அன்றாட வாழ்விலும், பலரது வாய்மொழியிலும் இடம் பெற்று உயிர்ப்புடன் விளங்குவது பழமொழி. ஒரு நாட்டின் உண்மையான வாழ்க்கைநெறி, நாகரிகம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனை வளம், ஆகிய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவது பழமொழி (proverb). • பழமொழி ‘பழம்’ என்றால் பழமை என்ற பொருள் உண்டு. அதைப் பழைய என்றும் குறிப்பிடுவர். பழமை வாய்ந்த மொழியைப் பழமொழி (பழம் + மொழி) என்பர். இதை முதுமொழி என்றும் அழைப்பர். முதுமை என்றாலும் பழமையைச் சுட்டும். பழமொழி என்றால் என்ன என்பதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். தாம் நினைத்த கருத்தைப் பிறருக்கு எளிமையாகப் புரியும்படி, நுண்மையாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், சுருக்கமாகச் சொல்வது முதுமொழி (பழமொழி) என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
(நுண்மை = நுட்பம், வரூஉம் = வரும், ஏது = காரணம், நுதலிய = சொல்லிய) தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, தமிழ் மக்களிடம் பழமொழிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பது இதனால் புலனாகும். • பழமொழியின் பயன் தம் வாழ்வில் பழமொழியைக் கேட்டிராத மக்கள் இல்லை எனலாம். பிறர் சொல்ல நாம் கேட்கிறோம் என்ற உணர்வு எழாத வகையில் நமது உரையாடலில் (conversation) முழுமையாகக் கலந்து நிற்கும் வலிமை உடையது பழமொழி. இளையவர், முதியவர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமுதாய விழுமியங்களுக்கு உட்படுத்தும் தன்மை உடையது பழமொழி. ஒரு செயலைச் செய்யும் வகை அறியாது திகைத்து நிற்கும் போது, செய்ய வேண்டியதைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறுவதுபோல் அமைந்திருப்பது பழமொழி. துன்பம் மிகுந்த சூழலில் மன அமைதி நல்குவது பழமொழி. பாமரர்க்கு வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழ்வது பழமொழி. காலந்தோறும் அழியாமல் வழங்கப்படும் தமிழ்ப் பழமொழிகள் முன்னோர்களின் பட்டறிவையும், அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும் தாங்கி வரும் பண்பாட்டுக் கருவூலங்களாகவும் காட்சியளிக்கின்றன. • முயற்சியின் சிறப்பு உலகிலுள்ள பல சாதனைகளுக்கு அடிப்படைக் காரணம் முயற்சியே. மனிதரின் விடா முயற்சியின் காரணமாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்துள்ளன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது முயற்சி. இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் தமது பட்டறிவைப் (Experience) பழமொழியாக வழங்கினர். ‘முயற்சி திருவினையாக்கும்’ (திரு = செல்வம்) என்னும் பழமொழி முயற்சியின் முக்கியத்துவத்தையும் அதனால் பெறும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது. ஒருவன் முயற்சி செய்வானானால் அவனுக்கு அவனது முயற்சிக்கு ஏற்றவகையில் பலன் கிடைக்கும். அதாவது செல்வத்தை வழங்கும். தமிழில் ‘திரு’ என்பதற்குப் பலபொருள்கள் உண்டு. செல்வம், அழகு, பெருமை, உயர்வு, அறிவு அனைத்தையும் அது குறிக்கும். முயற்சியினால் ஏற்படும் அறிவியல் சாதனைகளால், பெருமையும் புகழும் வரும். சிலருக்குச் செல்வம் கிடைக்கும். சிலருக்குப் பணி உயர்வு, பொருளாதார மேம்பாடு கிட்டும். முயன்று மேலும் மேலும் கற்கக் கற்க அறிவு பெருகும். எனவே முயன்றால் கிட்டாதது எதுவும் இல்லை என்பதே இப்பழமொழியின் பொருள். தம் முயற்சியில் நம்பிக்கை கொண்ட, முயற்சியினால் கிடைக்கும் பயனை உணர்ந்த ஒரு பண்பாட்டுப் பெருமை உடையவர்கள் தமிழர்கள் என்பதை இத்தகைய பழமொழிகள் புலப்படுத்துகின்றன. • ஐந்தும் ஐம்பதும் ஒருவனை இளமைப் பருவத்தில் எவ்வாறு வளர்க்கிறோமோ, பழக்குகிறோமோ, பக்குவப்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே, அவனது வருங்கால நடவடிக்கைகள், பண்பு நலன்கள் ஆகியவை அமையும். இந்த வளர்ப்புமுறை எப்பொழுது தொடங்கும்? அறியாப்பருவத்திலிருந்து அறியும் அல்லது பிறவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் நிலையைப் பெறும் பொழுது தொடங்கும். இது பொதுவாக ஐந்து வயதில் தொடங்கும். அதாவது இந்தப் பருவம்தான் ஒரு குழந்தையை உருவாக்குவதற்குரிய தொடக்க நிலை என்பர். இந்தப் பருவத்தில் கொடுக்கும் பயிற்சி, அறிவுரை, கல்வி போன்றவை இறுதிக்காலம் வரையிலும் நிலைத்து நிற்கும். இந்த உண்மையை உணர்ந்த தமிழ் மக்கள், இவ்வுண்மை வருங்காலச் சமுதாயத்திற்கும் பயன்படும் என்ற வகையில் பழமொழியாக வழங்கியுள்ளனர். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதுதான் அந்தப் பழமொழி. ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி விளக்குகிறது. இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என்பதே இதன் பொருள். இதுபோன்ற பழமொழிகள் பழந்தமிழர் நம்பிக்கைகளையும் அவற்றின் அடிப்படையிலான பண்பாட்டுக் கூறுகளையும் வெளிப்படுத்துகின்றன. 2.2.3 விடுகதையும் (Riddles) பண்பாடும் பழமொழியைப் போல, பாமரர்களிடம் வாய்மொழியாக வழங்கி வரும் இன்னொரு பண்பாட்டுக் கூறு விடுகதை. இது இன்றைய நொடி வினா (Quiz) முறைக்கு முன்னோடி எனலாம். இதுவும் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழி பேசுவோரின் மதி நுட்பத்தையும், புலமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இன்று வரையிலும் இதைக் காப்பாற்றி வருபவர்கள் பாமரர்களே. விடுகதை என்பது 'அது என்ன?' 'அது யார்?' என்பது போன்ற கேள்விகளுடன் அமைந்திருக்கும். விடையைத் தானே ஊகித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளடக்கம் அமைந்திருக்கும். இதுவே விடுகதை. வினாவுக்கு உரிய விடை மூலம் விடுவிக்கப்பட வேண்டிய கற்பனைக் கதை என்பதினால் விடுகதை என அழைக்கப்பட்டது என்பர். இது குறுகிய வடிவ அமைப்பைக் கொண்டது. மிக
எளிமையாக அமைந்திருக்கும். முதலில் பாட்டாக இருந்தது. பின்னர் உரைநடையிலும் அமைந்துள்ளது. சொற்களுக்குள் புதிர் அமைத்துச் சொல்லும் விடுகதைகள் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. பெரும்பாலும் நகைச்சுவை மிகுந்திருக்கும் அவை மக்களைச் சிந்திக்க வைப்பதோடு, விடை கண்டுபிடித்த பின் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்திருக்கும். விடை தெரிந்த பின் மீண்டும் மீண்டும் அந்த விடுகதையை நினைவுபடுத்தும் ஆர்வத்தை ஊட்டும். கீழ்க்குறிப்பிடும் விடுகதை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கால் இல்லாத கள்வன் இது படிப்பதற்குச் சுவையாக உள்ளது. இதில் நகைச்சுவைத் தன்மையும் அமைந்துள்ளது. கால் இல்லாமல் நடக்க இயலாதவன் எப்படிக் கால் உள்ளவனைப் பிடிக்க முடியும்? தலையில்லாதவனுக்கு முகமும் கிடையாதே, அவன் எப்படி முகமில்லாமல் சிரிக்க முடியும்? இவ்வாறு விடுகதையைக் கற்போர் பல வினாக்களை வினவும் வாய்ப்பை இந்த விடுகதை ஏற்படுத்துகிறது. பாம்பு தவளையை வாயால் கவ்வியது; இதைப் பார்த்து நண்டு சிரித்தது. இதுதான் இவ்விடுகதைக்குரிய விடை. (பாம்புக்கு கால் கிடையாது. நண்டுக்குத் தலை கிடையாது) இந்த விடுகதையை உற்று நோக்கினால். உங்களுக்கு மேலும் ஒரு கருத்துப் புலப்படும். பாம்பைக் 'கள்வன்' என்றும் தவளையைக் 'கால் உள்ளவன்' என்றும், நண்டைச் 'சிரித்தான்' என்றும் உயர்திணையில் கூறும் நயத்தை அறிந்து கொள்ள இயலும். உயிரினங்களில் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள் எதுவும் சிரிப்பதில்லை. ஆனால் இந்த விடுகதையில், நண்டு சிரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திணை மாற்றம் விடுகதையின் புதிர்த்தன்மையையும் சுவையையும் கூட்டும் ஓர் உத்தி ஆகும்.
|