பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை. ஒரு சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் ஆகியவை பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும். நாம் உண்ணும் உணவு, அணியும் ஆடை, உறைவிடம் முதலியன பண்பாட்டு வாயில்கள். மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் முதலியன புறத்தோற்றத்தால் வெளிப்படும் பண்பாடு. அதைப்போல ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளம், எண்ணச் சிறப்பு, விழுமியம் ஆகியவை அச்சமுதாயத்தின் அகப்பண்பாட்டின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. உலகளாவிய நிலையிலும், நாட்டளவிலும், சமுதாய அளவிலும் சில வகையான பண்பாடுகள் அமைந்துள்ளன. பல நாடுகளின் பண்பாடுகள் கலந்து பன்முகப் பண்பாட்டிற்கு வாய்ப்பு அளிக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் ஒரு கிராமம்போல் சுருங்கிவிட்டது. அதனால் பல பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்கின்றன. இவ்வாறு பண்பாடு பற்றிய ஒரு பொது விளக்கம் இப்பாடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. |