4.5 நாணயங்கள்

c03110ad.gif (1294 bytes)

பண்பாட்டுக் கூறுகளை அறிவதற்குக் கல்வெட்டுகள் எவ்வாறு ஒரு மூலமாக அமைந்துள்ளதோ, அதைப்போல, நாணயங்களும் அமைந்துள்ளன.

கூடி வாழத் தொடங்கிய மனிதன், கொடுக்கல் வாங்கலைப் பண்டமாற்றுதலிலேதான் தொடங்கினான். பின்னர் பொருட்களின் பெறுமதியைக் குறிக்கும் மையப் பொருட்களாகச் சோழிகள், குன்றிமணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினான்; பிற்காலத்தில், பொருட்களின் பெறுமதியைத் தகுந்த முறையில் ஈடு செய்யும் சாதனங்களாக நாணயங்கள் உருவாக்கப்பட்டன. நாணயங்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படுகின்றன.

 • நாணயங்கள் வெளிப்படுத்தும் செய்திகள்

 • நாணயங்களின் அமைப்பு, பயன்படுத்திய உலோகங்கள், அடையாளங்கள், குறியீடுகள், எண்கள் முதலியன அக்கால மக்களின் இயல்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இவை பயன்படுத்தப்பட்ட இடங்கள் குறிப்பிட்ட காலத்து அரசியல், வாணிபம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவனவாகவும் திகழ்கின்றன.

  4.5.1 சோழர் கால நாணயங்கள்

  சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில், அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது. காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது. காசின் வடிவம் நீள்சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது. எனவே இந்தச் செப்புக்காசு வார்ப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் காசில் வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து உள்ளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

  4.5.2 பாண்டியர் நாணயங்கள்

  முதன் முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள். இதைத் தொடர்ந்து செப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயம் சதுர வடிவமானது. முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை காணப்படுகிறது. இதன் தலையின் கீழ் ஆமைகள் இரு தொட்டிகளில் உள்ளன. பின்பக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் உள்ளது. தமிழ் - பிராமி வரி வடிவடிவத்தில் பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

  இதில் காணப்படும் ஆமை, வேள்வியோடு தொடர்புடையது. இது பாண்டியர் வேள்வி மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது. இதைப்போல, நாணயத்தில் இடம் பெற்ற அடையாளங்களைக் கொண்டு, அக்கால மக்களின் நம்பிக்கை, அரசர்களின் இயல்புகள் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை அறிய இயலும்.

  4.5.3 உரோமானிய நாணயங்கள்

  தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன.

  சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

  எடுத்துக்காட்டாக, உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது. இது ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற தமிழர்களின் குறிக்கோளுக்கு ஏற்ப, கடல் கடந்தும் பிற அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்ட வணிகத் தொடர்பைப் புலப்படுத்துகிறது.

  இத்தகைய தொடர்பால், கருத்துப் பரிமாற்றங்களும், பண்ட மாற்றங்களும், பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது.