4.1
 இலக்கியம்  | 
  
  | 
  
  
  
 இலக்கியம் மக்கள் வாழ்க்கையில் இருந்து மலர்கிறது.
 எனவே, இலக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய
 தொடர்பு இருந்து வருகிறது. இலக்கியத்தின் பாடுபொருளாக
 அமைவதும் வாழ்க்கையே. வாழ்க்கை முறையே 
 பண்பாட்டை
 வெளிப்படுத்தும் வாயில். தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை இனம்
 காண்பதற்குத் தமிழ்
 இலக்கியங்கள் சான்றாக அமைந்துள்ளன.
 
 
 
  
  
 கவிதை என்பது மெய்ம்மையின் நகல் என்று பிளேட்டோ
 எனும் அறிஞர் குறிப்பிடுவார். வாழ்க்கையை நகல் எடுத்துக்
 காட்டுவது இலக்கியம்.
 இலக்கியம் அது படைக்கப்படும் காலத்தில்
 வாழ்ந்த
 மக்களின் பண்பாட்டையும் எடுத்துரைக்கும். அதற்குத்
 தமிழ் இலக்கியங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.
 
 
 
  
  
 தமிழகத்தில் ஒரு நீண்ட நெடிய தமிழ் இலக்கிய மரபு
 இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாய்த் திகழ்பவை தமிழ்
 இலக்கியங்கள். இவ்விலக்கியங்களைப் படைத்த புலவர்கள், தாம்
 வாழ்ந்த சூழலை மிகவும் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ளனர். ஐவகை 
 நிலங்களில் வாழ்ந்த மக்கள்,
 அவர்களின் உணவு வகை, தொழில்வகைகள், கலைகள், பழக்க
 வழக்கங்கள்,
 நம்பிக்கைகள், வாழ்க்கை முறை ஆகியவற்றைத் 
 தாம்
 இயற்றிய இலக்கியங்கள் வாயிலாக
 வெளிப்படுத்தியுள்ளனர். 
 
 
 
 4.1.1 அகப்புறப்
 பண்பாடு 
 
 
 | 
  
 
    | 
  
 
 | 
  தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து
 சென்றுள்ளான். அவன் நினைவாகவே
 இருக்கும் தலைவி, தலைவனைக்
 காண்பதற்கு விரும்புகிறாள்.
 தலைவனைக் காண
 விழையும்
 துணிச்சலோடு செல்லும் அவளது நெஞ்சு, நாணத்தோடு
 திரும்பி வருகிறது. இந்தச் செயல் அடிக்கடி
 அவள் நெஞ்சுள் நிகழ்கிறது. இவ்வாறு செயல்பட்டுக்
 கொண்டிருக்கும் தன்
 நெஞ்சைப் பார்த்துத் தலைவி,  
   | 
  
  
 
 
 
 பெரும்செல்வர்
 இல்லத்து நல்கூர்ந்தார் போல  
 வரும் செல்லும் பேரும் என்நெஞ்சு(முத்தொள்ளாயிரம்: 88)  | 
   | 
  
  
  (நல்கூர்ந்தார் = வறுமையுடையவர்,  பேரும்
 = மீண்டும் வரும்)
 
  என்று குறிப்பிடுகிறார்.
 
  செல்வந்தர் வீட்டில் அவர்களைக் காணச்
 சென்ற வறியவர்கள்,
 கதவு அடைத்திருப்பதைக் கண்டு,
 தட்டித் திறக்கச் செய்யத் தைரியம் இல்லாமல், வெறும் 
 கையோடு திரும்பி வரவும் விருப்பம்
 இல்லாமல், போவதும் வருவதுமாக இருந்தால் எப்படி
 இருக்குமோ, அவ்வாறு தலைவனைக்
 காணச்சென்ற தன் நெஞ்சம்
 இருக்கிறது என்று தலைவி கூறுகிறாள். அவளது நெஞ்சம்
 தலைவனிடம் வெட்கத்தோடு 
 போவதும், திரும்பி வருவதும்
 செல்வந்தரை நாடிச் செல்லும் வறியவர்க்கு உவமையாகச்
 சொல்லப்பட்டுள்ளது.
 
