மன்னர்களின் ஆணை, ஊர் மன்றச் செயல்கள், புலவர்
 பாடல்கள் போன்றவை துவக்கத்தில் ஓலைகளில் எழுதப்பெற்றன.
 பின்னர்
 அழியக்கூடிய ஓலையிலிருந்து அழியாத் தன்மை உடைய
 செப்பேடுகளில்  செய்திகள்
 பொறிக்கப்பட்டன. இதில்
 திருத்தி அமைக்கும் வாய்ப்பு இருந்தது. உலோகத் தகடுகளால்
 ஆகிய செப்பேடுகளும் மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட
 போர்களினால் அழிந்தன. எனவே வன்மைப் பொருளாகிய
 கல்லில், அரசர்களின் ஆணைகள், ஆட்சி முறை, போர்கள்,
 பண்பு நலன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தனர். அவையே
 பிற்காலத்தில்
 மெய்க்கீர்த்தி என அழைக்கப்பட்டன.
 
 
 
  
 
  மன்னர்களைப் பற்றிய உண்மையான (மெய்) செய்திகளை,
 குறிப்பாக அவர்கள் புகழைப் புகழ்ந்து கூறுவதால் அதை
 மெய்க்கீர்த்தி என அழைத்தனர்.
 
 
 
  
 
  (மெய் = உண்மை, கீர்த்தி
 = புகழ்)
 
 
 
  
 
  முதலாம் இராசேந்திரனின் மகன்
 இராசாதிராசனைப் பற்றிய
 மெய்க்கீர்த்தி
 கீழ்க்குறிப்பிடுமாறு கூறுகிறது. 
 
 
 
 வீரமே துணையாகவும்
  
 தியாகமே அணியாகவும்
  
 கொண்ட மாமன்னன் | 
   | 
  
  
  
  இம்மெய்க்கீர்த்தி, இராசாதிராச மன்னன், சிறந்த
 வீரனாய்த் திகழ்ந்தான் என்பதையும், மக்களின் நலத்திற்காக
 எத்தகைய
 தியாகத்தைச் செய்வதற்கும் துணிந்தவன் என்பதையும்
 வெளிப்படுத்துகிறது.
 
   இதிலிருந்து என்ன புலப்படுகிறது? மன்னன், மக்களைப்
 பகைவரிடம் இருந்து காப்பாற்றும் ஆற்றல் மிகு வீரனாகவும்,
 மக்களின் நலத்திற்காக, எதையும் தியாகம்
 செய்யும் மனப்பக்குவம்
 பெற்றவனாகவும் இருந்திருக்கிறான் என்பது புலப்படுகிறது.
 அத்தகையோரை மக்கள் விரும்பினார்கள் என்பதுவும்,
 அத்தகையோரைப் பற்றியே மெய்க்கீர்த்திகள் எழுதினார்கள்
 என்பதுவும்
 தெரிகிறது. இவ்வாறு மெய்க்கீர்த்திகளும், பண்பாட்டுக்
 கூறுகளை அறிவதற்குரிய வரலாற்றுச் சான்றுகளாகத்
 
 திகழ்கின்றன.  |