4.2 கலைகளும் பண்பாடும்

c03110ad.gif (1294 bytes)

‘கலை என்பது உணர்வின் வெளிப்பாடு. அது உணர்வை வெளியிடுவதுடன் பிறருக்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமை உடையது’ என்பார் டால்ஸ்டாய். கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம்; மகிழ்ச்சியின் மாட்சி; நாகரிகத்தின் ஒளிவிளக்கு; பண்பாட்டின் உரைகல் என்று குறிப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கலையில் தமிழர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். பல அரிய கலைகளைப் படைத்தனர். கலை உணர்வு கொண்ட தமிழர்களின் பண்பாட்டைத் தெரிந்து கொள்வதற்கு அவை அடிப்படைச் சான்றுகளாக அமைந்துள்ளன.

4.2.1 கட்டடக் கலை

சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது கட்டடக்கலை. தொழில்நுட்பம், அழகு, கற்பனை ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று கட்டடக்கலை.

மனித இனப் பண்பாட்டின் முன்னேற்றத்தைத் தெளிவாக அறிவதற்குக் கட்டடக்கலையே சான்று பகர்கின்றது.

 • கட்டடக்கலையும் தமிழர் பண்பாடும்
 • தொடக்கக் காலத்தில் சிறு குடிசை கட்டியதிலிருந்து, அரிய கலைகளின் கருவூலமாகக் காட்சியளிக்கும் கோயில்கள் கட்டப்பட்ட காலம் வரையிலும் கட்டடக்கலை பல்வேறு வகையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி எதைக் காட்டுகிறது? தமிழர் தமது சமூக - சமயச் சூழல்களையும், வாழ்க்கை முறைகளையும் நோக்கங்களையும், நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துவதற்கு ஓயாமல் உழைத்து வந்திருக்கின்றனர். அவற்றின் வாயிலாகத் தம் பண்பாட்டுக் கூறுகளையும் புலப்படுத்தியுள்ளனர் என்பவை புலனாகும்.

 • தஞ்சைப் பெருவுடையார் கோயில்
 • சோழப் பேரரசில், முதலாம் இராசராசன் மிகச் சிறந்த ஒரு மன்னன். வெற்றி வீரனாகத் திகழ்ந்த இராசராசன், சிறந்த சமயப் பற்றும் கலைத்திறனும் உடையவன். அவன் எழுப்பியது தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

 • வியப்பு மிகு விமானம்
 • இக்கோயிலின் விமானம் அழகு மிகுந்த பிரமிடு போன்ற தோற்றம் உடையது. இதில் வெளிப்படும் கலையழகும், கட்டமைப்பும், நுட்பமும் தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் ஒரு சின்னம். இதன் விமானம் மாபெரும் தோற்றத்தோடு அழகு மிகுந்த வடிவம் உடையது. இதன் உயரம் 64.5 மீட்டர். இதோ அதைப் பாருங்கள்!

  விமானத்தின் அடித்தளம் சதுரமாகவும் செங்குத்தாகவும் அமைந்திருக்கிறது. உச்சியில் கலசம் பொருத்தப்பட்ட வளைமாடம் (dome) உள்ளது. பதினாறு மாடங்களைக் கொண்ட பிரமிட் போன்ற உடற்கட்டு மேல்நோக்கி, வடிவில் குறுகிக் கொண்டே செல்லும். இதன் முடியின் பரப்பு அளவு, அடித்தளத்தின் பரப்பு அளவில் மூன்றில் ஒரு பகுதியாகும். அம்முடியின் அமைப்பு சதுரமான மேடைபோல் அமைந்துள்ளது. அதன் மீது, உள்நோக்கி வளைந்த கழுத்து அமைப்போடு கூடிய சிகரம் அமைந்துள்ளதைக் காணலாம்.

 • நிழல் விழாக் கலசம்
 • கோயிலின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கலசத்தின் நிழல் கீழே தரையில் விழுவதே இல்லை. ஞாயிறு எத்திக்கிற்குச் சென்றாலும் கலசத்தின் நிழல் தரையில் விழாத வகையில், அதை அமைத்திருப்பது, தமிழர்கள் கட்டடக்கலையில் அடைந்துள்ள உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது. அவர்கள் மதிநுட்பத்தையும் ஆற்றலையும், முருகியல் உணர்வினையும் உணர்த்துகிறது. சோழர்காலத் தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பிற்குத் தஞ்சைப்பெருவுடையார் கோயில் ஒரு சிறந்த சான்று.

