரியைகளைக் குறிப்பிடுக.
6.
நாம் + ஐ – எவ்வாறு புணரும்?
7.
நன்னூலார் குறிப்பிடும் பொதுச்சாரியைகள் எத்தனை?