6.4 சில பண்பாட்டு நிகழ்வுகள் (அகம்)

பழங்காலத் தமிழக வரலாற்றில் சுவைமிக்க நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. பெருமையும் மகிழ்ச்சியும் அடையத்தக்க நிகழ்ச்சிகளும், தமிழர் பண்பாட்டிற்கு விளக்கம் என்று கூறத்தக்கனவும் அக்காலத்தில் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பகுதியில் காணலாம்.

6.4.1 ஆதிமந்தி

ஆதிமந்தி என்பவள் கரிகாற்சோழனின் மகள். இவளுடைய கணவன் ஆட்டனத்தி என்பவன் சேர இளவரசன். ஆட்டனத்தி ஆடற்கலையில் வல்லவன். ஒருமுறை சோழன் கழாஅர் என்னும் காவிரி ஆற்றுத் துறையில் ஒரு நீர்விழாக் கொண்டாடினான். வெள்ளம் பரந்து வந்த காவிரியில் ஆட்டனத்தி குளித்து நீந்துகையில் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டான். ஆதிமந்தி அழுது புலம்பினாள். காவிரியாற்றின் கரையில் தொடர்ந்து ஓடிக் கணவனைத் தேடினாள். மருதி என்ற மீனவனின் மகள் வெள்ளத்தில் மூழ்கிய ஆட்டனத்தியை நாகைப்பட்டினத்துக் கடற்கரையில் மீட்டுக் கொண்டு வந்தாள். ஆதிமந்தி கணவனை மீண்டும் பெற்றதனால் கற்புக்கரசி என்று போற்றப்பட்டாள். இந்த வரலாற்று நிகழ்ச்சியைப் பாரதிதாசன் உட்படப் பலர் சுவையான நாடகமாகவும் காப்பியமாகவும் வடித்துள்ளனர்.

6.4.2 தரையில் விழுந்த பூ

தலைவன் ஒருவன் தான் காதல் கொண்ட தலைவியிடம் ஒரு முல்லைச் சரத்தைக் கொடுத்தான். வெளியில் தெரியுமாறு அதனைச் சூடிக்கொள்ள முடியுமா? யார் கொடுத்த பூ என்று கேட்க மாட்டார்களா? எனவே கூந்தலில் உள்ளே அந்த மலர்ச்சரத்தை வைத்து முடித்துக் கொண்டாள். இவ்வாறு மலரை முடிந்ததை மறந்து விட்டாள். வளர்ப்புத்தாய் கூந்தலை ஒப்பனை செய்ய மறுநாள் அழைத்தபோது அவள் முன் போய் உட்கார்ந்தாள். தாய் கூந்தலை அவிழ்த்து விட்டவுடன் அவள்முன் அப்பூ விழுந்தது. யார் கொடுத்தது இப்பூ என்று தாய் திடுக்கிட்டு எழுந்தாள். தோழியின் வழியாகக் காதலர் உறவு வெளியாயிற்று. திருமணத்திற்கு ஒத்துக்கொண்டு பெற்றோர் மண ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு மலர்ச்சரம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது பார்த்தீர்களா? தமிழர்களின் அகவாழ்க்கையில் காதல் பெறும் சிறப்பு இது போன்ற பல நிகழ்ச்சிகளின் மூலம் சங்ககால அக இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

6.4.3 விக்கலுக்குத் தண்ணீர்

தாயும் மகளும் வீட்டில் இருந்தார்கள். மகளோடு சிறுவயதில் முன்பு தெருவில் விளையாடும் ஒருவன் இப்போது இளைஞனாய் வளர்ந்திருக்கிறான். அவன் இவர்களின் உறவுமுறைக்காரனும் ஆவான். அவன் இப்பெண்கள் இருக்கும் வீட்டிற்கு வந்தான். திண்ணையிலிருந்து கொண்டு வீட்டில் இருப்போரே! குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டான். தாயும் தன் மகளைப் பார்த்து அவனுக்குத் தண்ணீர் கொடுத்துவா என்றாள். தண்ணீர் எடுத்துச் சென்று இளைஞனிடம் அப்பெண் கொடுக்கும்போது அவன் அவள் கையைப் பற்றினான். அவள் உடனே அம்மா இவன் செய்ததைப் பார்த்தீர்களா? என்று அலறினாள். தாய் உடனே என்ன செய்தி என்று கேட்டு விரைந்து வந்தாள். இப்போது அன்புடைய அத்தலைவனைக் காட்டிக் கொடுக்கத் தலைவி விரும்பவில்லை. ஏனென்றால் அவன்மீது அவளுக்கும் காதல் இருந்தது. எனவே ஒன்றுமில்லையம்மா! தண்ணீர் குடித்தவுடன் இவனுக்கு விக்கல் வந்துவிட்டது என்றாள். தாய் உடனே அவன் முதுகைத் தடவி விக்கல் நீக்க முயன்றாள். அவனோ திருட்டுத்தனமாகத் தலைவியைப் பார்த்துச் சிரித்தான். அருமையான இந்தக் காதல் நாடகத்தில் தமிழர் பண்பாடு விளக்கமாகத் தெரியும்.