  4.2.2 ஓவியக் கலை

  தொல் பழங்காலம் முதலே மனிதன் தன் உள்ளத்தில் எழுந்த அழகு உணர்ச்சியைப் புறத்தே வடிவ அமைப்பில் காட்ட முயன்றான். அதன் வெளிப்பாடே ஓவியக்கலை.

  குகைகளில் வாழ்ந்து வந்த கற்கருவிக் கால மனிதனும், குகைகளின் சுவர்களிலும், கூரைகளிலும் தான் கண்ட விலங்குகளையும், தன்னுடன் வாழ்ந்த மக்களையும், தனக்குக் கிடைத்த செம்மண்ணையும், கரியையும் குழைத்து ஓவியங்கள் வரைந்து, தன் கலை ஆர்வத்தைக் காட்டினான். மனிதனின் அழகு உணர்ச்சியையும், உள்ள நெகிழ்ச்சியையும் ஊற்றாகக் கொண்டு தோன்றிய ஓவியம் தமிழர்களின் பண்பாட்டைப் புலப்படுத்துவதற்குரிய அடிப்படைகளில் ஒன்று.

 • ஓவியக் கலையும் தமிழர் பண்பாடும்
 • போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக, கல்லில் அவர்களது உருவத்தினைச் செதுக்கி அவர்களது பெயரும், புகழும் பொறித்து நடுகல் நட்டு வழிபாடு செய்யும் வழக்கம் தமிழர்களிடம் இருந்தது. அவ்வாறு கற்களிலே வீரர்களின் உருவங்களைச் செதுக்குவதற்கு முன்னர், கல் தச்சர், தாங்கள் செதுக்க விரும்பும் உருவத்தை முதலில் வரைந்து பார்ப்பர். பின்பு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் செதுக்கிக் கல்லில் உருவம் அமைப்பார்கள். இதிலிருந்து ஓவியக் கலை உணர்வு தமிழர்களுக்கு இருந்திருக்கிறது என்பது பெறப்படும். மேலும், மகளிரும், ஆடவரும் தங்கள் தோள்களிலும், மார்புகளிலும் சந்தனக் குழம்பினால் மான், மயில், வல்லிக்கொடி முதலிய ஓவியங்களை வரைந்தனர் என்பது தொல்காப்பியத்தின் முலம் அறிய முடிகிறது.

 • மடலேறுதல்

 • அகப்பொருள் துறையில் ஒன்று மடலேறுதல். தலைவி மீது காதல் கொண்டுள்ள தலைவன், தன் காதலை ஊரார்க்கு வெளிப்படுத்த பனைக் கருக்கால் (மடலால்) குதிரை ஒன்று செய்து, அதன்மேல் அமர்ந்து தலைவியின் ஊரின் வீதிகளில் உலாவருவான். அப்பொழுது தன் கையில், தான் விரும்பும் தலைவியின் உருவத்தை ஓவியமாக வரைந்து, ஊரார் அறிய "இவளைத்தான் நான் விரும்புகிறேன்" என்று காட்டிக் கொண்டே வருவான். ஓவியத்தில் இருக்கும் உருவத்தைக் கொண்டு, அந்தப் பெண் யார் என்பதை அடையாளங்கண்டு கொள்வர். அந்த அளவுக்கு உருவ ஒற்றுமையுடன் அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும். அது ஓர் உருவத்தைப் பார்த்த உடனே ஓவியமாக வரையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

  தலைவி மீது தனது காதலை வெளிப்படுத்த தலைவியின் உருவம் பொருந்திய ஓவியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறான் தலைவன். இது பண்டைத் தமிழ் மக்கள், முருகியல் உணர்வுக்கும் அதன் வெளிப்பாடான ஓவியத்திற்கும், காதலரிடையே உள்ள காதல் வெளிப்பாட்டிற்கும் கொடுத்த சிறப்பைப் புலப்படுத்தும்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1. தலைவனைக் காண விரும்பும் தலைவியின் நிலை எவ்வாறு உள்ளது?

  2. இந்தியச் சிந்தனைகளிலே மிகவும் புரட்சிகரமான சிந்தனையாக இந்தப் பாடத்தில் எது சுட்டப்படுகிறது?

  3. இந்த உலகம் இயங்குவதற்குக் கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி என்ன காரணம் கூறுகிறார்?

  4. தமிழர் கட்டடக் கலைக்குச் சிகரமாகத் திகழும் பண்டைய கோயில் எது?