1.2 பண்பாட்டு வாயில்கள்

c03110ad.gif (1294 bytes)

மனிதன் சமுதாயத்தின் ஓர் அங்கம். எனவே, மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாகக் கருதப்படுகின்றன.

1.2.1 உணவு

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானது உணவு. ஆனால், அவன் எதை உண்ணவேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை அவனது பண்பாடுதான் கற்றுக் கொடுக்கிறது.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள், காலை உணவாகத் தீயில் சுட்ட (smoked Fish) மீனை உண்ணுவார்கள். அமெரிக்கர்கள், குளிர்ந்த தானியங்களை உண்ணுவார்கள். தமிழர்கள் காலை உணவாக, ஆவியில் வேகக்கூடிய, இட்லி போன்ற உணவுகளை உண்பார்கள். இவை எதைக் காட்டுகின்றன? அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப அவர்களின் உணவு வகைகள் அமைந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.

  • உண்ணும் நேரம்
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின், நடுமேற்குப் பகுதியில் வாழ்பவர்கள் இரவு உணவை, மாலை 5 அல்லது 6 மணிக்குள் உண்டுவிடுவார்கள். ஸ்பானியர்கள் இரவு 10 மணிக்குத்தான் இரவு உணவை உண்பார்கள். சமணர்கள், இரவு வருவதற்குள், அதாவது இருட்டுவதற்கு முன்னர், தங்கள் இரவு உணவை உண்பார்கள். தமிழர்கள் இரவு 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை உண்பார்கள். இவை ஒவ்வொருவரின் பண்பாட்டிற்கு ஏற்ப அமைந்துள்ளன.

  • உண்ணும் முறை
  • உண்ணும் முறையிலும் ஒவ்வொருவரது பண்பாடும் வெளிப்படுகிறது.

    1. மேலைநாடுகளைச் சேர்ந்தவர்கள், உயர்ந்த நாற்காலியில் அமர்ந்து, உயர்ந்த மேசை மீது உணவை வைத்து உண்பார்கள்.
    2. சப்பானியர், பாயில் அமர்ந்து, குள்ளமான மேசை மீது உணவைப் பரிமாறி உண்பார்கள்.
    3. தமிழர்கள், பாயில் உட்கார்ந்து, தரையில் பரப்பிய வாழை இலையில் உணவை உண்பார்கள்.

    இவை, மனிதன் தனக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பொழுது பின்பற்றும் முறையினால் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள்.

    1.2.2 அணியும் ஆடை

    ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி வழங்குகிறது. ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவனை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று.

    ஒருவன் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவன் எந்த நாட்டைச் சார்ந்தவன், எந்தச் சமயத்தைச் சார்ந்தவன், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவன் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவன் அணியும் ஆடையும் ஒருவனது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

  • தமிழர்களும் ஆடையும்

  • தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது, நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம் (habit). இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

    தமிழர்களும் ஆடையும்

    பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள், உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர். பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் (Tropical Region) மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர். ஆனால், பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும்?

    அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள். இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள். எனவே, தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது.