1.4
பண்பாட்டில் கூட்டு வடிவங்கள் தனிக்கூறுகளும் |

|
தனிக்கூறுகளும், தொடர்புடைய தனிக்கூறுகள் சில இணைந்தும் உருவாகும்
கூட்டு வடிவங்களைத்
தன்னகத்தே கொண்டு பண்பாடு அமையும்.
அகஉணர்வு என்பதும், புறச்செயல்கள் அல்லது சம்பிரதாயங்கள்
என்பவையும் பண்பாட்டின் இரு கூறுகள். அகஉணர்வின்
வெளிப்பாடே
புறச்செயல்கள். இவை இரண்டும் சேர்ந்து
அமைவதே
பண்பாட்டின் கூட்டு வடிவங்கள்.
விருந்து ஓம்புதல்
எனும்
சிந்தனை அகஉணர்வு வெளிப்படுத்தும் பண்பாடு. விருந்து
ஓம்பும்பொழுது மேற்கொள்ளும் உபசரித்தல், பணிவிடை
செய்தல்
போன்றவை புறப்பண்பாடு.
இத்தகைய கூட்டு வடிவங்களால் அமையும் பண்பாட்டை இரண்டு
வகையாகப் பிரிப்பார்கள்.
1. புறச்செய்கைகள், பழக்கவழக்கங்கள் வெளிப்படுத்தும் பண்பாடு (Material
Culture) புறப்பண்பாடு.
2. அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு (Non Material Culture)
அகப்பண்பாடு. |
1.4.1
புறத்தோற்றங்களினால் வெளிப்படுத்தும் பண்பாடு
நெடுங்காலமாகப்
பின்பற்றப்பட்டு வரும் சில சடங்குகள்,
சில அமைப்புகள், பழக்க
வழக்கங்கள் முதலியன புறத்தோற்றத்தினால் வெளிப்படும்
பண்பாட்டுக் கூறுகளாகக்
கருதப்படுகின்றன.
பூவால் புலப்படும் பண்பாடு
பொதுவாகத் தமிழ் வீரர்கள் வாழ்வில் பூ முக்கிய பங்கு
வகிக்கிறது. பண்டைத் தமிழர் போர் செய்தலையும் ஒரு
நெறியாக,
ஒழுக்கமாகக் கருதினர். எனவே, போரின்
ஒவ்வொரு நிலையையும்
வெளிப்படுத்த, ஒவ்வொரு வகையான பூக்களைப் போர்வீரர்கள்
அணிந்து சென்றனர். அவை,
போர்வீரர்கள், எத்தகையப் போரை
மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும்
அடையாளங்களாக அமைந்திருந்தன. உழிஞைப் போர்,
தும்பைப்
போர், வாகை என அவற்றிற்குப் பெயர் சூட்டியிருந்தனர்.
(உழிஞை, தும்பை, வாகை என்பன பூக்களின்
பெயர்கள்).
உழிஞைப்போர்
ஒரு மன்னன் இன்னொரு மன்னனின்
கோட்டையைச் சுற்றி முற்றுகை இடுவது உழிஞைப்போர் என்று
அழைக்கப்பட்டது.
அப்பொழுது முற்றுகையிடும் நாட்டைச் சார்ந்த
படைவீரர்கள் உழிஞைப் பூவை அணிந்திருப்பார்கள்.
தும்பைப்போர்
இருபடைகளும் ஒன்றிற்கு ஒன்று மோதிப் போரிடுவதைத்
தும்பைப்போர் என்று அழைப்பர். போரிடும்போது இரு
தரப்பினரும் தும்பைப் பூவை அணிந்திருப்பர்.
வாகை
தமிழில் வாகை என்றால் வெற்றி என்று
பொருள். வெற்றி பெற்ற
வீரர்கள், தாம் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வாகைப்
பூவைச் சூடிச் செல்வர்.
நாட்டை
ஆளுகை செய்த பாண்டியர், சேரர்,
சோழர் ஆகிய மன்னர்களும்,
தம் நாட்டிற்கு முறையே
வேப்பம் பூ, பனம்பூ, ஆத்திப்பூ
ஆகியவற்றையே
இலச்சனைகளாகக் (ensign) கொண்டிருந்தனர்.
இல்வாழ்க்கையிலும் பூ சிறப்பிடம்
பெற்றிருந்தது.
கன்னியரும், மணமான பெண்களுமே தம் தலையில்
பூச்சூடுவர்.
கணவனை இழந்த கைம்பெண் (Widow) தலையில்
பூச்சூடிக் கொள்வதில்லை. இவையெல்லாம், புறச்செய்கைகளில்
காணும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.
இதைப்போல, மனிதர்களால்
உருவாக்கப்படும், கட்டடங்கள், ஒப்பனைகள், அணிகலன்கள்,
ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் காணும் சிறப்புகள்
புறத்தோற்றத்தில் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஆகும்.
1.4.2 அக
உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு
மேலை நாடுகளில் தாம் அணிந்திருக்கும் தொப்பியைக்
கழற்றி மரியாதை செலுத்துவார்கள். கீழ்த்திசை
நாடுகளில், இரண்டு
கைகளையும் கட்டி, குனிந்து நிற்பார்கள். இத்தகைய நிகழ்ச்சிகள்
எல்லாம், அக
உணர்வை வெளிப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகள்.
தமிழர் பண்பாடு
தமிழர்கள், வயதில் மூப்பு உடையவர்களையும் சிறப்பு உடையவர்களையும் நேரில் பார்த்தால், எழுந்து நிற்பார்கள். இது தமிழர்களின்
பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. அவர்களுக்கு
மரியாதை கொடுக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு
எழுந்து நின்று
மரியாதை செலுத்துகிறார்கள். இந்நிகழ்ச்சி, புறத்தோற்றம் போல்
காணப்பட்டாலும்,
அவர்களின் அக உணர்வுகளையே அவர்களது
புறச் செயல்
வெளிப்படுத்துகின்றது.
அக உணர்வுகள் வெளிப்படுத்தும் பண்பாடு
ஆங்கிலத்திலுள்ள
‘CULTURE’ என்ற சொல்லுக்குப்
பக்குவப்படுத்தல் என்று ஒரு பொருளும் உண்டு. மனம்
பக்குவம்
பெற்ற அல்லது மனம் பண்பட்ட ஒருவரை Cultured man என்று
அழைக்கின்றோம். மனப்பக்குவம் என்பது உயர்ந்த
சிந்தனைகளை
உள்வாங்கி அவற்றிற்கு ஏற்றவாறு மனத்தை
உருவாக்கிக்
கொள்ளுதல் ஆகும். நல்ல சிந்தனைகள் நல்ல மனத்தின்
வெளிப்பாடு. நல்ல சிந்தனைகள் அல்லது உயர்ந்த சிந்தனைகள்
ஓர் இனத்தின் அல்லது ஒரு நாட்டின் உயர்ந்த பண்பாட்டைக் குறிப்பிடும்.
இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு
வேறுபட்ட சிந்தனைகள் உருவாவது இயல்பு. அது சூழலின்
அடிப்படையில் அமையும்.
வேறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட
பண்பாட்டை
வெளிப்படுத்தும். இத்தகைய சிந்தனைகள் ஒரு
மனிதனின் அக
உணர்வுகளையே வெளிப்படுத்தும். எனவே
சிந்தனைகளின் வாயிலாகப் புலப்படும் அகஉணர்வுகள்,
பண்பாட்டின் வெளிப்பாடு எனலாம்.
நாடோடிக் கூட்டமாக
அலைந்து
திரிந்த மக்கள், குடியிருப்பு அமைத்து, முடியாட்சியைத்
தோற்றுவித்துக் குடியாட்சி மலரச் செய்த காலம் வரையிலும்,
குழுவாக, இனமாக இன்னும் பலபலப் பிரிவாகப் பிரிந்து
சண்டையிட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் பல.
இத்தகைய சூழலில்,
இந்த உலகிலுள்ள மனிதர் அனைவரும் ஓர்
இனம், ஒருவருக்கு
ஒருவர் உறவு உடையவர்கள். எல்லா ஊரும்
தம் சொந்த ஊரே
என்பதனை "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பல
எல்லைகளைக் கடந்த உயர்ந்த
சிந்தனையாகத் தமிழர்கள்
வெளியிட்டுள்ளனர். அது அந்தச் சிந்தனையைக் கூறிய
காலத்திலும், இன்றைய சூழலிலும் மிகச் சிறந்த சிந்தனையாகக்
கருதப்படுகிறது. இது
தமிழர்களின் அகஉணர்வின் - பண்பாட்டின்
வெளிப்பாடு.
மனத்தூய்மை
‘அறம்’ என்றால் என்ன என்பதற்குப் பலரால் பல
விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் திருவள்ளுவர்,
அறன் என்பதற்கு
மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்துஅறன்
ஆகுல நீர பிற (குறள்: 34)
|

|
(கண் = இடம், மாசு
= குற்றம், இலன் = இல்லாதவன், பிற ஆகுல நீர் = பிற ஆரவாரத் தன்மையன)
என்று
விளக்கம் கொடுக்கிறார்.
மனத்தில் எந்த விதக் குற்றமும்
இல்லாமல் தூய்மையாக இருப்பதுதான் அறம் என்று வள்ளுவர்
கூறுகிறார். மனத்தூய்மை என்பது சமயத்தவரும்,
சமுதாயத்தவரும்,
ஒத்துக் கொள்ளுகின்ற ஓர் அக உணர்வு.
இந்த அக உணர்வு
வள்ளுவரால் வெளிப்படுத்தப்படும்
தமிழர்களின் பண்பாட்டுக்கூறு.
தன்மதிப்பீடு:
வினாக்கள் - I
1. பண்பாடு என்றால் என்ன?
2. பண்பாட்டு வாயில்கள் எவை?
3. கூட்டு வடிவங்களினால் ஏற்படும் பண்பாடு எத்தனை
வகைப்படும்? எவை?
4. குறியீடு எவ்வாறு பண்பாட்டுக் கூறாகக் கருதப்படுகிறது?
ஓர் எடுத்துக்காட்டு தருக.
5. தமிழர்கள் வயதில் மூப்பு உடையவர்களையும்
சிறப்புக்கு உரியவர்களையும் பார்த்த உடன் எழுந்து
நிற்பார்கள். இது எத்தகைய பண்பாட்டு உணர்வை
வெளிப்படுத்துகிறது?
|
|