  இப்பாடலில், உவமைச் சிறப்பு ஒரு பக்கம்
 இருந்தாலும்,
 இன்னொரு பக்கம் தமிழ்ப் பண்பாடு பற்றிய செய்தியும்
 புலப்படுகிறது. தன்னை நாடி வரும் வறியவர்களுக்கு உதவும்
 தமிழரின் ஈகைப்பண்பு தெரிகிறது.
 அது மட்டுமா? வறுமையின்
 காரணமாக மானமிழந்து எப்படியாவது பொருளைப்
 பெறவேண்டும் என்ற எண்ணம் வறியவர்களுக்கு இல்லை;
 பிறரிடம் சென்று யாசிக்க அவர்கள் மனம் இடம்
 தரவில்லை;
 அந்தச் செயலுக்கு நாணுகிறார்கள்; வறுமை 
 அவர்களைத்
 துரத்துகிறது; தன்மானம் தடை செய்கிறது.
 இவ்வாறு அவர்கள்
 மனம் போராடக் காரணம் என்ன?
 மானத்தோடு வாழ விரும்பும்
 அவர்களது பாரம்பரியம்.
 
  மேலும், காதல் வாழ்க்கையில் தலைவனைப்
 பிரிந்து வாழும்
 தலைவியின் துயரம் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது.
 நாணமும் பயிர்ப்பும் உடைய
 பெண்ணின் தயக்கம் திரும்பி வரச்
 செய்கிறது. தலைவன்மீது கொண்ட அன்பு போகச் செய்கிறது.
 இது தலைவி தலைவன் மீது கொண்ட காதலையும், பிரிவினால்
 அவள் அடையும் துன்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
 காதலர்களிடையே காணப்பட்ட அன்பை இப்பாடல் நமக்குப்
 புலப்படுத்துகிறது.
 
  தமிழர்கள் தம் வாழ்க்கையை அகம் புறம்
 என்று பிரித்து
 வாழ்ந்தனர். தலைவனுக்கும் தலைவிக்கும்
 இடையேயுள்ள காதல்
 வாழ்க்கை அகத்துள் அடங்கும். அதற்குப் புறம்பான போர்,
 கொடை போன்றவை புறமாகக் 
 கருதப்படும். மேற்குறிப்பிட்ட
 இந்தப் பாடலில் முதல்
 வரி புறமும் இரண்டாவது வரி அகமும்
 ஆக அமைந்திருக்கிறது. 
 இது இரண்டு வகைப் பண்பாட்டிற்கும்
 தமிழர் கொடுத்த
 சிறப்பை வெளிப்படுத்துகிறது. 
   | 
  
  
  
 
 
                  |    
                      4.1.2 பரந்துபட்ட மனமும் பண்பாடும் 
                     
 தொன்றுதொட்டே 
 தமிழர்கள் உலகளாவிய நோக்கும்
 பரந்துபட்ட மனமும் கொண்டவர்கள். அதற்குப் பழந்தமிழ்
 இலக்கியங்கள் பல
 சான்றுகள் பகர்கின்றன.
 
  
 
 இந்த உலகத்திலுள்ள மானிடர் யாவரும் ஓர் இனமே.
 எனவே அவர்கள் நம் உறவினர்கள். அதனால் அவர்கள்
 வாழும்
 ஊரும் நமது ஊர்களே. இத்தகைய ஒரு பரந்த
 மனப்பான்மையை  
 
 
 
 
 
 யாதும் ஊரே; யாவரும்
 கேளிர்
  
 தீதும் நன்றும் பிறர்தர வாரா(புறம் : 192)  | 
   | 
  
  
  (யாதும் = எந்த ஊரும், கேளிர் = உறவினர்,  தீது = தீமை,
 வாரா = வராது)   என, கணியன் பூங்குன்றன் எனும் புலவர்
 குறிப்பிடுகிறார்.
 
 
 
  சங்க காலத்தைச் சார்ந்த இந்தப் பாடலில்
 வரும் கருத்து,
 இந்தியச் சிந்தனைகளிலேயே மிகவும்
 புரட்சிகரமான ஒன்று. சாதிய
 அடிப்படையிலான இந்தியச்
 சமுதாய அமைப்பில், எல்லை கடந்த
 ஓர் உலகளாவிய பார்வை, தமிழர் பண்பாட்டின் உயர்ந்த
 நிலையைக் கூறுகிறது.
 மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பெர்டர்ன்
 ரசல்
 (Bertand Russel) போன்றோர் ஓர் - உலகக் கோட்பாட்டை
 (One
 World) வெளியிட்டனர். ஆனால் தமிழர்கள் காலவரையறை
 சொல்ல இயலாத காலத்திலேயே உலகளாவிய தம் பரந்துபட்ட
 நோக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சங்க காலத்தில் வாழ்ந்த
 தமிழர்களின் சிந்தனை முதிர்ச்சியை
 எண்ணிப்பாருங்கள்.  | 
  
  
  
          4.1.3 
            நன்மையும் தீமையும்  
 இதற்கு முன்பகுதியில் சுட்டிய பாடலின் இரண்டாவது வரியைச் சற்று நோக்குங்கள்! 
 
 
 
 
 | தீதும் நன்றும்
 பிறர் தர வாரா | 
   | 
  
  
  நமக்கு வரும் தீமையும் நன்மையும், பிறரால் நமக்கு வராது.
 நமது செயல்களாலேயே நமக்கு வந்து சேரும் என்பது இந்த
 வரியின் பொருள். இதனால் வெளிப்படும் செய்தி என்ன?
 சற்று சிந்தித்துப் பாருங்கள்!
 
 
 
  
 பிறருக்குத் தீங்கு விளைவிக்க நினைக்காத 
 மன இயல்பு வேண்டும். அத்தகைய பண்பாடு கொண்ட தமிழர் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதைக்
 குறிப்பிடுகிறது இல்லையா? 
 
 
 
  4.1.4 
                      பொதுநலமும் பண்பாடும்  
 இந்த உலகத்தில் பல தீமைகள் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் தன் நலத்திற்காக எத்தகைய 
 தீமைகளையும் செய்யத் துணியும் தீயவர்கள் பலர் இந்த 
 உலகத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த உலகம்
 இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன 
 காரணம்? சுயநலம் கருதாத பல நல்லவர்கள்
 இருக்கின்றார்கள். எத்தகைய நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கடலுள் மாய்ந்த இளம் பெரும்வழுதி எனும் புலவர் கீழ்க்குறிப்பிடும் பாடலில்
 சுட்டிக் காட்டுகிறார். 
 
 
 
 
 உண்டால் அம்ம,
 இவ்வுலகம், இந்திரர்,
  
 அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத் 
  
 தமியர் உண்டலும் இலரே. முனிவிலர்
  
 துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப் 
  
 புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழியெனின்
  
 உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
  
 அன்ன மாட்சி அனைய ராகித்,
  
 தமக்கென முயலா நோன்தாள்,
  
 பிறர்க்கென முயலுநர் உண்மையானே(புறம் : 182)   | 
   | 
  
  
  (தமியர் = தனித்து,  இலரே = இல்லாதவர்,  முனிவு = கோபம், துஞ்சலும் இலர் = சோம்பி இருக்க மாட்டார்கள்,  அயர்வு
 = சோர்வு,  அன்ன = அத்தகைய,  மாட்சி
 = சிறப்பு,  முயலா = முயற்சிக்காத,
 நோன்தாள் = வலிய முயற்சி)
 
 
 
 
 
  தேவர் உலகத்தில் வாழ்பவர்கள் இந்திரர்கள். இவர்கள்
 உண்ணும் உணவு அமிழ்தம். இந்த அமிழ்தத்தை உண்ணுவதாலேயே 
 இவர்களுக்குச் சாவு இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த 
 அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள். எந்தச் சூழலிலும் சினம்
 கொள்ளமாட்டார்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள்.
 பழியான ஒன்றைச் செய்வதற்கு உலகமே பரிசாகக்
 கிடைத்தாலும் பழியான செயல்களைச் செய்ய
 மாட்டார்கள். இவ்வாறு பிறருக்காக வாழும் பொதுநலம்
 படைத்தோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்கிறது.
 
  
 
 
 
  மேற்குறிப்பிட்ட பாடலின் வாயிலாக நாம்
 பெற்றுக் கொண்ட செய்தி யாது? தமிழர்கள் எவ்வளவு
 பெரிய சிறப்புக்குரிய பொருள் கிடைத்தாலும், தவறான
 செயல்களில் ஈடுபட மாட்டார்கள். பொது நலத்திற்காகவே 
 எதையும் செய்வார்கள் - செய்ய வேண்டும் என்ற உயர்ந்த
 குறிக்கோளுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறு
 வாழவும் வற்புறுத்தி அறிவுரை கூறியுள்ளனர். இது அவர்களது
 பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
 
  
 
 
 
  தமிழ் இலக்கியங்கள் தரும் இத்தகைய
 செய்திகள் எல்லாம் இலக்கியம் எவ்வாறு பண்பாட்டை 
 வெளிப்படுத்துவதற்குரிய வாயில்களாகத் திகழ்கின்றன
 என்பதனை இயம்பும்.  | 
  
  
   |