1.3
பண்பாட்டின் வகைகள் |

|
பண்பாட்டை மூன்று
வகையாகச் சமூக இயல் அறிஞர்கள்
பிரிப்பார்கள்.
1. மனிதன் தன் அடிப்படைத் தேவைகளை (Basic needs)
நிறைவு செய்யும் முறைகளினால் வெளிப்படும் பண்பாடு.
2. கல்வி, கேள்வி வழியாகப் பேணப்படும் பண்பாடு
3. குறியீடுகளைப் (Symbols) பயன்படுத்துவதின் வாயிலாக வெளிப்படும்
பண்பாடு. |
1.3.1 அடிப்படைத் தேவைகளும் பண்பாடும்
மனிதனின் அடிப்படையான தேவைகள் உணவு, உடை,
உறைவிடம் ஆகும். இவற்றின் வாயிலாகவும் ஒருவன்
சார்ந்திருக்கும்
பண்பாடு வெளிப்படும். இவற்றுள் உணவு, உடை
ஆகியவை பற்றி முன்னரே விளக்கினோம். இனி, உறைவிடம் பண்பாட்டை
வெளிப்படுத்தும் வகையினைப் பார்ப்போம்.
உறைவிடம்
காடுகளில் விலங்கினங்களோடு வாழ்ந்த மனிதன்,
விலங்கினங்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு,
இயற்கையான
மழை, வெயில் ஆகியவற்றிலிருந்து வரும் துன்பங்களிலிருந்தும்
விடுபட்டு, பாதுகாப்பாக வாழ்வதற்குப் பல உறைவிடங்களைத்
தேர்ந்தெடுத்தான். மலைக்குகைகளில் (Cave) வாழ்ந்தான்.
மரத்தின்மேல் பரண் அமைத்து வாழ்ந்தான். அதன்பிறகு
படிப்படியாக, குடிசைகள் அமைத்து, கட்டடங்கள் கட்டித் தான்
வாழும் இருப்பிடத்தை
அல்லது உறைவிடத்தைச் சிறப்பாக
அமைத்தான். இத்தகைய
உறைவிடங்களும் அவரவர் பண்பாட்டை
வெளிப்படுத்தும்
வாயிலாகவும் இருந்தன.
தமிழர் உறைவிடம்
தமிழ் மக்களும் இத்தகைய நீரோட்டத்தில் தம்மையும்
உட்படுத்தியவர்களே. இருப்பினும் தங்கள் பண்பாட்டிற்கு
ஏற்பத்
தம் உறைவிடங்களையும் உருவாக்கிக் கொண்டனர்.
தமிழர்களின்
வீட்டு அமைப்பில் உள்முற்றம், வெளிமுற்றம், முன்பக்கம்
திண்ணை போன்றவை
அமைந்திருக்கும். இந்த அமைப்பே
தமிழர்களின்
பண்பாட்டை வெளிப்படுத்தும்.
மகளிர், ஆடவர்களைப்போல வெளி
உலகத்துடன் தொடர்பு
கொள்கின்றவர்கள் அல்லர்.
வீட்டிற்குள்ளேயே தங்கள்
வாழ்க்கையின் பெரும்பகுதியையும்
கழிப்பவர்கள். அவர்களது அன்றாட
நடவடிக்கைகள், அடுக்களையில் சமையல் செய்வதிலிருந்து தொடங்கும். ஏனைய நேரங்களில்
உள்முற்றத்திலேயே பொழுதைப் போக்குவர். பெண்மக்களுக்குள்
உரையாடல்,
உணவுப்பொருள்களை உலர வைத்தல், அம்மானை
ஆடல், கழல் விளையாடல் முதலிய பல செயல்கள் உள்
முற்றத்திலே நிகழும். உள் முற்றம் திறந்த வெளியாகவும்,
ஞாயிற்றின் ஒளிவருமாறும் அமைக்கப் பட்டிருக்கும். |
உள்முற்றம் |
வெளிமுற்றம் |
வீட்டிற்கு
முன்னால் வெளிமுற்றம் அமைந்து இருக்கும். நாள்தோறும்
காலையில் எழுந்ததும் முதல் நிகழ்ச்சியாக முற்றத்தைச் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து, மெழுகி, முருகியல் உணர்வு (aesthetic sense) கொண்ட அழகிய கோலங்களைப் பெண்மக்கள்
இடுவார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு வகையான அழகு மிகுந்த
கோலங்களை இடுவர். தமிழில் "கோலம்" என்பதற்கே அழகு
என்று பொருள். அவை தமிழர்களின் பண்பாட்டுக் கூறான, கலைத் தன்மையினை
வெளிப்படுத்துவன. |
மேலும் வெளிமுற்றத்தில், தாய் தன் குழந்தைக்கு
நிலாவினைக் காட்டி சோறு ஊட்டுவாள். சிறுவர்கள் நிலா
விளையாட்டு விளையாடுவார்கள். ஆடவர் அக்கம்
பக்கத்தில் உள்ளோரிடம் உரையாடுவர். அறுவடை செய்த
தானியங்களையும் சேமித்து வைப்பர்.
இன்றைக்கும் கிராமங்களில் உள்ள
தமிழர்கள் வீடுகளில் திண்ணை (PIAL)
அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
தமிழர்களின் விருந்தோம்பும்
பண்பாட்டிற்கு எடுத்துக் காட்டாய்த்
திகழ்வது திண்ணையே. |
திண்ணை |
போக்குவரத்து
வசதியில்லாத காலத்தில், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்யும்போது இரவு நேரங்களில் பயணத்தை
மேற்கொள்ள இயலாது. அத்தகைய சூழலில் போகும் வழியில் உள்ள பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வீட்டுத்
திண்ணையில் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் மறுநாள் காலையில் தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
வழிப்போக்கர் யார் வந்தாலும் தங்கிச் செல்லும்
வகையில், வீடுதோறும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். தங்கள் வீட்டுத் திண்ணையில் தங்கிச் செல்லும் வேற்று ஊர்க்காரர்களுக்குத் தேவைப்பட்ட உணவையும், பிற உதவிகளையும் செய்து மகிழ்வர். விருந்தோம்பலின் அடையாளமாக வீட்டுத் திண்ணைகளை அமைத்திருப்பது தமிழர்களின் பண்பாட்டுக்
கூறுகளில் ஒன்று.
1.3.2 பண்பாட்டுக்கல்வி
எந்த ஒரு மனிதனும் பண்பாட்டுக் கூறுகளுடன் பிறப்பதில்லை.
எனவே, வம்சா வழியாக (biological inheritance) அவனிடம் பண்பாடு
வந்து சேராது. அவனாகவே, பிறரிடமிருந்து தெரிந்து
கொள்ளவேண்டும்.
குழந்தை தனது அனுபவத்தினாலும், பிறரைப்
போலச் செய்தலினாலும் (imitation) பண்பாட்டைத் தெரிந்து
கொள்ளுகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் மக்கள் என்ன
பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள், எதை எதை
எல்லாம் சரி என்று சொல்கிறார்கள், எதையெல்லாம் தவறு
என்று கூறுகிறார்கள் என்பவற்றைக் கவனித்தும் (watching), கூர்ந்து நோக்கியும் (observation), தான் சார்ந்த
சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து
கொள்ளுகிறது.
கற்று அறிவது
சில பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றோரோ, பிறரோ
சொல்லிக்
கொடுப்பதில் இருந்து குழந்தைகள் தெரிந்து கொள்ளுகின்றனர்.
எடுத்துக்காட்டாகத்
தமிழ்க் குழந்தைகளிடம் பெரியவர்களைப்
பார்த்தால்
எழுந்திருக்க வேண்டும், வணக்கம் சொல்ல வேண்டும்,
பணிவாகப் பேச வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக்
கொடுக்கின்றனர். குழந்தைகள் அவற்றைப்
பின்பற்றுகின்றன.
தானாக அமைவது
ஆயினும், குழந்தைகளிடம் சில பண்பாட்டுக் கூறுகள்
அவர்கள் அறியாமலே, அவர்களிடம் படிந்துவிடுவதும் உண்டு.
எடுத்துக்காட்டாக, அரேபியர்கள், ஒருவரோடு ஒருவர் பேசும்
பொழுது மிகவும் நெருங்கி நின்று பேசுவார்கள். அரேபியக்
குழந்தைகளும், அவர்களை அறியாமலே எல்லோரிடமும்
நெருங்கி நின்று பேசுகிறார்கள். இதை யாரும் சொல்லிக்
கொடுப்பதில்லை. இந்தப் பண்பாட்டுக் கூறு
குழந்தைகளிடம்
தானாகவே அமைந்து விடுகிறது.
1.3.3 பண்பாடும் குறியீடும்
ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு (Symbol)
எனப்படும். சிவப்புக் கொடி அபாய அடையாளத்தின்
குறியீடு.
ஒவ்வொரு பண்பாட்டைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தும்
குறியீடுகளும் அவரவர்களின் பண்பாட்டுக் கூறுகளாகக்
கருதப்படுகின்றன.
வண்ணங்கள்
பல்வேறு சமுதாயங்களும் வண்ணங்களை (colours)
வெவ்வேறு
பொருள் உணர்த்தும் குறியீடுகளாகப்
பயன்படுத்துகின்றன. ஒரே வண்ணம், ஒவ்வொரு பண்பாட்டைச்
சார்ந்தவர்களுக்கும் ஏற்ப, ஒவ்வொரு விதமான பொருளைக்
கொடுக்கும்.
எடுத்துக்காட்டாக, வெண்மை நிறம்,
ஐரோப்பியர்களிடையே தூய்மையின் அடையாளமாகக்
கருதப்படுகிறது. திருமணங்களில் வெள்ளை ஆடைகளையே
அவர்கள் அணிகின்றனர். வெண்மை அங்கு மங்கலமாகக்
கருதப்படுகிறது; கருப்பு துக்கத்தின் அடையாளமாகக்
கொள்ளப்படுகிறது. ஆனால், சீனர்களுக்கோ வெள்ளை நிறம்
துக்கத்தின் அடையாளம்!
தாலியும் மெட்டியும்
 |
தமிழ்நாட்டில் திருமணமான பெண்கள்
கழுத்தில் அணியும் தாலியும், காலில்
அணியும் மெட்டியும் இவ்வகையில் பண்பாட்டுக் குறியீடுகளே யாகும்.
இவ்வாறு, எல்லாப்
பண்பாடுகளும், தங்கள் பண்பாட்டை
வெளிப்படுத்தவும், அதனைப் பேணவும்
குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. நெற்றியில் அணியும் திலகமும், திருநீறும், தலையில்
சூடும் மலரும், கைகளில் அணியும் வளையலும் இவ்வகையிலான
பண்பாட்டுக் குறியீடுகளே. |
|
|